Search This Blog

Apr 14, 2012

சமூக சிந்தனையாளர்: டாக்டர் அம்பேத்கார்



நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கடிமை யாரும் இல்லை. இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று 14.04.1891.


பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.

டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

சமூகப்பணிகள்:
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படு கையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப் பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித் துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். 


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. 

இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப் பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரா கவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல் பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது ,அதன் ஒரு பகுதியான “இந்து சட்டத் தொகுப்பு மசோதா"விற்கு பாராளு மன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்கததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். ( 1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952 ல் அந்த சட்டம் நிறைவேறியது) சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 - டிசம்பர் 6-ல் காலமானார்.

அம்பேத்கர் கருத்துக்கள்:
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனை களைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப் படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?  இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலை போல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும்.


யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சி களின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’  1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள்:

 

பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தன் அமைச்சர் பதவியைத் துறந்த முதல் மனிதர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து மற்றும் மறுமணம் போன்ற முற்போக்கான அம்சங்களடங்கிய இந்துச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பெரிதும் முயன்றார். 

பார்ப்பனர்களும் இந்து வெறியர்களும் இம்மசோதா நிறைவேறா வண்ணம் தடுத்து நின்றனர். நேருவும் பார்ப்பனர்களுக்கு அஞ்சி இம்மசோதாவை நிறைவேற்ற அளித்த உறுதிமொழியிலிருந்து நழுவினார். இதனைக் கண்டு மனவேதனை அடைந்த அம்பேத்கர் தன் அமைச்சர் பதவியை உதறியெறிந்துவிட்டு காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

பெண்களின் பிரச்சனையும் தீண்டத்தகாதவர்கள் பிரச்சனையும் ஒன்று தான் என்றும் இருவர் மீதும் தீட்டு என்கிற கருத்து திணிக்கப்பட்டிருக்கிறது என்றும் இரு பிறப்பாளருக்கான தகுதி இருவருக்கும் மறுக்கப்பட்டிருக் கிறது என்றும், பெண் மீது ஆண் திணித்திருக்கிற எல்லா கோட்பாடு களையும் மீறாத வரை பெண்ணுக்கு விடுதலையே இல்லை என்றும் எழுதினார். 


இலட்சியப் பெண்கள் புராண இதிகாசங்களில் எவ்வாறு ஒடுக்கப்பட்டிருந் தார்கள் என்றும், பெண்களை மனு எவ்வாறு இழிவுப்படுத்தினார் என்றும் அம்பலப் படுத்தினார். இந்துச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதங் களில் பெண்கள் விடுதலைக்கென எவ்வாறு சளைக்காமல் வாதாடினார் என்பதை தொகுதி 31இல் விரிவாக அறியலாம்.

அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்:

முனைவர் அம்பேத்கரின் பன்முக வெளிப்பாடுகளில் மிகவும் முக்கியமானவை அவரது பொருளியல் சிந்தனைகளாகும். அவரது முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், அறிவியல் முனைவர் பட்டம் அனைத்தும் பொருளாதார ஆய்வுகளுக் காக வழங்கப்பட்ட பட்டங்களே ஆகும். அவரது பொருளாதார ஆய்வுகள் முழுக்கமுழுக்கத் தீண்டத் தகாதவரின் கண்ணோட்டத்தில் அமைந்தவையே. சாதியமைப்பின் பல்வேறு பொருளியற் பண்புகளை ஆராய்ந்த அவர் ஆதிக்க சாதியினரின் கையில் உற்பத்திக் கருவிகள் அனைத்தும் இருப்பதாகவும், சூத்திர மற்றும் தீண்டத்தகா தோரிடம் உழைப்பு மட்டும் இருப்பதாகவும் கூறினார்.

அம்பேத்கர் பெரிதும் முன்நிறுத்துவது அரசு சோசலிசமாகும். அதையும் அவர் இந்திய அரசியல் சட்டத்தின் வாயிலாக நிறுவப்பட வேண்டுமென விரும்பினார். அதன்படி,

1. முதன்மைத் தொழில்கள் அரசுக்குச் சொந்தமாய் இருக்கும்.
2. அரசால் அது நிர்வகிக்கப்பட வேண்டும்.
3. வேளாண்மை அரசுத் தொழிலாக இருக்க வேண்டும்.
4. வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு காப்புநிதியளிக்க வேண்டும்.
5. நிலங்கள் கூட்டுப்பண்ணைகளாக்கப்படவும், அப்பண்ணை கள் கிராம மக்களிடம் சாகுபடிக்கு விடப்படவும் வேண்டும்.
6. நிலங்கள் சமஅளவில் உழைப்பைக் கோருவதால் சாதி சமய வேறுபாடுகளோ, நிலவுடமையாளர்- குத்தகைதாரர் வேறுபாடுகளோ இராது.
7. பாசனநீர், உழவுக்கருவிகள், உரம் முதலியன வழங்குவது அரசின் கடமையாகும் என்று கூறினார்.

நிதி ஒதுக்கீட்டில் இ

ராணுவத்திற்கென அதிக அளவு ஒதுக்கப்படுவதைத் தவிர்த்து மக்கள் நலப்பணிகளுக்கு நிறைய நிதியை ஒதுக்க வேண்டும் என்றார். 

காஷ்மீர் பிரச்சனை இன்றைக்கு கூடுதலான கவனத்தை பெற்றிருக்கும் சூழலில் காஷ்மீரைத் தனியே பிரித்துக் கொடுத்து விடுவதே நல்லது என்றார். மதுவிலக்கு தேவையற்றது. பசியில் வாடுபவனா, குடிகாரனா? யாருடைய நலன் என்கிற கேள்வி வந்தால் நாம் பசியில் வாடுபவனின் பக்கமே நிற்க வேண்டுமென்றார்.

சமூக மாற்றம் குறித்து:

 
"இந்தியாவில் ஏன் சமூகப் புரட்சி நடக்கவில்லை என்ற கேள்வி ஓயாது என்னைத் துன்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரே பதில்தான் என்னால் தர முடியும். துயரமான நால்வர்ண முறையானது கீழ்மட்ட வர்ண இந்துக்களை நேரடி நடவடிக்கையில் இறங்காவண்ணம் முழுக்கவே தகுதியற்றவர்களாக்கி விட்டது. அவர்கள் ஆயுதம் ஏந்த முடியாது. 


ஆயுதம் ஏந்தாமல் கலகம் செய்ய முடியாது. இவர்கள் எல்லாம் உழவர்களாக இருக்கிறார்கள் அல்லது உழவர்களாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே தங்கள் விளைச்சலை ஆயுதம் தாங்கியவர்களோடு பரிமாறிக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. ஆகவே மற்றவர்கள் அவர்களை ஆண்டு வருகிறார்கள். நால்வர்ண முறையின் காரணமாக அவர்களால் கல்வி கற்க முடியாது. தங்கள் மீட்சி குறித்து அல்லது அதற்கான வழிமுறை குறித்து அவர்களால் சிந்திக்க முடியாது. அவர்கள் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இதிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை அறிந்திருக்கவில்லை. தப்புவதற்கான வழிமுறை களையும் பெற்றிருக்கவில்லை. நிரந்தரமான அடிமைத்தனத்தோடு பிணைக்கப்பட்டது தங்களுடைய தப்பிக்க முடியாத தலைவிதி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆயுதம் தாங்கிய புரட்சி குறித்து அம்பேத்கர் எழுதியது வெறும் வெற்றுச் சொல்லாடல்கள் அல்ல. அதன் உள்ளீடாகத் தெரிவது வர்க்கப் புரட்சிதான். ஆனால் வர்க்கம் உருவாக இங்கே சாதி தடையாக உள்ளது. எனவே வர்க்கப் போராட்டத்தின் முன் நிபந்தனை சாதி ஒழிப்பாகும். சாதி ஒழிப்பு தான் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டும். 


எனவே சாதி ஒழிப்புதான் இந்திய சமூகத்தின் முதல் புரட்சியாகும். சாதி அமைப்பை நிலவுடைமை யின் மேல் கட்டுமானம் என்கிற மார்க்சீயர்களின் அணுகுமுறையிலிருந்து அம்பேத்கர் விலகும் புள்ளி இதுதான். வர்க்கப் புரட்சி என்ற ஒன்று நடந்தாலும் அப்போதும் சாதி இந்தியச் சமூகத்திற்குச் சவாலாகவே இருக்கும். எனவே, சாதி ஒழிப்பே இந்தியச் சமூகத்தின் மிக அவசியத் தேவையாகும்.

பொன்மொழிகள்.....

ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப் படுபவரே உயர்ந்த மனிதர்.

முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

“ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினரை அடக்கி ஒடுக்குவதும், இழிவாக நடத்துவதும் ஆகிய இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் வரை – இந்தியாவில் சுதந்திரமான ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும், சோசலிசக் கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சோசலிசத்தில் பல்வேறு வகுப்புகளுக்கும் குழுக்களுக்கும் சமத்துவம் கிட்டும் என்று நம்புகிறேன். சோசலிசம் மட்டுமே இந்தப் பிரச்சனைகளையும் இதைப் போலவே மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான உண்மையான வழி எனவும் நான் நம்புகிறேன்.”

நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் – சாதிக் கொடூரன் வந்து வழி மறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக்காமல், அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது.

---------------------------------------------------------------------------
 

படித்ததில் பிடித்தது : விருட்சம் பதிவாளர்களுக்கு மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு.  இனிய நண்பர்களே நீண்ட இடை வெளிக்குப் பின் இணையத்தில் உலவ முடிகின்றது. அன்பு நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  பயணம் தொடரட்டும்.  அன்புடன் கே எம் தர்மா....