Search This Blog

Showing posts with label பகவத் கீதை.. Show all posts
Showing posts with label பகவத் கீதை.. Show all posts

Aug 16, 2011

கீதை காட்டும் பாதை 5 - அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!

 
சாங்கியம் என்ற சொல்லிற்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள் கொள்ளலாம். வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில்தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும் அம்சங்களும் இந்த சாங்கிய யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.

சுதர்மம் பற்றி விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக கர்மத்தின் அல்லது செயலின் சூட்சுமத்தை விளக்க முற்படுகையில் ஆரம்பத்திலேயே சொல்லும் வார்த்தைகள் அவை சொல்லப்பட்ட காலத்தை எண்ணிப் பார்க்கையில் புரட்சிகரமானவை என்றே சொல்ல வேண்டும்.

அறிவிலிகள் வேதங்களின் மேலெழுந்த வாரியான அர்த்தம் கொண்டு அதைத் தவிர வேறொன்றும் இல்லையென்று சாதிக்கின்றனர். இவர்கள் சொர்க்கத்தையே லட்சியமாகக் கொண்டு கோஷம் செய்கிறார்கள். இவர்கள் போகத்திற்கும், அதிகாரத்திற்கும் வேண்டி சடங்குகள் செய்கிறார்கள். அவற்றினால் அவர்கள் புத்தி மழுங்கி விடுகிறது. எனவே மகோன்னதமான லட்சியத்திற்கு வேண்டிய நிச்சயமான புத்தி அவர்களிடம் இல்லாமல் போய் விடுகிறது

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதங்களே எல்லாம் என்று முழுமையாக நம்பப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கால கட்டத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்வதையும், சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் உறுதியான வார்த்தைகளால் சாடுகிறார்.

இது இக்கால மனிதர்கள் கவனித்து தெளிவடைய வேண்டிய ஒரு விஷயம். எந்த மதமானாலும் அந்த மத புனித நூல்களை மேலெழுந்த வாரியாகப் படித்து அரைகுறையாய் புரிந்து கொள்வதால் தீமையே விளையும் என்பதற்கு மதங்களின் பெயரால் இக்கால ஆன்மிகவாதிகள் செய்யும் குளறுபடிகளும், சண்டை சச்சரவுகளுமே நல்ல உதாரணம்.

மதங்கள் மனிதனை உயர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தி லேயே உருவாக்கப்படுபவை. உருவாக்கியவர்களின் நோக்கம் உயர்ந்ததே. மத உபதேசங்களில் பலவும் அந்தந்த கால கட்டங்களின் அப்போதைய சூழ்நிலைகளிற்கும், தேவைகளுக்கும் ஏற்பவே இருந்தன. ஆரம்பத்தில் மிகத் தூய்மையாகவும், உருவாக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து தடம் மாறாமலும் இருந்த மதங்களின் உபதேசங்கள் காலம் செல்லச் செல்ல சிறு சிறு மாறுதல்களை அடைய ஆரம்பிக்கின்றன. பிற்காலத்திய மனிதர்களின் சொந்தக் கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் அந்த உபதேசங்களில் இடைச் செருகல்களாகும் வாய்ப்புகள் மிகஅதிகம். அதுவும் வாய் மொழிகள் வழியாகவே உபதேசங்கள் செய்யப்பட்ட பழங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

மேலும் உபதேசங்கள் செய்யப்பட்ட ஆரம்ப மொழி பெரும்பாலான மதங்களில் இக்கால மொழியாக இல்லை. அந்த மொழியில் இருந்து பல மொழிகள் வழியாக மொழி பெயர்க்கப்பட்டு இக்காலத்தில் நாம் அறியப்படும் புனித உபதேசங்கள் எந்த அளவுக்கு அதன் ஆரம்பத் தூய்மை மாறாமல் இருக்கின்றன என்பது சர்ச்சைக்குரியதே.

ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொன்ன கருத்துகளை அட்சரம் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னாலும் குரலின் ஏற்ற இறக்கங்களை மாற்றினால் முதலில் சொன்னதற்கு நேர் எதிர்மாறான அபிப்பிராயத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தி விட முடியும். பலருக்கிடையில் கலகம் மூட்டி விடும் இந்தக் கலையில் வல்லுனர்கள் பலரையும் நாம் சர்வ சாதாரணமாக நம்மிடையே பார்க்கலாம்.

இப்படியெல்லாம் இருக்கையில் எந்த மத புனித நூலாக இருந்தாலும் அதை மிக ஆழமாகப் படித்தால் மட்டுமே சொல்லப் பட்டவற்றின் நோக்கத்தையும், உண்மையான அர்த்தத்தையும் ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அப்படி ஆழமாகச் செல்பவருக்கே அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரித்து பாலை மட்டுமே உட்கொள்வது போல் படிக்கின்ற விஷயங்களில் இருந்து உண்மையைப் பிரித்து அறிய முடியும். எனவே அந்த நூலில் இருந்து அங்கொரு பகுதி, இங்கொரு பகுதியைப் படித்துக் கொண்டு அதை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டதாக ஒருவர் நினைப்பது பேதைமையே.

அரைகுறையாக அறிந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல சொர்க்கம், அதிகாரம், போகம் போன்றவையே குறிக்கோளாக அமைகிறது. அதை அடையும் வழிகளாக அந்த புனித நூல்களில் சொல்லப்படும் சடங்குகள், சம்பிரதாயங்களை எல்லாம் மிக முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த மதத்திலும் உண்மையான சாரத்தை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக சடங்குகள், சம்பிரதாயங்களையே பிரதானமாக எடுத்துக் கொள்வது சாரத்தை விட்டு சக்கையை முக்கியமாக எடுத்துக் கொள்வது போன்றது தான். அப்படிக் கண்மூடித்தனமாகச் செய்தால் புத்தி மழுங்கி விடும் என்று ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கிறார். புத்தி மழுங்கும் போது மேன்மையான செயல்கள் செய்யத் தேவையான தெளிவோ, உறுதியோ இருப்பதில்லை என்கிறார் அவர்.

ஸ்ரீகிருஷ்ணர் எதையும் சிந்திக்காமல் அப்படியே பின்பற்றுவதை ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை முழுவதும் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை பல கேள்விகள் கேட்கிறான். அப்போது அப்படி சொன்னாய், இப்போது இப்படி சொல்கிறாய், குழப்புகிறாய் என்றெல்லாம் சொல்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் அது போன்ற கேள்விகளை அனுமதிக்கவே செய்கிறார். நான் கடவுள், எல்லாம் அறிந்தவன், அதனால் நான் சொல்கிறபடி நீ கேட்டு நட என்ற ரீதியில் அவருடைய உபதேசம் இல்லாததும், ஒரு விஷயத்தை அனைத்து கோணங்களில் இருந்து பார்த்து தெளிவடைய வைக்கும் விதமாய் உபதேசம் இருப்பதுமே கீதையின் மிகப்பெரிய சிறப்பம்சம்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் மனிதனை நன்னெறிப்படுத்தவே உருவாக்கப்பட்டவை. அவை உருவாக்கப்பட்ட கால சூழ்நிலைகளின் தேவைகளும், தாக்கங்களும் அவற்றில் இருக்கக் கூடும். அவற்றில் சில மாறி விட்ட இக்காலத்திற்குப் பொருத்த மற்றதாகக் கூட இருக்கலாம். அவற்றின் நோக்கம் என்ன என்ற ஆழமான அறிவு இருந்தால் மட்டுமே இக்காலத்திற்கும் பொருந்துவன வற்றை தேர்ந்தெடுத்துப் பின்பற்றி பலனடைய முடியும்.

மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஓர் இலக்கை எட்ட உதவும் வாகனங்கள் போன்றவை. அவை இலக்கை விட எப்போதுமே முக்கியமானதாகி விடக்கூடாது. இலக்கை அடைந்த பிறகு அவற்றின் பயனும் இல்லாமல் போய் விடுகிறது. கரையை அடைந்த பின்னும் படகை யாரும் தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உவமையைக் கூறுகிறார். நாலா புறமும் தண்ணீர் இருக்கையில் கிணற்றின் பயன் எப்படியோ, அதே அளவு பயன் தான் உண்மையை உணர்ந்தவனுக்கு வேதச் சடங்குகளாலும்”.

இன்றைய காலத்தில் மதங்கள் மற்றும் புனித நூல்களின் முக்கிய நோக்கத்தை மறந்து விடுகிறார்கள். சடங்குகள் சட்டங்கள் போல கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை போன்று சித்தரிக்கிறார்கள். இல்லாவிட்டால் நரகத்தை அடைய நேரிடும் அல்லது துயரம் சம்பவிக்கும் என்கிற பயம், சடங்குகளை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் அல்லது அதிர்ஷ்டம் அடைவோம் என்கிற ஆசை தான் பெரும்பாலான மக்களின் இன்றைய ஆன்மிகத்திற்கான காரணம் ஆகி விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த அணுகுமுறையை புத்தி மழுங்க வைக்கும் முட்டாள்தனம் என்கிறார்.

வெறுமனே வேதங்களைப் படித்து வைத்திருப்பதும், மனப்பாடம் செய்து சொல்ல முடிவதும் அக்காலத்திலேயே மதிக்கப்பட வேண்டிய ஒரு தகுதியாகக் கருதப்படவில்லை. இதற்கு மஹாபாரதத்திலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. கௌசிகன் என்ற பிராமணன் வேதங்களை நன்கு படித்தறிந்தவன். பிரம்மச்சரிய விரதம் இருந்து பல சக்திகளையும் பெற்றவன். அப்படிப்பட்டவன் தர்மவியாதன் என்பவரிடம் உபதேசம் பெற அனுப்பி வைக்கப் படுகிறான். 

தர்மவியாதன் ஆசிரமம் ஒன்றில் வசிக்கும் முனிவராக இருக்கக்கூடும் என்று எண்ணி கௌசிகன் தேடிப் போனால் அந்த நபர் ஒரு கசாப்புக் கடைக்காரனாக இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட நேர்கிறது. இறைச்சி விற்பவனாக இருந்தாலும் தர்மவியாதன் தான் செய்கின்ற தொழிலில் நியாயமானவனாகவும், தாய் தந்தைக்கு சிரத்தையுடன் சேவை செய்கிறவனாகவும், தர்மம் அறிந்தவனாகவும் இருந்ததால் கௌசிகன் என்ற பிராமணனுக்கு உபதேசம் செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறான்.

அதே போல சாண்டோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் என்பவர் தன் மகன் ஸ்வேதகேதுவை உண்மையான ஞானம் பெற்று வர ஒரு குருவிடம் அனுப்புகிறார். ஸ்வேதகேது அறிவில் சிறந்தவனாக இருந்ததால் விரைவில் வேதங்கள் அனைத்தும் கற்று தேர்ந்து விடுகிறான். இனி படிக்க எதுவும் இல்லை என்கிற அளவு கற்று முடிந்தவுடன் அவன் தந்தையிடம் திரும்புகிறான். அவன் வரும் போதே அவனிடம் வேதங்கள் அனைத்தையும் கற்ற கர்வம் தென்படுவதை உத்தாலகர் கவனித்து துக்கத்தில் ஆழ்கிறார்.

எங்கே கர்வம் இருக்கிறதோ அங்கே ஞானம் இல்லை என்றல்லவா அர்த்தம்? நெல்மணிகளைத் தாங்கும் வரை பணியாமல் நேராக நிற்கும் கதிர் நெல்மணிகளைப் பெற்றவுடன் தானாகத் தலைவணங்குவது போல உண்மையான ஞானம் பெற்றவனிடம் தாழ்மையும் எளிமையும் தானாக அல்லவா வந்து விட வேண்டும்?

வேதங்களைக் கரைத்துக் குடித்த மகனாக திரும்பி வந்தும் ஆனந்தமடைவதற்கு பதிலாக தந்தை துக்கமாக இருக்கிறாரே என்று வருந்திய ஸ்வேதகேது காரணம் கேட்டறிந்து பின் மீண்டும் ஆழமாகப் பொருளுணர்ந்து கற்று ஞானியாக மாறுவதாகச் செல்கிறது கதை.

ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெறும் புனித நூலறிவு பெறுவதை உண்மையான ஞானம் என்று எடுத்துக் கொள்ளும் முட்டாள்தனம் நம் முன்னோரிடம் இருக்கவில்லை. ஆனால் அந்த முட்டாள்தனம் இன்றைய மக்களிடம் அதிகம் இருப்பதால் தான் ஆன்மிக மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. ஞானத்தை விட சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதால் தான் இன்றைய பெரும்பாலான மக்களின் ஆன்மிகம் அறிவு சார்ந்ததாக இருப்பதில்லை. இந்த உண்மையை ஸ்ரீகிருஷ்ணரின் மேற்கண்ட சுலோகங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இனி கீதையில் மிக முக்கியமான அம்சமான கர்மயோக இரகசியத்தைப் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம் ... கீதை காட்டும் பாதையில் .. அன்புடன் கே எம் தர்மா.....
நன்றி: விகடன்-என்.கணேசன் பதிவு

கீதை காட்டும் பாதை 4 - எது எல்லாம் சுதர்மம்.


தர்மத்தின் முதல் படி ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே, தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு எப்படி உண்மையாக நடந்து கொள்ள முடியும்? எனவே தான் பிறப்பாலும், தன்மையாலும் வீரனான அர்ஜுனன், அது வரையில் தன் சுதர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததில் எந்த பிரச்னையும் இல்லாத அர்ஜுனன், குருக்‌ஷேத்திர பூமியில் மடியப் போகும் உறவுகளைக் கண்டு சுதர்மத்தை விட்டு விலக நினைப்பதை தவறு என பகவான் கிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.

சுதர்மத்தின் அடுத்த படி என்ன? மற்றவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். நாம் பிறக்கும் போதே அந்த கடமைகளும் பிறந்து விடுகின்றன. எந்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ அவர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், எந்த சமூகத்தில் நாம் பிறக்கிறோமோ அதற்கு செய்ய வேண்டிய சேவைகள் ஆகியவை எல்லாம் சுதர்மத்தின் அடுத்த படி ஆகின்றன. இன்னொரு விதமாக சொல்லப் போனால் அந்தக் கடமைகள் நாம் பிறக்கும் முன்னே நமக்காகக் காத்திருக்கின்றன. நம் பெற்றோர், சமூகம், நாடு என்று நாம் வாழ எங்கிருந்தெல்லாம் பலன்களை அடைகிறோமோ அங்கெல்லாம் நம் கடமைகளும் கூடவே இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இது ஒரு வழிப் பாதையல்ல. பலனாக அவர்களிடம் இருந்து நேரடியாகவோ, வேறு வழியாகவோ நாம் நிறைய பெறாமல் வளர்ந்து ஆளாக முடியாது. அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும். அதுவே சுதர்மம். இங்கு கடன் தள்ளுபடி இல்லை. இந்த சுதர்மத்தைச் செய்யாமல் கோடி கோடியாய் திருப்பதி உண்டியலில் போட்டு வணங்கினாலும் அது ஒருவருடைய கணக்கில் இறைவனால் வரவு வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.

சுதர்மத்தைப் பொறுத்த வரை இன்னொரு முக்கிய அம்சம், தேவையானதை தேவையான அளவே செய்ய வேண்டும் என்பதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த விஷயத்திற்கும் மிக நன்றாகவே பொருந்தும். மேலும் அளவுக்கு மீறி ஒன்றைச் செய்கையில், செய்ய வேண்டிய இன்னொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும் அல்லவா? சிலநல்ல விஷயங்களே கூட தேவைக்கதிகமாக நீளும்போது அதன் விளைவுகள் நன்மையானதாக இருப்பதில்லை. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பிள்ளைகளைப் பாசத்துடன் வளர்க்க வேண்டும். இது ஒரு தந்தையின் தர்மம். ஆனால் திருதராஷ்டிரன் கண்மூடித்தனமான பாசத்தை பிள்ளைகளுக்குக் காட்டி வளர்த்ததில் தீமையே விளைந்தது. பிள்ளைகள் மேல் உள்ள அளவு கடந்த பாசம் அவனை உறுதியுடன் பிள்ளை களின் தவறுகளைக் கண்டித்து திருத்த விடவில்லை. அது கடைசியில் அவர்களுடைய அழிவுக்கே அல்லவா வழி வகுத்தது திருதராஷ்டிரனும், காந்தாரியும் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லாமல் இல்லை. 

ஆனால் ஏதோ பேருக்கு புத்தி சொன்னார்களே ஒழிய அதில் தேவையான அளவு ஆத்மார்த்தமான உறுதி இருக்கவில்லை. புத்திமதிகளைக் கேட்காமல் போன போது ஆரம்பத்திலேயே தேவையான அளவு கண்டிப்பாக அவர்கள் இருக்க வில்லை. எனவே வெளிப்பார்வைக்கு தங்கள் கடமைகளைச் செய்வது போல காட்சி தந்தாலும், அதில் தேவையான விளைவை ஏற்படுத்தும் அளவு உறுதி இல்லா விட்டால் அப்போதும் அது சுதர்மம் ஆகாது, அதில் அதர்மமே விளையும் என்பது அனுபவம்.

(
சில அறிஞர்கள் திருதராஷ்டிரனை மனமாகவும், காந்தாரியை புத்தியாகவும் உருவகம் செய்கிறார்கள். திருதராஷ்டிரன் இயல்பாகவே குருடன். காந்தாரியோ கணவன் காணாத உலகத்தைத் தானும் காண விரும்பாமல் கண்களைக் கட்டிக் கொண்டாள். மனம் விருப்பு வெறுப்புகளின் தன்மை உடையதால் உண்மையை அறிய முடியாத குருட்டுத் தன்மை உடையது. அதை வழிநடத்த வேண்டிய புத்தியும் அதே போல குருடாகவே மாறுமானால் அந்த இரண்டின் கூட்டணியில் உருவாகும் விளைவுகள் கௌரவர்கள் நூறு பேரைப் போல மோசமானதாகவே இருக்கும் என்று மிக அழகாக வியாக்கி யானம் செய்கிறார்கள்.)

வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கும் ஒவ்வொரு உறவிலும், வகிக்கும் ஒவ்வொரு பொறுப்பிலும் கூட அதனுடன் சில தார்மீகக் கடமைகள் ஒரு மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அதுவும் சுதர்மத்தின் ஒரு அங்கமே. அந்தக் கடமைகளை சரிவரச் செய்யா விட்டால் மற்ற விதத்தில் அந்த மனிதன் எத்தனை மேன்மை படைத்தவனானாலும் சுதர்மம் தவறியவனாகிறான். 

அதற்கும் மகாபாரதத்திலேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். கர்ணனைப் போன்ற தர்மவான் இல்லை. பகவான் கிருஷ்ணரே அவனிடம் கையை ஏந்தியும் இருக்கிறார். அவனிடம் தர்மம் பெற்றும் இருக்கிறார். அந்த அளவு புண்ணியாத்மா வான கர்ணன் நண்பன் துரியோதனன் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டி இடித்துரைக்காமல் கூட்டு போனதை நண்பனாக சுதர்மம் தவறியதாகச் சொல்லலாம்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.


என்கிறார் திருவள்ளுவர். இதில் மேற்சென்றுஎன்ற சொல் பொருள் பொதிந்தது. கருத்து கேட்டால் சொல்வேன் என்கிற நிலையை ஒரு நண்பன் எடுத்து விடக்கூடாது. நண்பன் நெறி கடந்து செல்லும் போது தானாக வலியச் சென்று இடித்துரைப்பது தான் உண்மையான நண்பனுக்கு அடையாளம். அவன் சொன்னால் துரியோதனன் கேட்டிருப்பானா என்பது வேறு விஷயம். 

நியாயமற்ற செயல்களைச் செய்தால் அழிவு நிச்சயம் என்பதால், நியாயமற்ற செயல்களைச் செய்யும் நண்பனைத் திருத்த முற்படுவதன் மூலம் அவனை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா? இப்படி சுதர்மம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடிந்த சொல் அல்ல. சுதர்மம் என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட நுணுக்கமான சொல்.

முன்பு சொன்னது போல அதிகமாகச் செய்தலும் சுதர்மம் அல்லாத செயல். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு வங்கித் தேர்வு நடக்கும் மையத்திற்குச் செல்ல நேர்ந்தது. தேர்வு எழுத வந்த சுமார் 18 வயது இருக்கக்கூடிய மாணவனுடன் அவன் தந்தையும் வந்திருந்தார். பேனா, ஹால் டிக்கெட் முதற்கொண்டு அந்த தந்தையே தன் கையில் வைத்திருந்தார். எந்த அறையில் அவன் தேர்வு எழுத வேண்டும் என்பதையும் அவரே சென்று தேடிக் கண்டு பிடித்து அவனை அங்கு அவன் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தி அந்தப் பேனா, ஹால் டிக்கெட் இத்தியாதிகளை அவனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். தேர்வு எழுதி முடித்து வரும் வரை அடிக்கடி மகனை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த செயலைப் பார்த்து அந்த தந்தை தன் சுதர்மத்தைப் பின் பற்றியிருக்கிறார், கடமையைச் செய்திருக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. 

அந்த மகனின் ஏழெட்டு வயதில், உண்மையிலேயே அவர் மேற்பார்வையும் உதவியும் தேவைப்பட்டு இருக்கக்கூடிய காலத்தில், அவர் இதைச் செய்திருப்பது அவர் கடமை . ஆனால் அவனுடைய 18 வயதில் அவர் இதைச் செய்வது அவனுக்குத் தீமையே. அவனாகச் செய்ய வேண்டியவற்றை அவர் செய்து அவனுடைய வளர்ச்சியை அவர் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அங்கு கண்கூடாகப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.

சிலர் தங்கள் வீட்டில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள். ஆனால் அடுத்தவர்கள் வீட்டில் ஓடாக உழைப்பார்கள். மற்றவர்கள் பாராட்டில் புளங்காகிதம் அடைவார்கள். பரோபகாரிகள் என்று அவர்களைச் சொல்லலாமே ஒழிய சுதர்மத்தை அனுசரிக்கிறவர்கள் என்று கூற முடியாது.

அது போல சில விதமான உதவிகளும் தர்மமோ, சுதர்மமோ ஆகாதவை. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒருவர் அடிக்கடி கடன் தொல்லையில் மாட்டிக் கொள்வார். ஜப்தி, கைது நிலை வரும் போது அவருடைய உடன் பிறந்தோர் எல்லாம் அவர் கடனை அடைத்து அவரைக் கரையேற்றி விடுவார்கள். இது போல் பல தடவை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஓரிரு முறை உதவியது உதவியாக இருக்கலாம். ஆனால் எப்படியும் இவர்கள் நமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையை அந்த நபரிடம் வளர்த்து விட்டு பொறுப் பற்ற முறையில் வாழ வழி செய்த உதவிகளை எல்லாம் உடன் பிறந்தவர்களின் தர்மம், சுதர்மம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. கடைசியில் அவர்களும் உதவ முடியாத நிலை ஏற்பட்டு அந்த நபர் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் தலைமறை வாகிற நிலை வந்து விட்டது.

எனவே சுதர்மம் என்ன என்பதில் நமக்கு தெளிவில்லையானால் சுதர்மம் என்ற பெயரில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு அது காரணமாகி விடும். சுதர்மம் என்ற பெயரில் எத்தனையோ அனர்த்தங்களை நாம் செய்ய நேர்ந்து விடும். நமது உள்நோக்கம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதன் விளைவுகளையும் யோசித்து உதவுவதும், செயல் படுவதும் முக்கியம். நம் உதவி அடுத்தவர்களை சோம்பேறிகளாவும், பொறுப்பற்றவர்களாகவும் ஆக்குமானால் அது கண்டிப்பாக சுதர்மம் அல்ல.

பகவான் கிருஷ்ணர் சொல்லும் சுதர்மம் கண்மூடித்தனமானதல்ல. அது இதய பூர்வமானது. அறிவு பூர்வமானது. ஆக்கபூர்வமானது. உலகில் ஒவ்வொருவரும் தங்கள் சுதர்மத்தை சரியாகக் கடை பிடிப்பார்களேயானால் இந்த உலகம் ஒரு சொர்க்க பூமியாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

அடுத்ததாக பகவான் கிருஷ்ணர் இன்னொரு அற்புதமான உபதேசத்தைச் செய்கிறார். அதைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.... அன்புடன் கே எம் தர்மா.....
- நன்றி: விகடன்- என்.கணேசன் பதிவு

Aug 15, 2011

கீதை காட்டும் பாதை 3 - சுதர்மமேசிறந்தது.

இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.

பகவத்கீதையின் ஆரம்பம் தர்மம்என்ற சொல்லில் துவங்குவதை முன்பு குறிப்பிட்டிருந்தேன். பகவத் கீதை மமஎன்ற சொல்லில் முடிகிறது. மமஎன்றால் என்னுடையஎன்று அர்த்தம். தர்மம்மற்றும் என்னுடையஎன்ற சொற்களுக்கிடையில் 700 சுலோகங்கள் கொண்ட பகவத் கீதை ஒளிர்கிறது. இதைக் குறிப்பிடும் பல அறிஞர்கள்என்னுடைய தர்மம்என்பதன் விளக்கமே பகவத் கீதையின் முழு சாராம்சமும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையே. அர்ஜுனனிற்கு தர்மம் எது என்று விளக்கிய கீதையைப் படிக்கையில் அவரவர் தர்மத்தை ஒவ்வொருவரும் உணராமல் இருக்க முடியாது. சுதர்மம் பகவத் கீதையின் மிக முக்கியமான தத்துவம்.

ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின் அழியும் தன்மையையும் கூறிய பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அரசகுலத்த வனான அர்ஜுனனுக்கு அறப்போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை என்றும், தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த அறப்போரை நடத்தாமல் போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை அடைய நேரிடும், பழி வந்து சேரும் என்று எச்சரிக்கிறார்.

இப்படி எல்லா கோணங்களிலும் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்கு வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன் எதற்காக படைக்கப் பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும், மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன் திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி விடுதலோ கூடாது.

பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக் கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: மீன்களிடம் நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து வாழுங்கள்என்று எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? மீன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்”.

அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக் கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய் விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் உண்மையாக சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும் மீறியல்லவா வெளிப்படும்.

இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான். நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரவரே அறிவார்கள். அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.

எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு படும் பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.

எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல வேண்டாம். மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக வாழ்கின்றான்.

கணித மேதை பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய மொழிகளில் பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால் பாஸ்கலுக்கோ கணிதம் என்றால் உயிராக இருந்தது. அவருடைய தந்தை கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்காதபடி செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப் பார்த்தார். பாஸ்கல் பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக் குறியீடுகளால் கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய தந்தை தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்திற்காகத் தன் கணித ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ கணித மேம்பாட்டை இழந்திருக்கும்.

ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின் படி, இயல்பாக அமைந்துள்ள திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும் நிறைவை உணர்கிறார்கள். அவர்களால் சமூகத்திற்கும் நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாமல் அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.

பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை எளிமையாக இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன. வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப் படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும் இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால் அவர் எப்படி சுதர்மத்தை மேற்கொள்ளமுடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்படிவருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய  நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு இயல்பாக திறமையும் ஆர்வமும் உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.

இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள். பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி பல ஆண்டுகள் நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால், அவர்கள் தினசரி வருமானத்திற்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல ஆண்டுகள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள் விமான ஆராய்ச்சிகளையும் செய்தார்கள். அதனாலேயே அவர்களால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.

எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை உள்ளவர்கள் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு தொழிலில் முழு நேரமும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல இடங்களில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை அடிக்கடி உணர்கிறார்கள் என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால் அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க முடியும். எது நமது உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவீதம் நாமாக இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு மறந்து விடக்கூடாது.

சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது. இதனாலேயே பகவான் கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். இன்னொரு இடத்தில் சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும் நல்லதேஎன்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க எத்தனையோ காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்தக் காரணங்களில் ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.

இக்காலத்தில் தொழிலில் நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள் சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான். எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக் காரணமும் அது தான்.  கீதை சொல்லும் சுதர்மம் குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்...

பாதை நீளும்...அன்புடன் கே எம் தர்மா...

நன்றி: விகடன் ..என்.கணேசன்-பதிவு