Search This Blog

Showing posts with label SIVAVAAKKIYAM-சிவவாக்கியம். Show all posts
Showing posts with label SIVAVAAKKIYAM-சிவவாக்கியம். Show all posts

Jan 26, 2012

சிவவாக்கியம் (546-550) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (546-550)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -546

கல்லு வெள்ளி செம்பிரும்பு கைச்சிடும் தராக்களில்
வல்ல தேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடின்
தொல்லையற்றிடப் பெருஞ் சுகம் தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை.

            
கல்லிலும், வெள்ளி, செம்பு, இரும்பு என்று காய்ச்சிடும் தராக்களிலும் வல்லமையுள்ள தெய்வ உருவங்களை பலவித பேதங்களில் அமைத்து அங்கு போற்றி வழிப்பட்டாலும் தொல்லையற்று இருக்க முடியமா? அது உண்மையில் பெருஞ்சுகமாகிய இறை இன்பத்தை தருமோ சொல்லுங்கள். உங்களில் உள்ள சோதியில்தான் மெய்யின்பம் பெற முடியுமேயன்றி வேறு வகைகளில் போற்றுவதனால் இல்லையென்று ஈசன் மீது ஆணையிட்டு சொல்கின்றேன். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -547
இச்சகஞ் சனித்ததுவும் ஈசனைந் தெழுத்திலே
மெச்சவுஞ் சராசரங்கள் மேவுமைந்தேழுத்திலே
உச்சிதப் பல உயிர்கள் ஒங்கலஞ் செழுத்திலே
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்குமைந்தெழுத்திலே.

இந்த உலகம் தோன்றியது ஈசனுடைய நமசிவய என்ற அஞ்செழுத்தாலே, அனைத்து மேலான சராசரங்கள் யாவிலும் மேவியிருப்பது ஐந்தெழுத்தே. சத்தியமான மெய்ஞ்ஞானப் போதப்பொருளாக நிற்பதும் ஐந்தெழுத்தே. ஆனதால் ஐந்தெழுத்தை ஓதி ஐந்தெழுத்தின் உண்மைகளையும் பஞ்சபூத தன்மைகளையும் உணர்ந்து, ஐந்தெழுத்தே பஞ்சாட்சரமாகிய மெய்ப் பொருளாக இருப்பதை இருந்து அதையே நோக்கி தியானித்து ஈசன் அருள் பெறுங்கள்.  
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -548
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்துத் தாங்குருடாவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்காள்
பாத்திர மறிந்து மோன பத்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தராவர் அங்
னே.

      .                         
சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அதன்படியே நடந்து வந்தும் மெய்யறிவை அறியாமல் தாங்கள் குருடாகி இருளிலேயே இருக்கின்றீர்கள். கண்கள் கெட்டுப் போகும்படி உச்சி வெயிலில் சூரியனை நேராகப் பார்த்து மந்திரங்களை ஓதி துதி செய்யும் முட்டாள்களே! பக்குவப்பட்டு பாத்திரமாக இருக்கும் உயிரை அறிந்து, அதுவே மோனம் என்ற மெய்ப் பொருள் என்பதை உணர்ந்து, அதையே ஈசன் திருவடி எனப் பற்றி பக்தியுடன் தியானம் செய்ய வல்லவர் ஆனால், சாஸ்திரங்களின் சூத்திரப்படி, அதைத் தெரிந்தவர்கள் யாவரும் சுத்த ஞானியாக ஞானியாக ஆவார்கள். .      
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 549
மன உறுதி தான் இலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினமும் ஊரெங்குஞ் சுற்றித் திண்டிக்கே அலைபவர்
இளமதிற் பலர்கள் வையும் இன்பற்ற பாவிகாள்.

தன்னிடம் மனதில் திட நம்பிக்கையுடன் இறைவனை எண்ணி தியானம் செய்ய வேண்டும். மனதில் உறுதியில்லாத மடமந்தை கொண்ட மாடுக்களைப் போன்று வாழ்ந்து கொண்டு பிணமாகப் போகும் மனிதர்களே! கோபம் அடைவார்கள். பிறர் பொருளை ஏமாற்றி சேகரித்து வைத்து யாருக்கும் சொல்லாமல் எதற்கும் பயனின்றி இறந்து போவார்கள். தினந்தோறும் ஊரெல்லாம் சுற்றி சோற்றுக்கு அலைபவர்கள் மெய்யின்பத்தை அறியா பாவிகள். இவர்களை வருங்காலம் தூற்றும் ஆதலால் இளமையிலேயே உண்மையை உணர்ந்து மனத்தில் உறுதியுடன் செத்தாலும் வைத்த அடி மாறாத திடநம்பிக்கையுடன் ஈசனைத் தியானித்திடுங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 550
சிவாய வசியென்னவுஞ் செபிக்க இச்சகமெலாம்
சிவாய வசியென்னவுஞ் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாய வசியென்னவுஞ் செபிக்க வானமாளலாம்
சிவாய வசியென்பதே இருதலைத் தீயாகுமே. 


சிவாய வசி என்று ஓதி செபிக்க இந்த சகம் எல்லாம் நம் வசம் ஆகுமே. சிவாயவசி என்று எண்ணி மனதிலேயே செபித்து தியானிக்க யாவும் சித்தியாகுமே. சிவாய வசி என வாசியேற்றி செபிக்க ஆகாயதலத்தில் ஆண்டவனைச் சேர்ந்து தேவர்களாகி வானம் ஆளலாம். சிவாய வசி என்பது இருதலைத் தீயாகி அதுவே சோதியான ஈசன் ஆகும்.
   
***************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன், கண்டு படித்து இன்புற்ற அன்பு நண்பர்களே!!! இத்துடன் சிவவாக்கியரின் பாடல் பதிவு முற்றுப் பெற்றது. இப்பாடல் பதிவுகளை (கிரமமாக- இணைப்புக்களுடன் தொகுத்து இறுதிப் பதிவு நாளை வெளியிடப்படும்) வேண்டும் அன்பர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளவும். http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

சிவவாக்கியம் (541-545) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (541-545)

 சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -541

நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று
ஊரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினிற் உனக்கு ஞான சித்தி செய்வேன் பாரென
நேரினிற் பிறர் பொருளை நீளவுங் கைப்பற்றுவர்.        
           

நீர்மேல் நிற்கும் குமிழியைப் போன்றது நிலையில்லாத உடம்பு இது என்று ஞானம் பேசி, தாங்களே அவதாரமாக வந்த உ
ண்மையான குருவென்று ஊர் முழுவது பறையடித்து பிரச்சாரம் செய்து உண்மைப்பொருள் அறியாத உதாரியாய் திரியும் போலிக் குருவானவர் ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என அழைப்பு விடுத்து ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி அதற்கு நிகராக பிறர் பொருளை கட்டணம் என்று கட்டாயமாக வசூல் செய்து வாழ்நாள் முழுதும் நெடுக கைப்பற்றுவார்கள். இவர்களை கண்டு ஏமாறாதீர்கள். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -542
காவியுஞ் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலைய விட்டுத் தேசமெங்குஞ் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.

காவி ஆடை, சடாமுடி, கமண்டலம், மான் தோல் ஆசனம், கழுத்திலும் உடம்பிலும் உருத்திராட்சம் யோகத்தண்டு இவைகளைக் கொண்டு சாமியார் வேடம் போட்ட சோம்பேறி மாடுகளான மனிதர்கள், தங்கள் மனைவியை தவிக்கும்படி அலையவிட்டு விட்டு தேசமெங்கும் சுற்றி பிச்சை எடுப்பார்கள். அதனால் பாவியாகி சோற்றுக்காக வீடெல்லாம் சென்று அம்மா தாயே பசி என்று கேட்டு அலைவார்கள். 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -543
முத்தி சேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லி அங்கும் சாமி வேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ் நரகில் வீழ்வரே. 
                       
ஜீவன் முக்தி அடைவதற்குள்ள சித்தியை இங்கு முன்னதாக உடனே நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் சொல்லி சாமி வேடம் பூண்டவர், நித்தியம் தன் வயிறு வளர்க்க பல நீதிக் கதைகளையும் சொல்லி ஞானப் பொருளறியாமல் ஞானம் பேசிப் பேசியே குருபக்தியை எடுத்துரைத்து பணத்தை பறிப்பார்கள். யோக ஞானத்தை விலை வைத்து விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.     
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 544
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில் பாதகுறடு செய்தழிக்
கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

செம்மை மிகுந்த பழமையான மரத்தில் சிலைகளையும் தலைகளையும் செய்து வணங்குகின்றீர்கள். கொம்பில்லாத அம்மரக்கிளையில் பாதக் குறடுகள் செய்து காலில் போட்டு அழிக்கிறீர்கள். கையெடுத்து வணங்கியதும் காலில் போட்டு மிதித்ததும் ஒரே மரத்தில் ஆனது தானே. உங்களுக்குள்ளே சோதியாக விளங்கும் ஈசனை அறிந்து அவனையே நாடியிருந்து நோக்கி தியானிக்க வல்லவரானால் இம்மலமான உடம்பில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் எக்குற்றங்களும் இல்லாது மனத்தூய்மை பெறுவீர்கள். மாசற்ற மனதில் ஈசன் வாழ்வான்.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 545
எத்திசை எங்கெங்குமோடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலை முழுகச் சுத்த ஞானி யாவரோ
பக்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தியின்றிப் பாழ் நரகில் மூழ்கி நொந்தலைவரே.  

எல்லாத் திசைகளுக்கும் சென்று எங்கெங்கும் ஓடி சுற்றி வந்தாலும் எண்ணற்ற புண்ணிய நதிகளில் தலை முழுகுவதாலும் சுத்த ஞானியாக ஆக முடியுமோ! மெய்பக்தியோடு மெய்ப்பொருளை அறிந்து அரன்பதம் பணிந்திடாத பாவிகளே! மெய்ப்பொருளை அறிந்து தவம் செய்து உணர்ந்தால் தான் சுத்த ஞானி ஆக முடியும். இதைவிடுத்து அலைவதால் முக்தி கிடைக்காது. பாழும் நரகத்தில்தான் மூழ்கி நொந்து போவீர்கள். ஆதலால் மெய்ப்பொருளை அறிந்து தியானியுங்கள்.              

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

சிவவாக்கியம் (536-540) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (536-540)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -536

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேம நிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பதுண்மையே.      
           

பூசைகளைப்போட்டு நேம நிட்டைகளோடு மற்றவர் பார்த்து வியப்படைய பூரித்து நடிக்கும் பாதகர்கள் ஆசை கொண்டு அனுதினமும் அன்னியர் பொருள்களை அபகரித்து மோசம் செய்வதற்கே முற்றிலும் அலைகின்றனர். அவர்களுக்கு இவ்வுலகில் ஏமாற்றுவதால் பொருளோடு வாழ்ந்திருந்தாலும், அதனால் இக்காசியினில் ஏழு பிறப்பும் நரகம் காத்திருப்பது உண்மையாகும். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -537
நேசமுற்று பூசை சித்து நீறு பூசிச் சந்தானம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய் புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி கலம்புரண்ட வெண்ணீராகும் மேனியே.

ஈசன் மீது மிகவும் அன்புற்று இருப்பது போல் நடித்துக் கொண்டு அன்றாடம் பூசைகள் செய்து உடல் நிறைய விபூதியை தரித்து வாசமுடைய சந்தனத்தை உடம்பு முழுதும் அணிந்து கொண்டு நெற்றியில் அஞ்சன மையினால் கறுப்புத் திலகமிட்டு மற்றவர் மதிக்க பெரிய பக்தராக வேடமிட்டு மோசம் பொய் புனைசுருட்டு போன்ற அத்தனை திருட்டுத் தனங்களையும் செய்து வாழ்ந்து வரும் மூடர்களே! அதனால் வரும் வினை என்ன தெரியுமா?  போர்க்களத்தில் வெட்டுப்பட்டு ரண வேதனையால் புரளும் குதிரையைப் போல் உங்கள் உடம்பில் ரண வேதனைகள் உண்டாகி கொதிக்கும் வெந்நீரைப் போல் மேனி கொதித்து துன்பத்தில் உழல்வீர் எச்சரிக்கை.
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -538
வாதஞ்செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவேனச்
சாதனை செயதெத்திச் சொத்துத் தந்ததைக் கவர்ந்துமே
காத தூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.  
                       
நான் இரும்பைச் தங்கமாக்கும் வாதவித்தை செய்வேன் வெள்ளியும் பொன்னும் பத்தரை மாற்று தங்கமும் செய்ய சாகாத வேகாத போகாத குருமருந்து செய்ய வேண்டும். அந்த குரு செய்து முடிக்க ஒரு மண்டல காலம் ஆகும். அதற்கு வேண்டிய பொன்னும் பணமும் தாருங்கள். உங்களை இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரனாக மாற்றுவேன் என ஆசை காட்டி எத்தாகப் பேசி ஏமாற்றி வாக்கிய சொத்துக்களை கவர்ந்து கொண்டு வெகுதூரம் ஓடிவிடுவார்கள். அவர்களைத் திரும்பவும் காண்பதென்பது அருமையே. ஆதலால் இம்மாதிரியான போலி சித்தர்களை நம்பி ஆசையில் அகப்பட்டு ஏமாறாதீர்.      
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 539
யோக சாடை காட்டுவார் உயரவும் மெழும்புவார்
வேகமாக அட்ட சி
த்து வித்தை கற்று நெட்டுவார்
மோகங் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப் பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே. 

மற்றவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என்று யோக சாடைகளை செய்து காட்டுவார்கள். தரையிலிருந்து உயரவும் எழுவார். வெகு வேகமாக சித்து விளையாட்டுக்களை கற்று அதனைச் செய்து வித்தைக் காட்டி வியப்படையச் செய்வார். இதனால் மாயையில் அகப்பட்டு காம ஆசையினால் மோகங் கொண்டு பெண்களில் சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்வார். அதன் பின் உண்மையான யோக ஞானத்தை இழந்து பெண்ணாசையால் பேய் பிடித்தவர் போல அலைந்து இப்பேருலகில் சாவார்கள். ஆகையால் சித்து வித்தைகளை விட்டு அவைகளில் நாட்டமில்லாது மெய்ஞானத்தில் நில்லுங்கள்.         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 540
காய காய முன்பதாகக் கண்டவர் மதித்திட
மாய வித்தை செய்வதெங்கு மடிப்பு மோசஞ் செய்பவர்
நேயமாக்கஞ் சாவடித்து நேரபிணியைத் தின்பதால்
நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே       
     

காயகற்பம் உண்டு கல்ப தேகம் பெற்றதாக, கண்டவர்கள் மதிக்கும்படி சொல்லிக் கொள்வார்கள். கற்பத்தினால் மற்றவர் கண்களில் படாது மாயமாய் மறையலாம், ககன மார்க்கத்தில் எங்கும் பறந்து செல்லலாம் என்று ஜாலமாகிப் பேசி மோசமான காரியங்கள் செய்வார்கள். அன்பு மார்க்கத்தை சாகடித்து விட்டு எந்நேரமும் அபினியை காயகற்பம் என்று தின்பார்கள். அதனால் பைத்தியம் பிடித்து நாயைப் போல சாக்கடை நீர நக்கி குடித்து நாட்டில் அலைவார்கள்.            

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

சிவவாக்கியம் (531-535) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (531-535)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -531
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறைந்த போது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல்
வேந்தனாகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணலென்றுங் குறிக்கொனாதி துண்மையே.
 
மனிதர் வாழ்வு இப்பூமியில்தான், உயிர் மறைந்தபோது ஆவியாகச் சேர்வது ஆகாயத்தில்தான். ஆகையால் பஞ்ச பூதங்களையும் உணர்ந்து நம் உயிர் உள்ள இடத்தை உடம்பிலேயே அறிந்து கொண்டு அதை யோக ஞான சாதகங்களினால் சரியான பாதையில் நடத்தி ஞானத்தில் வல்லவராக மாறுங்கள். கோன் என்ற அரசனாக உங்கள் உடம்பில் மன்றுள் ஆடும் விமலன் ஆனா ஈசன் பாதம் கண்டு அதையே பற்றி நில்லுங்கள். கருங்கூந்தலை உடைய அம்மையும் கோனாகிய இடம் ஒன்றிலேயே இணைந்து இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அத்திருவடியையே குறித்து நோக்கி தியானித்திருங்கள். மரணத்தை வென்று ஈசன் திருவடியை சேர்ந்து இறவா நிலை பெறலாம் இது உண்மையே.       
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -532
சருகருந்தி நீர்குடித்துச் சாரல் வாழ் தவசிகள்
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
வருவிரு
ந்தோடு உண்டுடுத்தி வளர் மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

ஞானம் அடையவேண்டி வீட்டைத் துறந்து காட்டிற்கு சென்று தவம் செய்பவர்களுக்கும் பசி வருத்த வரும். அதனால் காட்டில் உள்ள இலைசருகுகளை அருந்தி அருவி நீரை அள்ளிக்குடித்து மலைசாரல்களில் வாழ்ந்து வரும் தவசிகளே! அந்த சருகுகளை மட்டுமே உண்டு வந்தால் தேகத்தில் உள்ள திசுக்களின் செயலிழந்து உடல் சுருங்கி மன சஞ்சலங்கள்தான் உண்டாகும். மனம் அடங்காது போனால் ஞானம் பெறுவது எவ்வாறு?  அவனை அடைவதே இலட்சியமாய் அனைத்தையும் துறந்து வரும் தவசிகள் பலரும் தவத்தை மறந்து பசியினால் பிச்சைக்கார சாமியார்களாக அலைவதைக் கண்டுணருங்கள். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்து உழைத்து உண்டு நல்ல உடைகள் உடுத்தி எல்லாம் சிவன் செயலே என எண்ணி உங்கள் வீட்டிலேயே இல்லறத்தோடிருந்து சகல செல்வ யோகம் ஞானம் மிக்க வாழ்வில் அன்பே சிவமாய் தியானித்து சுகமாய் இருந்து வாருங்கள். ஈசனே உங்களைத் தேடி விருந்தாக வருவான். உங்களுக்கு வேண்டியதை வழங்கி நல வாழ்வைத் தருவான். இது சிவாயம் ஆன உண்மையே.     
 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -533
காடு மேடு குன்று பள்ளம் கானினாற சுற்றியும்
நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ
கூடுவிட்டகன்று உன் ஆவி கூத்தனூர்க்கே
நோக்கலால்
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பார் இல்லையே. 
 
                       
ஈசனைத் தேடி காடு மேடு குன்று பள்ளம் என்று பாத யாத்திரைகள் செய்து நாடு தேசம் விட்டு தேசம் சுற்றி அலைபவர்கள் நாதன் பாதம் காண்பாரோ!! உங்கள் உடம்பை விட்டு அகன்று உங்கள் உயிர் ஆவியாகி எமனூர்க்குத் தான் போகும். இருந்த இடத்திலிருந்தே உங்களுக்குள் உள்ள மெய்ப் பொருளையே நோக்கித் தவமிருந்து பிறவியின் வீடு பேற்றைப் பெற்று அரன் பாதத்தை பற்றி தியானித்திருப்பவர் இல்லையே.          
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 534
கட்டையா
ற் செய் தேவரும் கல்லினாற் செய்தேவரும்
மட்டையா
ற் செய் தேவரும் மஞ்சளாற் செய்தேவரும்
சட்டையா
ற் செய் தேவரும் சானியாற் செய்தேவரும்
வெட்டவெளி யதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே.     

மரக்கட்டையால் செய்த தெய்வச் சிலைகளும், கருங்கல்லினால் செய்த தெய்வச் சிலைகளும், தென்னை மட்டையால் செய்த தேவரும், மஞ்சளால் செய்து வைத்த பிள்ளையாரும், சட்டைத் துணியால் செய்யும் தேவரும், பசுஞ்சாணியால் செய்த தேவரும், வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளையே காட்டும். நமக்குள் வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளை அன்றி மற்ற வேறு தெய்வம் ஏதும் இல்லையே.       

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 535
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப் பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்தும் ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்க சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குல தெய்வம் உங்களைக் குலைப்ப துண்மையே.
                 
தங்களுடைய உடம்பு நோயுற்றால் அதிலிருந்து மீள்வதற்கு தங்கள் தெய்வமான பிடாரி கோயிலில் பொங்கல் வைத்து ஆடு கோழிகளைப் பலி கொடுத்து பூசைப் போடுகின்றீர்களே! அதனால் பிணி நீங்குகின்றதா? இதனால் எப்பயனுமின்றி உங்கள் உடம்பு மேலும் நலிவடைந்து ஒவ்வொரு நாளும் நோய் அதிகமாகி மூஞ்சூரைப்போல தேய்ந்து சுருங்கித் தானே போகின்றீகள். உங்களுக்குள் உள்ள தெய்வத்தை அறிந்து நோயை நீக்கும் வழியை உணர்ந்து கொள்ளாமல் இப்படி உங்கள் குல தெய்வங்களுக்குப் போடுகின்ற பூசைகள் உங்களை உருக்குலைத்து அழிப்பதுதான் உண்மை.
             

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 

சிவவாக்கியம் (526-530) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (526-530)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -526
சுட்டெரித்த சாந்து பூசும் சுந்தரப் பெண் மதிமுகத்
திட்ட நெட்டெழுத்தறியா தேங்கி நோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்ட மறியிரே
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கு ஏது காண். 
    
           
சுட்டெரிக்கும் நெருப்பான பொட்டாக இருக்கும் சுந்தரப் பெண்ணான வாலை நம் அகத்தில் அறிவாகவும் முகத்தில் அழகாக இருப்பதையும், அதில் ஓர் எழுத்தாக உள்ள தலையெழுத்தை அறியாமலும், அதிலயே ஏங்கி அதையே நோக்கி தவம் புரியும் வழியை உணராமலும் இருக்கின்றீர்கள். பெட்டகம் போன்ற மூலாதாரத்தில் பாம்பினைப் போல் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியையும் அதனால் நம் தலை எழுத்தை மாற்றும் வல்லமை உள்ளதையும் அறியாமல் இருக்கின்றீர்களே! நீங்கள் உருவான போதே உங்கள் ஆயுள் கணக்கை கட்டவிழ்த்துப் பார்த்தால் என்ன செய்வீர்கள். உங்களுக்குள் கதியாக இருக்கும் வாசியை உணர்ந்து வாலையை அறிந்து சோதியில் சேர்த்து தியானித்து மரணத்தை வென்று இறவா நிலை பெற முயற்சி செய்யுங்கள்.  
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -527
வேத மோது வேலையோ வீணதாகும் பாரிலே
காத காத தூரமொடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே
கோது பூசை வேதமோது குறித்துப் பாரும் உம்முளே.

வேதம் ஓதுவது சிறப்பானதுதான், ஆனால் அது ஒன்றை மட்டும் வேலையாக கொண்டு செய்து கொண்டிருப்பது வீணாகத்தான் போகும். இந்த பூமியெங்கும் பலகாத தூரங்கள் ஓடி ஓடி ஆசையினால் செய்யும் பூசைகள் இறைவனை அடைய முடியுமா? ஆதி மூலமாக நமக்குள்ளே வெண்ணை உண்ட கண்ணன் இருக்கும் பொது கோ பூசை செய்வது எதற்கு? வேதங்கள் நான்கும் சொல்லுகின்ற மெய்ப்பொருளை அறிந்து அதையே உங்களுக்குள் குறித்து நோக்கி தியானித்துப் பாருங்கள். அது இறைவனை காட்டி இறவா நிலைத் தரும். 
 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -528
பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம்
அறமிலாத பாவிகட்குப் பரமிலை யதுண்மையே
கரமிருந்தும் பொருளிருந்தும் அருளிலாது போதது
பரமிலாத சூன்யமாகும் பாழ் நரக மாகுமே.  
                       
பரம்பொருள் இல்லாத இடம் ஏதுமில்லை. நமக்குள் பரம்பொருள் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு தியானியுங்கள். அறம் சிறிதும் நெஞ்சில் இல்லாத பாவிகளுக்கு பரமன் இல்லை என்பதும் அதை அறியாமலே அழிவதும் உண்மையே. இறைவனை வணங்குவதற்கு கரங்கள் இருந்தும், அவனையே நினைத்து தியானம் செய்ய மெய்ப்பொருள் இருந்தும், கடவுள் இல்லை என்று சொல்லி அவனை வணங்காத் தன்மையினால் அவன் அருள் இல்லாத உயிர், பரம் பொருள் இல்லாத சூன்யமாகி, கண்களில் குருடு ஏற்பட்டு, பாழும் நரக வாழ்வில் உழல்வது உண்மையாக நடக்கும். ஆதலால் கடவுள் இல்லை என்று சொல்லி உங்கள் உயிர் இருக்கும்போது அதை உணராமல் பாழ் நரகில் விழாதீர்கள்.        
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 529
மாதர் தோள் சேராதவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.   

மாதரைச் சேர்ந்து பெண்ணால் வரும் சுகத்தை அறியாதவர் எவரும் இப்பூவுலகில் இல்லையே. நன் மங்கையரை மணந்து நன்மக்களைப் பெற்று வாழ்வதே மனிதர் வாழ்வு சிறப்படையும், சக்தியே உமதுடல், சிவனே உமதுயிர் என்பதை உணருங்கள். சக்தியும் சிவனும் இணைந்தே மனித வாழ்வு அமைந்துள்ளது. ஈசன் சக்திக்கு தன் உடம்பில் பாதியையும், நீலியான கங்கையை தன் தலையிலும் வைத்து மகிழ்ந்து கொண்டான் என்பதை அறிந்து கொண்டு மாதரை இம்மாநிலத்தில் மதித்து இருங்கள்.         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 530
சித்தரென்றும் சிறிய
ரென்றும் அறியொணாத சீவர்காள்
சித்தரிங்கு இருந்தபோது பித்தரென்றே எண்ணுவீர்
சித்தரிங்கு இருந்துமென்ன பித்தனாட்டிருப்பரே
அத்தநாடும் இந்த நாடு மவர்களுக்கு எலாம் ஒன்றே.         
     

இவர் பரந்த உள்ளம் கொண்ட சித்தரா அல்லது குறுகிய எண்ணம் கொண்டு வேடமிட்ட சிறியரா என்பதை அறிய முடியாத மனிதர்களே! சித்தர் இங்கு இருந்த போதும் அவரை பித்தம் பிடித்தவர் என்றே எண்ணுவீர்கள். சித்தர் இங்கிருந்தும் அவரை அறியாமல் பித்தன் என்று விரட்டும் பைத்தியக்கார உலகில் இருக்கும் மூடர்களே! அத்தன் ஈசன் ஆடும் சுடுகாடும், அவன் ஆலயம் கொண்டிருக்கும் இந்த நாடும், அவர்களுக்கு எல்லாம் ஒன்றே.
             

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 
 

Jan 25, 2012

சிவவாக்கியம் (521-525) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (521-525)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -521
நானுமல்ல நீயுமல்ல நாதனல்ல ஓதுவேன்
வானிலுள்ள சோதியல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்த போது நாடிக் காணலாகுமே
தான தான தத்தான நாதனான தானனா    
           
 
நான் என்பதும் இல்லை, நீ என்பதும் இல்லை, நாதன் பார்த்து என்பதும் இல்லை எல்லாம் பரம்பொருள் என்றே சொல்லுவேன். வானிலுள்ள சந்திர சூரிய ஒளியில் அல்ல நம்முள் உள்ள மெய்ப் பொருளே சோதி. வானாகிய யகாரமும் நீயாகிய சிகாரமும் ஒன்றாக ஒத்து சோதியாக நின்றதை உணர்ந்து அதையே நாடி ஒரே நினைவாக நின்று தியானித்து கண்டு கொள்ளுங்கள். தானாக நின்ற அதுவே வத்துவான பொருளானதாகி நாதனான ஈசனே தானாகி ஆடிக் கொண்டிருக்கிறான்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -522
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போது அது நல்லதாகி நின்று பின்
நல்லதல்ல கேட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடி நின்ற நாமம் சொல்ல வேண்டுமே.  

நல்லதும் அல்ல கெட்டதுமல்ல நம் நடுவில் நிற்பது மெய்ப் பொருள்தான். அந்த ஒன்றை அறிந்து உணர்ந்த பிறகு நல்லதே நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நல்லது தான் நடக்கும். நல்லதை எண்ணாமல் கெட்டதுதான் நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் கெடுதலே நடக்கும். அதலால் மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தவர்கள் அது நல்லதே தரும் என நாடி ஈசனை எண்ணி அவன் நாமத்தை சொல்லி தியானத்தில் இருக்க வேண்டும்.  
 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -523
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் கற்ற நடனமாடம் நம்பன் வாழ்க்கை ஏதடா
தாய்கள் பாலுதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.
                       
நமக்குள் நாய்கள் போல் சுற்றும் மனதிற்குள் நடனமாடும் நம் அப்பனான ஈசன் இல்லாது போய்விட்டால் நமக்கு வாழ்க்கை என்பது ஏது? இவ்வுடம்பிற்கு பிணம் என்று பேர் வைத்து பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் நாம் விரும்பாத சுடுகாட்டிற்குத் தான் கொண்டு செல்வார்கள். பெண்களை தாயாக பாவித்து அவர்களின் இளமையிலும், செழுமையிலும் ஏற்படும் காம இச்சையை தவிர்த்துவிட்டு அவனை தனக்குள்ளேயே நாடி யோக ஞானத்தால் தியானித்திருப்பவர்களுக்கு நோய்கள் பட்டு உழலும் துன்ப வாழ்க்கை ஏற்படாது. ஈசனையே நாடியிருந்து அவன் இருக்கும் இடத்தையே தியானம் செய்யுங்கள்.        
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 524
உப்பை நீக்கில் அழுகிப் போகும் ஊற்றையாகும் உடலில் நீ
அப்பியாசை கொண்டிருக்க லாகுமோ சொலறிவிலா
தப்பிலிப் பொய் மானங்கெட்ட தடியனாகும் மனமே கேள்
ஒப்பிலாச் செஞ்சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.       

உப்பான பொருள் நீங்கினால் உயிர் போய் அழுகி நாற்றமடித்து ஊத்தையாகும் உடம்பில் நீங்கள் அபிப்பிராயம் வைத்து ஆசை கொண்டு இருப்பதால் பயன் ஏதும் ஆகுமோ சொல்லுங்கள். அறிவில்லாமல் தப்பிலித் தனங்களை செய்து பொய் பேசும் மானங்கெட்ட தடியனாக திரியும் மனமே கேள். குரங்கு போல் தாவும் மனதை ஒருமுகப்படுத்தி ஒப்பிலாத ஒருவனாகிய செஞ்சடையனாகும் ஈசன் பாதம் மெய்ப் பொருளாக உண்மையில் உள்ளதை உணர்ந்து அந்த ஒன்றையே மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். அதன் பயனால் உயிரும் போகாது, உடம்பும் நாறாது, மரணமிலாப் பெரு வாழ்வில் வாழலாகும். ஈசன் பாதம் ஒன்றே உண்மை என்பதை உணருங்கள்.          

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 525
பிரப்பதேலாம் இறப்பதுண்டு பேதை மக்கள் தெரிகிலாது
இறப்பதில்லை யென மகிழ்ந்தே எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப் பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிரப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ வீசனே.       
     

இப்பூமியில் பிறப்பவை எல்லாம் ஒருநாள் இறந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளாமல் பேதை மனிதர்கள், நாமும் ஒரு நாள் இறந்து போவோம் என்பதை அறியாமல், இது என் சொத்து, அது உன் சொத்து என மகிழ்ந்து அது குறித்தே பேசிக் கொண்டு திரிவார்கள். அதனால் அவர்களின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியுமா? அவர்கள் இன்றிருக்கும் கோலம் என்றும் நிலைத்திடுமா? வயிறு நிரம்ப தின்று வளர்த்த இந்த உடம்பு அழிந்த போது அவையாவும் உங்களுடன் நேசமாகி கூட வருமா? ஈசன் ஒருவனே என்றும் நித்தியமானவன்.
             

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!