Search This Blog

Showing posts with label KNOW-KEYEM DHARMAA. Show all posts
Showing posts with label KNOW-KEYEM DHARMAA. Show all posts

Jun 22, 2011

அறிமுகப் படலம் : கே எம் தருமலிங்கம் (Keyem Dharmalingam)

எனதருமை சகோதர சகோதரிகளே!!! என்னை கிருஷ்ணமூர்த்தி தர்மலிங்கம் என்றும், கிருஷ்ணா என்றும், மூர்த்தி என்றும், கே எம் தர்மலிங்கம் என்றும், கே எம் தருமா என்றும் கடந்த அறுபத்தி இரண்டு வருடங்களாக உருவகப்படுத்தி அழைத்து வருகின்றார்கள். கடந்த அறுபத்தி இரண்டு வருட காலங்களில் எனது உருவமும், உள்ளமும், அறிவும் சிறுகச் சிறுகச் செதுக்கப்பட்டு வந்துள்ளேன்.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்று மட்டுமே சொல்லிச் சென்றுள்ளனர் முன்னோர்கள். ஆனால் சொல்லாமல் சென்றது, 'யாம் பெற்ற துன்பம் பெறவேண்டாம் இவ்வையகம்' என்பதேயாகும்.

இன்பத்தின் சுவை அறிய வேண்டுமாயின், துன்பம் எப்படியிருக்கும் என்று அனுபவித்தால் தான் தெரியவரும். மேலும் வாழ்க்கையில் இவ்விரண்டுமே நமக்கு மிகுந்த அறிவையும், ஞானத்தையும் கொடுக்க வல்லது.
நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, இருதுருவங்களைப் போல, ஒன்றில்லாவிடில் மற்றது அறியப்படாதவையாக ஆகி விடுவதைப் போல, பகலை உணர இருளை அறிய வேண்டியுள்ளது, குளிர்ச்சியை அறிய வெப்பத்தை அறிய வேண்டி உள்ளது, நல்லவைகளை அறிய தீயவைகளை அறியவேண்டியுள்ளது. ஆயினும், ஆன்றோர், சான்றோர், ஞானிகள், உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும் அனுபவம் என்னும் ஒன்றை கொண்டவர்களின் கருத்துக்களை நாம் கூர்ந்து கவனித்து, தெளிந்தறிந்து நமது வாழ்க்கையில் கடைபிடித்தோமானால் நாமும் நம்மைச் சார்ந்தர்வர்களும் நலமுடன், வளமுடன், மன மகிழ்வுடன் வாழ முடியும் என்பதனை இந்த அறுபத்திரண்டு வருடத்தில் கிடைத்த அனுபவத்தால் புரிந்து கொண்டேன். எனக்கு கிடைத்த இந்த அனுபவ பாடத்தை 'யான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறவேண்டாம்' என்றெண்ணி,
மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அனைவரும் நலமுடன் வளமுடன் மன மகிழ்வுடன் வாழ என்னால் சில நல்லவைகள் நடைபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் விளைவே இந்த புதிய பிளாகர் உதயமாகும்.

இந்த பிளாகரில் உலாவரும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், பலதரப்பட்ட பதிவுகள் வெளிவரும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜூலை மாதம் முதல் இதனுடைய தரம் உயர்த்தப் பட்டு பல்வேறு தலைப்புக்களில் தொடர்ந்து பதிவுகள் வெளிவரும். இத்தளத்தில் உலா வரும் சகோதர சகோதரிகள் தங்களின் கருத்து மற்றும் எண்ண ஓட்டங்களை பதிவு செய்து எனது படைப்புக்களை மேம்படுத்தவும், என்னை மேலும் செம்மைபடுத்தவும் செய்யவேணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.