Search This Blog

Jan 26, 2012

சிவவாக்கியம் (526-530) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (526-530)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -526
சுட்டெரித்த சாந்து பூசும் சுந்தரப் பெண் மதிமுகத்
திட்ட நெட்டெழுத்தறியா தேங்கி நோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்ட மறியிரே
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கு ஏது காண். 
    
           
சுட்டெரிக்கும் நெருப்பான பொட்டாக இருக்கும் சுந்தரப் பெண்ணான வாலை நம் அகத்தில் அறிவாகவும் முகத்தில் அழகாக இருப்பதையும், அதில் ஓர் எழுத்தாக உள்ள தலையெழுத்தை அறியாமலும், அதிலயே ஏங்கி அதையே நோக்கி தவம் புரியும் வழியை உணராமலும் இருக்கின்றீர்கள். பெட்டகம் போன்ற மூலாதாரத்தில் பாம்பினைப் போல் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியையும் அதனால் நம் தலை எழுத்தை மாற்றும் வல்லமை உள்ளதையும் அறியாமல் இருக்கின்றீர்களே! நீங்கள் உருவான போதே உங்கள் ஆயுள் கணக்கை கட்டவிழ்த்துப் பார்த்தால் என்ன செய்வீர்கள். உங்களுக்குள் கதியாக இருக்கும் வாசியை உணர்ந்து வாலையை அறிந்து சோதியில் சேர்த்து தியானித்து மரணத்தை வென்று இறவா நிலை பெற முயற்சி செய்யுங்கள்.  
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -527
வேத மோது வேலையோ வீணதாகும் பாரிலே
காத காத தூரமொடிக் காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே
கோது பூசை வேதமோது குறித்துப் பாரும் உம்முளே.

வேதம் ஓதுவது சிறப்பானதுதான், ஆனால் அது ஒன்றை மட்டும் வேலையாக கொண்டு செய்து கொண்டிருப்பது வீணாகத்தான் போகும். இந்த பூமியெங்கும் பலகாத தூரங்கள் ஓடி ஓடி ஆசையினால் செய்யும் பூசைகள் இறைவனை அடைய முடியுமா? ஆதி மூலமாக நமக்குள்ளே வெண்ணை உண்ட கண்ணன் இருக்கும் பொது கோ பூசை செய்வது எதற்கு? வேதங்கள் நான்கும் சொல்லுகின்ற மெய்ப்பொருளை அறிந்து அதையே உங்களுக்குள் குறித்து நோக்கி தியானித்துப் பாருங்கள். அது இறைவனை காட்டி இறவா நிலைத் தரும். 
 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -528
பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம்
அறமிலாத பாவிகட்குப் பரமிலை யதுண்மையே
கரமிருந்தும் பொருளிருந்தும் அருளிலாது போதது
பரமிலாத சூன்யமாகும் பாழ் நரக மாகுமே.  
                       
பரம்பொருள் இல்லாத இடம் ஏதுமில்லை. நமக்குள் பரம்பொருள் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு தியானியுங்கள். அறம் சிறிதும் நெஞ்சில் இல்லாத பாவிகளுக்கு பரமன் இல்லை என்பதும் அதை அறியாமலே அழிவதும் உண்மையே. இறைவனை வணங்குவதற்கு கரங்கள் இருந்தும், அவனையே நினைத்து தியானம் செய்ய மெய்ப்பொருள் இருந்தும், கடவுள் இல்லை என்று சொல்லி அவனை வணங்காத் தன்மையினால் அவன் அருள் இல்லாத உயிர், பரம் பொருள் இல்லாத சூன்யமாகி, கண்களில் குருடு ஏற்பட்டு, பாழும் நரக வாழ்வில் உழல்வது உண்மையாக நடக்கும். ஆதலால் கடவுள் இல்லை என்று சொல்லி உங்கள் உயிர் இருக்கும்போது அதை உணராமல் பாழ் நரகில் விழாதீர்கள்.        
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 529
மாதர் தோள் சேராதவர் மாநிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே
மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.   

மாதரைச் சேர்ந்து பெண்ணால் வரும் சுகத்தை அறியாதவர் எவரும் இப்பூவுலகில் இல்லையே. நன் மங்கையரை மணந்து நன்மக்களைப் பெற்று வாழ்வதே மனிதர் வாழ்வு சிறப்படையும், சக்தியே உமதுடல், சிவனே உமதுயிர் என்பதை உணருங்கள். சக்தியும் சிவனும் இணைந்தே மனித வாழ்வு அமைந்துள்ளது. ஈசன் சக்திக்கு தன் உடம்பில் பாதியையும், நீலியான கங்கையை தன் தலையிலும் வைத்து மகிழ்ந்து கொண்டான் என்பதை அறிந்து கொண்டு மாதரை இம்மாநிலத்தில் மதித்து இருங்கள்.         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 530
சித்தரென்றும் சிறிய
ரென்றும் அறியொணாத சீவர்காள்
சித்தரிங்கு இருந்தபோது பித்தரென்றே எண்ணுவீர்
சித்தரிங்கு இருந்துமென்ன பித்தனாட்டிருப்பரே
அத்தநாடும் இந்த நாடு மவர்களுக்கு எலாம் ஒன்றே.         
     

இவர் பரந்த உள்ளம் கொண்ட சித்தரா அல்லது குறுகிய எண்ணம் கொண்டு வேடமிட்ட சிறியரா என்பதை அறிய முடியாத மனிதர்களே! சித்தர் இங்கு இருந்த போதும் அவரை பித்தம் பிடித்தவர் என்றே எண்ணுவீர்கள். சித்தர் இங்கிருந்தும் அவரை அறியாமல் பித்தன் என்று விரட்டும் பைத்தியக்கார உலகில் இருக்கும் மூடர்களே! அத்தன் ஈசன் ஆடும் சுடுகாடும், அவன் ஆலயம் கொண்டிருக்கும் இந்த நாடும், அவர்களுக்கு எல்லாம் ஒன்றே.
             

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!