Search This Blog

Showing posts with label மனம் மகிழுங்கள் தொடர். Show all posts
Showing posts with label மனம் மகிழுங்கள் தொடர். Show all posts

Sep 10, 2011

ஊழியமும், உதவியும் செய்வோம்!! சமுதாயம் மேம்படவேண்டி.


"LET US SERVE AND HELP. HELP THE NEEDY: WE WILL NOT BE IN NEED FOR EVER." 
நாம் ஊழியமும் உதவியும் செய்வோம்!!!
உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு!!!

நாமும் தேவைகளின் பிடியிலிருந்து விடுபடுவோம்!!!!

ஒரு துறவிக்கும் குடும்பஸ்தனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவத்தை உங்களுக்கு கூற விரும்புகின்றேன். அனைவராலும் அறியப்பட்ட, சந்நியாசி பல ஊர்களுக்கும் சென்று வாழ்கையின் தத்துவங்களை போதனையாக செய்து வந்தார். அவரின் போதனைகள் பலருக்கும் நன்மை பயப்பதாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும், அனைவராலும் வரவேற்கப் பட்டார். தங்களின் வாழ்க்கைத் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கவும், வாழ்கையின் வழிகாட்டி யாகவும் போற்றப்பட்டார்.

அந்த  சந்நியாசி தனக்கென ஒரு குறிக்கோளும் கொண்டிருந்தார். யாரொருவர் பொய் பேசாதவரோ, அவரின் வீட்டில் மட்டுமே தனது இரவு போஜனத்தைக்  கழிப்பவராக இருந்தார். இக்கதை நடக்கும் சமயம் அவ்விதம் சத்தியவான்கள் பலரும் இருந்தனர். ஆனால் தற்சமயம் அதுபோன்று ஒருவரும் இருக்க சாத்தியமில்லாது போய்விட்டது. ஒரு மாலைப் பொழுது தனது பிரசங்கத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்தவர்களிடம், இவ்வூரில் தன் வாழ்நாளிலேயே பொய் பேசாதவர் யார் உள்ளனர், அவரின் வீட்டின் எனது இரவு போஜனத்தை செய்ய விரும்புகின்றேன், என்று கேட்டார். அதற்கு அவ்வூரின் தலைவரே அதற்கு உரியவர், மூன்று மகன்களையும், அக்கிராமத்திலேயே ஏராளமான சொத்துக்களையும் உடையவர்  என்று அனைவரும் கூறினர்.

அந்த சாதுவும் அவரின் வீட்டை அடைந்தபொழுது கிரகஸ்தனான அந்த செல்வந்தன், சந்நியாசியை அன்புடன் வரவேற்று தனது வீட்டில் இரவு உணவு கொள்ளுமாறு வேண்டினான். அந்த சாதுவும் கிராமத் தலைவரை சோதிக்க எண்ணி இரண்டு கேள்விகளைக் கேட்டார். முதல் கேள்வி : உங்களுக்கு எத்தனை மகன்கள் உள்ளனர்? இரண்டாவதாக: உங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? கிராமத் தலைவனோ, முதல் கேள்விக்கு, ஒரு மகன் எனவும், தனது சொத்து மதிப்பு இரண்டு லக்ஷங்கள் என்றும் கூறினான்.


சாதுவோ, சங்கடத்துடன், நீ பொய் சொல்லுகின்றாய், கிராமத்தார் உனக்கு மூன்று மகன்கள் உள்ளனர் என்றும் உனது சொத்து மதிப்பு பத்து லக்ஷத்திற்குமேல் என்றும் கூறியுள்ளனர், என்று கூற, கிராமத் தலைவரோ, சாதுவை சமாதானப்படுத்தி, தனது மகன்களை கூப்பிட, உடனே கடைசி மகன் மட்டும் அவனது அழைப்பிற்கு உடன் மதிப்புக் கொடுத்து வந்து சேர்ந்தான். கிராமத்தலைவன் சாதுவைப் பார்த்து, எந்தவொரு மகன் தனது பெற்றோரின் குரலுக்கு மதிப்பு கொடுத்து உடன் வந்து பணிந்து நிற்கின்றானோ அவனே உண்மையான மகன். ஆகவேதான் எனக்கு ஒரு மகன் உண்டு எனக் கூறினேன். மேலும் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும், நான் இதுவரையிலும் இரண்டு லக்ஷங்கள் தான் ஆன்மீக மற்றும் தான தர்ம காரியங்களுக்குச் செலவு செய்துள்ளேன். ஆகவேதான் இரண்டாம் கேள்விக்கு அவ்வாறு கூறினேன். எனது வாழ்நாளில் நான் இவ்வாறு தான, தர்மங்களுக்கு செய்யும் சொத்தே எனதாகும், என்று கூறினான்.
 

இந்த சத்தியமான வார்த்தைகளைக் கேட்ட சாதுவும், மிகவும் மனம் மகிழ்ந்து, கிராமத் தலைவன் உண்மையையே கூறியுள்ளான் எனக் கண்டு கொண்டார். மேலும் மனதிருப்தி யுடன் தனது இரவு போஜனத்தை முடித்துக் கொண்டார். இது ஒரு பாட்டி கதையானாலும் வழி வழியாக கூறப்பட்டு வந்துள்ளது. வெகு சிலரே இதன் தாத்பரியத்தை உணர்ந்து தங்களின் வாழ்க்கையில் கடைபிடிக்கின்றனர்.

பலர் தங்களின் இருப்பிடத்தி லிருந்து பெற்றோரை விட்டு, விலகி, வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அடுத்த ஊரோ, நாடோ, கண்டமோ சென்று, கிராமத் தலைவன் கூறியபடி, ஒரு உண்மையான மகனாக இருக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவாக இருந்தாலும் வாழ்க்கையில்  மிகவும் செல்வாக்கும், செல்வமும் கொண்டோராக, பலருக்கும் உதவக் கூடிய வகையில், வாழும் பாக்கியம் கிடைக்கக் கூடும். இந்த சந்தர்ப்பத்தை நாம் வீணாக்கக்கூடாது.

தர்ம சாஸ்திரத்தில் கண்டபடி, நமது சம்பாத்தி யத்தில் 10 % -வது தான தர்மங்களுக்கும் ஆன்மீக காரியங்களுக்கும் செலவிட வேண்டும். இதே கருத்தினை கிருத்துவ மதத்தில் "TITHING" என்றும், இஸ்லாமிய மதத்தில் "ஜகாத் " என்றும் கூறப்படுவதை இங்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். எந்த ஒரு நாத்தீகவாதியும் இக்கருத்துக்கு எதிராக கருத்துக் கூற மாட்டார் என்பதும் திண்ணம். 

எனது (சுவாமி விவேகானந்தர்) கருத்தின்படி, எந்த ஒரு தனி மனிதனோ, ஒரு குழுமமோ தங்களின் குறிக்கோளை அடையும் பொழுது, அது தனிப்பட்ட வகையோ, அல்லது பொதுவானதாகவோ இருப்பினும், சமுதாய மேம்பாடு பற்றிய ஒரு பொறுப்புணர்வு அனைவருக்கும் உண்டென்பதை உணர்ந்து தங்களின் சொந்த அல்லது குழுமத்தின் மேம்பாட்டிற்காக பாடுபடும் நாம், நம்மை உள்ளிட்ட இந்த சமுதாய மேம்பாட்டிற்காகவும் பாடுபட வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கினால் கிடைக்கும் இன்பத்தை ஒருமுறை சுவைத்துப் பார்த்தபின் மீண்டும் மீண்டும் அதனை நுகரவே நமது மனம் நாடும்.

சிறிது சிந்தித்துப் பாருங்கள்!!! உங்களின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு பரிசுப் பொருளை- அது நீங்கள் அணிந்திருக்கும் ஒரு விலையுயர்ந்த கனையாழியாகக் கூட இருக்கலாம்-  கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்போழுது உங்களுக்கு உண்டாகும் அந்த இன்பத்தை ஒரு கனம் யோசித்துப் பாருங்கள். மேலே சொன்னவைகளின் ஒரு பகுதியே இதுவாகும்.

நமது சம்பாத்தியத்தில் ஒரு சிறு பகுதியாக, குறிப்பாக  3-5% வருமானத்தை உண்மையிலேயே தேவைகள் உள்ளவர்களுக்கு உதவி செய்வது மிகவும் நன்மை பயப்பதாகும். இதனை கூட செய்யாவிடில் இப்புவியில் வாழ்வதில் அர்த்தமில்லை என்பதே எனது கருத்து என்று வலியுறுத்துகின்றார் சுவாமி விவேகானந்தர்.  
 
"LET US SERVE AND HELP. HELP THE NEEDY: WE WILL NOT BE IN NEED FOR EVER."

Sep 5, 2011

மனம் மகிழ உணர்ச்சிகளுக்கு அணை போடுங்கள்.



உணச்சிகள் உங்களுடன் பிறந்தவைகள் அல்ல, அவைகளை உங்களால் தடை செய்ய முடியும்!!!!

ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”

ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக் கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”

சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது” பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”

சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”

பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”

பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.

பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இது கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம் போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன் விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால் பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின் பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம்.

1. இந்த உணர்ச்சிகள் என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.

2. இந்த உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல.

3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது.

இந்த உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும், இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை.

இது போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே
போய் விடு” என்று அனுப்பி விடுங்கள்.

இந்த உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.

நன்றி -என்.கணேசன் (2010)(மீள் பதிவு)

மனம் மகிழுங்கள் தொடர். ஆறாத காயங்களை ஆறவைப்பது எப்படி?

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?

”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.
“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார். ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமே யொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொரு வரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை. இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

நன்றி: விகடன்
-என்.கணேசன்(2010)

Aug 29, 2011

மனதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்?

மனம் மகிழுங்கள் தொடர் :
னதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்
அவர் எதிர்பார்த்தபடி அவர் வாழ்க்கை அமையவில்லை; அவர் எண்ணப்படி பல விஷயங்கள் நடைபெறவில்லை என்று அர்த்தம். அவரது மகிழ்வின்மைக்குக் காரணம் தேடினால் அடிப்படை இதுவாகத்தான் இருக்கும்.. எனவே அவர் என்ன செய்கிறார்? தம் மனதில் மகிழ்விற்கு "நோ வேகென்ஸி" போர்டு மாட்டிவிட்டு வருத்தம், சோகம், அயர்வு இப்படி பலவற்றையும் வாடகையே இல்லாமல் குடியமர்த்திக் கொள்கிறார்.
சரி! எதிர்பார்ப்பு என்பது என்ன? அது வயது, பால், வாழ்க்கைத்தரம் போன்றவற்றைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் ஒன்றாகும்.
 
குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஓர் எளிய வட்டத்திற்குள் நிற்கும் பீட்ஸா, ஐஸ்க்ரீம், வீடியோ கேம்ஸ் இப்படி ஏதாவது ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு நிறைவேறவில்லை என்றால், அடம், அழுகை, பிடிவாதம் இத்தியாதி. ..... எதிர்பார்த்தது கிடைத்துவிட்டால் பார்க்கவேண்டுமே அவர்கள் மகிழ்ச்சியை.  இதையெல்லாம் பார்க்கும் ஒரு பெண் "இதென்ன சிறுபிள்ளைத்தனம்?" என்பார். ஆனால் அவர் எதிர்பார்த்த டிஸைனில் புடவை, நகை கிடைக்கவில்லை அல்லது அதற்குக் கணவர் ஓக்கே சொல்லவில்லை என்றால் மகிழ்ச்சி தொலைந்து முகம், "உம்". கணவர்கள் எதிர்பார்ப்பு வேறு ரகம். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நாலு கால் ஆசனம், பணம், பினாமி பெயர்களில் சொத்து என விரியும்.. இப்படி எதிர்பார்ப்பு என்பது எண்ணற்ற வகையில் ஆளுக்கேற்ப மாறுபடும்; அது நிறைவேறாத போது அதற்கேற்ப ஏமாற்றமும் மாறுபடுகிறது; அதற்கேற்ப மன மகிழ்வும் தொலைகிறது.

இவையனைத்தும் உணர்த்தும் உண்மை - நினைத்ததெல்லாம் நிறைவேறிய முழு மனிதரென்று எவருமே உலகில் இல்லவே இல்லை என்பதையே!
 
"எனவே கனவான்களே, நான் எப்பொழுது மகிழ்வடைவேன் என்றால்..."என்று ஒரு கால நிர்ணயம் செய்து கொள்வது அபத்தம். உலக வாழ்க்கை முழு நிறைவற்றது என்றானபின், சில சமயம் உற்சாகம், சில சமயம் ஏமாற்றம், சில சமயம் வெற்றி, சில சமயம் தோல்வி என்பது இயற்கை விதி. "இன்பம் பாதி, துன்பம் பாதி, இரண்டும் சேர்ந்த கலவை நான்" என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது நாடக மேடையாக இருக்கலாம். நாமெல்லாம் நடிகர்களாக இருக்கலாம். அதற்காக, நாடகம்போல் அனைத்துக் காட்சிகளும் முடிந்து இறுதியில் சுபம் என்று திரை இழுத்து மூடும்போது கைதட்டி மகிழலாம் என்று காத்திருந்தால், நமது வாழ்க்கை நாடகம் முடிந்திருக்கும். ஏனெனில் அது ஒரே ஒரு காட்சி மட்டுமே. மறுநாள் அடுத்தக் காட்சி கிடையாது. பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொள்வதுபோல் மகிழ்ச்சி வந்ததும் மகிழ்ந்து கொள்ளலாம் என்பது வாழ்க்கையில் நடக்காது. மகிழ்ச்சி என்பது ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை நாம் நடந்து போய் அடைவதற்கு. கவலைகளெல்லாம் முடிந்து, "அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்" என்றும் மகிழ்வடைய முடியாது.

மகிழ்வு என்பது ஒரு தீர்மானம். அந்தத் தீர்மானத்தை நாம் உளமாற எடுக்க வேண்டும். முடிந்தது விஷயம். சிக்கலெல்லாம் அந்தத் தீர்மானத்தை எடுப்பதில்தான். நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நகரும் ஒவ்வொரு வினாடியும் சந்தேகமேயின்றி உணர்த்தும் ஒரு விஷயம் நமது வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறது என்பதைத்தான். பிறந்த நொடியிலிருந்து நமது நெஞ்சில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது "கவுண்ட் டௌன்" (count down) கடிகாரம். அதிலுள்ள ஒரே சௌகரியம், கவுண்ட் டௌன் எண்ணிக்கை நமக்குத் தெரியாது என்பது மட்டுமே. ஆயினும் இதில் நாம் உணர வேண்டியது இப்புவியில் நமது அவகாசம் குறைவு என்பதையே!. புவியின் வரலாற்றையும் இன்னமும் சுற்ற அதற்குள்ள வாய்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது வாழ்க்கை அவகாசம் ஒரு புள்ளி மட்டுமே.

இதைச் சரியானபடி கருத்தில் கொண்டால் போதும். நிகழ்காலத் தருணத்தை, நொடியை உபயோகமாய், மகிழ்வாய் மாற்ற முடியும். இதற்குக் குதர்க்கமாய் அர்த்தம் புரிந்து கொண்டு, "இவ்வளவு தானே அவகாசம்! ஓர் ஆட்டம் ஆடிவிடலாம்" என்று வாழ்க்கையில் கெட்டக் குத்தாட்டம் போட்டால் அடைவது மகிழ்ச்சியில்லை; அது கானல் நீர்! உலக வாழ்க்கை முழு நிறைவற்றதே. ஆனால் உலகில் அழகும் அற்புதமும் நிறைந்துள்ளன. இறைவன் படைக்கும் போதே நிரப்பி வைத்தவை அவை. எனவே நாம் மகிழ்வாயிருக்க, வரிந்துகட்டி இறங்கி உலகில் அனைத்தையும் செப்பனி்ட்டால்தான் ஆச்சு என்று கவலைப்படாமல், நமது கண்களால் நாம் சரியான கோணத்தில் பார்த்தாலே போதுமானது. அதற்காகத் திருடன் செயினை லவட்டிக் கொண்டு ஓடும்போது, அவன் ஓடும் அழகை ரசிப்பது மடமை. தீமையைத் தவிர், தடு என்பதையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சிந்தனையாளர் கூறினார் - "ஒரு ரகசியம் சொல்கிறேன், நீ மனம் மகிழ வேண்டுமானால், மனம் மகிழ்."  என்ன புரிகிறது?  யாரும் நம் வீட்டுக் கதவைத் தட்டி "இந்தா மகிழ்வு" என்று இலவச டிவி, வேட்டி, சேலை போல் தரப் போவதில்லை, நாமும் கடைக்குச் சென்று ஒரு கிலோ மகிழ்வு கொடுப்பா என்று வாங்கி வரப் போவதில்லை.

எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்பனவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டு, மகிழ்வு எனும் தீர்மானத்தை மனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனில் மனம் மகிழலாம்.
நன்றியுடன் மீள்பதிவு : -( நூருத்தீன்-பதிவு -17)   மேலும்பயணிப்போம் ..... அன்புடன்..  கே எம் தர்மா....

Aug 28, 2011

காமத்தை கடக்க இதோ ஒரு வழி...!


காமத்தை கை விடுங்கள் அப்போதுதான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள் ஞானிகளும் சித்தர்களும் கூட இதை தான் சொல்கிறார்கள் நமது அன்றாட வாழ்வில் அனுபவத்தில் காமம் என்ற பாலுணர்ச்சி புனிதமான சிந்தனைகள் நமக்குள் ஏற்படாமல் தடை செய்வதை காண்கிறோம்

நிறையே பேர் சொல்கிறார்கள் மனம் நிம்மதியில்லாமல் தவிர்க்கிறது தரையில் விழுந்த மீனை போல் துன்பத்தால் துடிக்கிறது அதை மாற்ற கடவுளை வணங்குகிறேன் ஒரு நிமிடம் மட்டும் ஏற்படுகின்ற இறை சிந்தனை நிம்மதியை தருகிறது மூச்சி விட காற்றியில்லாமல் தவித்தவனுக்கு தென்றல் காற்று வந்து தடவி கொடுத்தது போல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்தம் இதயத்தை சூழ்கிறது ஆனால் அது ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான் அது நிலைக்கிறது தவிர அடுத்த நிமிடமே மனம் காம சிந்தனையில் விழுந்து விடுகிறது குளித்து முடித்தவன் கூவத்தில் விழுவது போல் சிந்தனை எங்கும் சாக்கடை நாற்றம் வீசுகிறது பழையப்படி துயர மேகங்கள் சூழ்ந்து இதைய வீட்டை இடி இடித்து மின்னல் வெட்டி நடு நடுங்க செய்கிறது ஆகவே காமத்தை ஒழிக்காத வரை மனிதனுக்கு கதி மோட்சம் இல்லை என்று பேசுவதை அன்றாடம் கேட்கிறோம்.

காமம் என்பது இவ்வளவு கொடியது என்று மனிதனுக்கு தெரிந்திருந்தாலும் கூட அவன் ஏன் மீண்டும் மீண்டும் அதையே நாடுகிறான் எத்தனை பேர் பிடித்து தடுத்தாலும் அதன் மீதே ஏன் போய் விழுகிறான் சிலர் சொல்கிறார்கள் காம உணர்வு என்பது மலம் கழிப்பது போல சிறுநீர் கழிப்பது போல ஒரு இயற்கை உந்துதல் தான் பெற்ற பிள்ளையை பறிகொடுத்தால் கதறி அழுவது எப்படி இயற்கையானதோ அப்படி தான் காமமும் அதை ஆபாசம் என்று நினைப்பதும் புனித வாழ்வுக்கு தடை என்று கருதுவதும் முட்டாள் தனமாகும் என்கிறார்கள்.

இது சரியான கருத்து என்பதில் மாற்றமில்லை கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவருதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.

தலையை நுழைக்க விட்டால் ஒட்டகம் வீட்டுக் கூரையையே தின்றுவிடும் என்பார்கள் காம உணர்வும் சிறிய நெருப்பு துண்டாக மனதிற்குள் விழுந்து உடல் முழுவதையுமே பற்றி எரிய செய்து விடுகிறது இந்த நெருப்பில் தர்மம் ஒழுக்கம் தொண்டு போன்ற நற்பண்புகள் எல்லாம் சாம்பலாகி விடுகிறது ஆனாலும் மனது மீண்டும் மீண்டும் அந்த நெருப்பில் குளிர்காய விரும்புகிறதே அது ஏன் என்று நமது அறிவு மனம் விடாமல் கேட்கிறது

பொதுவாக மனிதர்களாகிய நாம் ஒன்று நடந்து முடிந்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம் அல்லது நடக்கப் போவதை பற்றி கற்பனை தேரில் பறந்து கொண்டிருப்போம் நிகழ்காலத்தில் அதாவது இந்த வினாடியில் நாம் வாழுகின்ற வாழ்க்கையை மனம் ரசனையுடன் நோக்காது இதனால் தான் நாம் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறோம் ஆனால் காம வசப்படும் போது காம உறவில் இடுப்படும் போது நமது மனம் கடந்த காலத்தை மறக்கிறது எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை கை விடுகிறது நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறது இப்படி நிகழ்காலத்தில் மனமானது நிலைக்கும் போது தான் நமக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஊற்றின் கதவுகள் திறந்து கொள்கிறது 


நமக்குள் இருக்கும் ஆனந்த ஊற்று திறக்கப்பட்டு அதன் ஒளிவெள்ளம் நம்மை குளிப்பாட்டுவது சில வினாடிகள் தான் ஒரு நீர்குமிழி போல கண நேரத்தில் தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகிறது அதற்கு காரணம் நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுகிறது இந்த உண்மை நமக்கு தெரிவதில்லை அதனால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்குடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம் காமம் மட்டுமல்ல எந்த செயலை நாம் செய்தாலும் அதில் நமது மனது ஆழ்ந்து விடுமானால் அதுவே நாம் தேடுகின்ற இன்பத்தை தரவல்லது இந்த உண்மை பலருக்கு தெரிவதில்லை அதனால் தான் காம சேற்றில் காலமெல்லாம் மூழ்கிகிடக்கிறார்கள்.

காமத்தில் கிடைகின்ற சுகமானது வெளிப்பொருளால் அல்லது மற்ற பாலின உடலால் உறவால் கிடைப்பது இல்லை அது நமக்குள்ளேயே மறைந்து கிடக்கும் மகிழ்ச்சிதான் என்பதை பலர் அறிந்து கொண்டால் நிறைய பேர் காம விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவார்கள் இந்த ரகசியம் பலருக்கு தெரியாமல் தான் காமத்தை அடக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.


காம உணர்வை அடக்க முயல்கின்ற எவரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும் மனித குணங்களின் இயற்கை சுபாவம் என்னவென்றால் எந்த உணர்வை அடக்க அழிக்க முயற்சி செய்கிறிர்களோ அந்த உணர்வு பல மடங்கு வேகத்தோடு பதுங்கி இருந்து சீறி பாயும் என்பது தான் உண்மையாகும் எனவே காம உணர்வை அடக்க முயன்றால் அது அபாயத்தை தான் ஏற்படுத்தும்.

காமத்தை அடக்க முடியாது என்றால் அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி புலன்களை கட்டுக்குள் கொண்டுவந்தால் தானே இறை காட்சி பெற முடியுமென்று வள்ளுவரும் பதஞ்சலி மகரீஷியும் சொல்கிறார்கள் கட்டுப்படுத்தாமல் கடவுள் தரிசனத்தை பெறாமல் மானிட பிறப்பை வீணடித்துக் கொள்வாதா என்று சிலர் பதறக் கூடும்.

அவர்கள் ஒரு நிஜத்தை நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் நீங்கள் இதுவரை செய்கின்ற தியானமும் பூஜையும் அது நிகழ்கின்ற காலத்தில் காம சிந்தனைகளால் தாக்கப்படாமல் இருக்கிறதா உறுதியாக இந்த கேள்விக்கு ஆமாம் என்ற பதிலை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் தரமுடியுமா முடியாது என்றே நான் நினைக்கிறேன் காரணம் பலரின் பூஜையும் தியானமும் காம எண்ணங்களால் தடை படுகிறது என்பதே நிதர்சனமாகும் 


எனவே காமத்தை அடக்கும் எண்ணத்தையே முற்றிலும் விட்டுவிடுங்கள் தனிமையில் உட்க்காருங்கள் உங்கள் மனதில் எழும்புகின்ற கட்டுப்பாடற்ற காம சிந்தனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு உங்களுக்குள் நீங்கள் தனித்திருந்து அந்த சிந்தனை எதுவரை போகிறது என்று கண்காணியுங்கள் எதற்கும் ஒரு எல்லை உண்டு ஒரு முடிவு உண்டு நம் மனதிற்குள் எழும்புகின்ற காம விகாரங்கள் ஒரு நிலையில் செயல் படாமல் நின்று விடும்.

அதாவது சிந்தனை ஓட்டம் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் ஆடாமல் அசையாமல் நகர முடியாமல் நின்று விடும் அப்போது உங்கள் மனதை பிடியுங்கள் அடம்பிடிக்காமல் சண்டித்தனம் செய்யாமல் நீங்கள இழுத்த இழுப்புக்கு மனம் கூடவே வரும் அந்த மனதை தரை விரிப்பாகப் போட்டு தியானம் செய்ய பழகுங்கள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் போகப் போக எல்லாம் சுலபமாகி விடும்.

தியானம் செய்யும் போதே காம எண்ணம் ஆட்டிப்படைக்கிறதே அதை தடுக்காமல் தியானத்தில் எப்படி அமர முடியும் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது உங்கள் மனது காமத்தை எண்ணுகிறதா அதை பற்றி கவலை படாதிர்கள் ஐயோ இப்படி நான் கீழ் பிறவியாக இருக்கிறேனே என்று வருத்தப்படாதிர்கள் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் கூட ஆரம்ப காலம் இப்படித் தான் இருக்கும் காலம் கனியும் போது தான் எல்லாம் கூடி வரும் எனவே மனதுக்குள் ஓடும் காம வண்டியை ஓடும வரை விட்டு விட்டு அதை கவனிக்காமல் சட்டை செய்யாமல் தியானம் செய்யுங்கள் ஓடி ஓடி அந்த வண்டி ஒரு நாள் அச்சாணி கழன்று விழுந்து விடும் திரும்பவும் அது ஓடவே ஓடாது.

அதாவது காம எண்ணத்தை அடக்க முயல வேண்டாம் அதில் மனிதர்களால் வெற்றி பெற இயலாது காமத்தை கடக்க முயலுங்கள் அதுவே அதை சுலபமாக வாகை சூடும் வழியாகும் என்று சொல்கிறேன் ஒரு குழந்தையை தொட்டால் உங்களுக்கு என்ன உணர்வு வருகிறதோ அதே உணர்வு ஒரு குமரியை தொட்டாலும் வர வேண்டுமென்றால் காமத்தை கடக்க முயற்சித்தால் தான் நடக்கும் காமத்தை கடக்க முயல்வது கடினமான ஒன்றல்ல செய்ய வேண்டுமென்ற மன உறுதி இருப்பவர்கள் நிச்சயம் செய்து முடித்து விடலாம்.

காமத்தை கடக்க ஒரே வழி அதை அலச்சியம் செய்ய வேண்டும் அதாவது மனதை நிகழ்காலத்தில் வைக்க பழகுங்கள் குளிக்கும் போது அலுவலக சிந்தனையோ பூஜை அறையில் மளிகைக்கடை சிந்தனையோ வேண்டாம் அந்த அந்த நேரத்தில் அந்த அந்த செயலில் மட்டுமே சிந்தனையை வைக்க பழகுங்கள் புளியம் பழமும் தோடும் கனிய கனிய வேறு வேறாக பிரிவது போல் மனதிலிருந்து காம சிந்தனை தானாக விலகி விடும்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள் அதே போல தான் காமமும் தன்னை கண்டு பயப்படுகின்றவனை துரத்திக் கொண்டே ஓடும் அதை ஓட விட்டுவிட்டு ஓரமாக நில்லுங்கள் காம சிந்தனை மாறி கடவுள் சிந்தனையில் ஐக்கியமாவிர்கள்.
மீள்  பதிவு: நன்றியுடன் மானசீக குருவின் ஆசியுடன்...

Aug 17, 2011

'உங்கள் அனுமதியில்லாமல் யாராலும் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது'

இந்த எலிக்கு பசி கொஞ்சம் அதிகம் தான்! 
சிறுத்தைகள் (Leopard) பற்றிய ஆராய்ச்சிக்காக, கசேய் குட்டெரிச் (Casey Gutteridge) எனும் மாணவர் ஒருவர் இங்கிலாந்தின் Hertfordshire பல்கலைக்கழக விலங்குகள் சரணாலயத்திற்கு சென்றார்.ஒரு எலி, சிறுத்தைக்கு முன் நின்று இறைச்சித்துண்டு ஒன்றை நுகர்ந்து கொண்டிருப்பதை தற்செயலாக அவதானித்தார்! 'சிறுத்தையை அது கவனிக்கவே இல்லை!' என்றவர், சட்டென தனது கமெராவுக்குள்  இந்த காட்சியை பதிவு செய்துள்ளார். எலியின் செயல் இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதும், சிறிது நேரத்தில் இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதையும் அவர் எடுத்த புகைப்படத்தில் பாருங்களேன்!


எலியை அங்கிருந்து மெதுவாக அகற்றி தன் உணவை எடுக்க சிறுத்தை எவ்வளவு முயற்சி செய்தும் எலி அசையவே இல்லையாம்!பாவம் சிறுத்தை! எலி சாப்பிட்டு முடிக்கும் வரை பொருத்திருந்ததுதான் மிச்சம்! பெண் சிறுத்தையாம், ஷீனா என்பது அதன் பெயர்! பிறந்து நான்கு மாதத்தில் இந்த வனவிலங்கு சரணாலயத்திற்கு எடுத்து வந்துவிட்டார்களாம்.  ரொம்ப அப்பாவித்தனமான ஆனால் நல்ல சிறுத்தையென சிரித்துக்கொண்டு கூறுகிறார் கசேய்! இந்தக் காட்சியை படமாக்கிய அவருக்கு நன்றி கூறி அதன் உரிமையை வாங்கியிருக்கிறது குறித்த பல்கலைக்கழகம்!




'உங்கள் அனுமதியில்லாமல் யாராலும் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது'.....

எலியின் செயல் ஒரு அழகான அர்த்தத்தை சொல்லிச் செல்கிறது!அன்புடன் கே எம் தர்மா...




Jul 24, 2011

மனம் மகிழுங்கள்-6 மனப் பக்குவம் என்பதென்ன?



மனம் மகிழுங்கள்-6
கூடுவாஞ்சேரியில் சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி, "உலகப் பொருளாதார நிலை சரியில்லையாம்.அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல், பேங்க் திவாலா கிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான் ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்" எனக் கூலாகச் சொல்லிவிட்டார். என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும் கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம்அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction. 

வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப் போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?" இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார். சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக் காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார். இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக் காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு துவண்டுவிட, மற்றவர் போனால் போகட்டும் போடாஎன்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான் நிர்ணயிக்கும்.

"எல்லாம் எல்லை மீறிப் போச்சு! இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை!" என்று நினைத்தால் நாம் அவ்விஷயத்தில் நமது கட்டுப்பாட்டை இழக்கிறோம். அந்தக் கட்டுப்பாட்டிழப்பு நமது முடிவு! "நான் அம்பேல்!" என்று கையைத் தூக்கிவிடுவதால் ஏற்படுவது. போராட்டம் இல்லையெனில் அது என்ன வாழ்க்கை? மன மகிழ்வுடன் இருப்பதென்பது, எப்பொழுதுமே எளிதான ஒன்றில்லை. வாழ்க்கைப் பாதையில் காணும் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அதன் கடுமையும் மாறுபடும். நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் அது! சில சமயங்களில் நம்முடைய மனவுறுதி, விடாமுயற்சி, சுயக் கட்டுப்பாடு ஆகியனவற்றையெல்லாம் படையாகத் திரட்டி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் உருவாவதுதான் நம் மனப் பக்குவம்.

மனப் பக்குவம் என்பதென்ன?

அதுவே  தனி சப்ஜெக்ட் ஆக விரியும்.. இந்த இடத்தில் நமக்குத் தேவையான மனப் பக்குவத்தை மட்டும் பக்குவமாய்ப் பார்த்துவிடுவோம்.  இங்கு மனப் பக்குவம் என்பதன் பொருள் நமது மன மகிழ்விற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வது ஆகும். நம்முடைய சுற்றமும் நட்பும் சூழ்நிலையும் கூட நம் மன மகிழ்வைச் சிதைக்கக் கங்கணம் கட்டிக் களத்தில் இறங்கலாம். ஆனால் ஒவ்வொருவரின் மனதும் யாருடையது? அவரவருடையது! அதன் மகிழ்வு யாருடையது? அவரவருடையது! எனில், அதன் பொறுப்பு யாருடையது? அதுவும் அவரவருடையதே!  அப்படியானால் அவரவரும் தங்களிடம் இருப்பதில் தானே கவனம் செலுத்த வேண்டும்? அந்த மனப் பக்குவம் வர வேண்டும் என்கிறார்கள். மேலும் சற்று விளக்கமாய்ப் பார்ப்போம்.

நமது மனதில் ஓடக்கூடிய எண்ணங்கள் யாருடையவை?

நம்முடையவை! இன்று இதையெல்லாம் நீ நினைக்க வேண்டும் என்று யாரும் நமது மூளைக்குள், கணினியில் ஃபீட் செய்வதுபோல் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போக வில்லையே! நம் மனதில் ஓடும் எண்ணங்களை யெல்லாம் நாமாகத் தானே சிந்தித்து ஓட்டிக் கொள்கிறோம். எனவே நமது மகிழ்ச்சிக் கான ஆதிக்கம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஜவுளிக் கடைகளில் பெண்கள் தேடித் தேடி நல்ல டிஸைன் துணிகளை எடுப்பது போலத் தேடித் தேடி மகிழ்வான எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில நம் கவனத்தைச் செலுத்தப் பழக வேண்டும். அந்த மனப் பக்குவம் வந்து விட்டால் போதும், வாழ்க்கையின் நிகழும் பெரும்பாலான அநாவசிய நிகழ்வுகளை உதாசீனப்படுத்தி விட்டோ, நிராகரித்து விட்டோ, மனம் மகிழலாம். 

ஆனால் பெரும்பாலும் நடப்பவை என்ன? நேர்மாறானவை! அலுவலகத்தில் ஒரு முக்கிய ப்ராஜெக்ட். இராப் பகலாய் உழைத்துச் சாதித்து விட்டீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டியிருப்பார்கள். நீங்களும் மகிழ்வடைவீர்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும், பர்மா பஜாரிலிருந்து நல்ல பூதக் கண்ணாடி ஒன்று வாங்கி வந்து நெற்றியில் மாட்டிக் கொண்டு, உங்கள் ப்ராஜெக்ட்டை அலசி மேய்ந்து, தருமியிடம் நக்கீரன் சொன்னதுபோல், "உமது ரிப்போர்ட்டில் ஒரு குற்றம் இருக்கிறது!" என்று மட்டம் தட்டியோ இகழ்ந்தோ பேசிவிடுவார். போச்சு! எல்லாம் போச்சு!

அத்தனை பேரின் பாராட்டும் நல்வாழ்த்துகளும் மறந்துபோய், அந்தக் கீறலும் கீரனும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அந்த எண்ணமே நாள், வார, மாதக் கணக்காய் உங்கள் மனதில் ஓடிக்கொண்டே யிருக்கும். வெற்றிகரமான 25ஆவது வாரம் போஸ்டர் ஒட்டாத குறை! ஒரு கெட்ட அனுபவம், இகழ்ச்சி, யாரோ எவரோ போகிற போக்கில் உங்களைச் சீண்டிவிட்டுப் போகும் ஒரு பேச்சு, இப்படி ஏதாவது ஒன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இடம்பிடித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மகிழ்வைக் கொன்று விடும். அதற்கு இடமளிக்கக்கூடாது. நம் மனதின் கட்டுப்பாடு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

நம்மில் பலரும் பாராட்டைச் சில நிமிடங்களுக்கும் இகழ்ச்சியை ஆண்டாண்டிற்கும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அதன் பலன்?

நாம் குப்பை சேகரிப்பாளர்களாக ஆகிவிடுகிறோம். தன் முகத்தை குறிவைத்துத் தூக்கி எறியப்பட்ட ஷுவையே புஷ் "ஷு" எனத் தட்டிவிட்டுச் சென்றுவிட, இருபது முப்பது வருடங்களுக்கு முன் நம் மீது வீசப்பட்ட குப்பைகளையெல்லாம் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டு "மறப்பேனா அதை?" என்று மல்லுக்கட்டினால் எப்படி?  "இருபது வருஷமாச்சு. இன்னிக்கும் அவன் சொன்னது மறக்கலே! என் மனசுல அப்படியே இருக்கு!" என்பவர், முந்தாநாள் எதிர் வீட்டுக்காரர் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியதை மறந்தே போயிருப்பார். ஆனால் பழைய குப்பை அவரது மனதை அப்படியே ஆக்கிரமித்து இருக்கும். ஆம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எளிய உபாயம் உண்டு. நாளைக் காலை ஆயுள் பாக்கியிருந்து எழுந்தால், ஒரேயொரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அது, "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!". விவிதபாரதியில் ஒலிபரப்பாகும் பாடல் இல்லை; நீங்கள் எடுக்க வேண்டிய உண்மையான தீர்மானம். என்றாவது ஒருநாள் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே எல்லோரும் பிரயாசைப் படுகிறோம். அந்த என்றாவது ஏன் இன்றாக இருக்கக் கூடாது? உணர்ந்து பாருங்கள். மாற்றம் தென்படும். "கடுந்துயரம்", "மனப்பாரம்", "தனிமை" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் தீர்ந்தபின் மகிழ்வடையலாம் என்பதெல்லாம் அல்லாமல் ஒரே ஒரு முடிவு மட்டும் தேவைப்படுகிறது. அனைத்தையும் ஒதுக்கி ஓரமாய் வைத்துவிட்டு "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!" வாழ்வின் நிறமே மாறிவிடும்!மன மகிழ்வுடன் வாழ்வதென்பது, பூமி மாசடைய ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடினமாக இருந்துவந்த செயல்தான். அதற்காக மகிழ்வைத் தொலைப்பதா? வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள என்ன செய்வோம்? குப்பையைக் கடாசிவிட்டு, பயனுள்ள பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்வோம். அதைப் போல்தான் மன மகிழ்வும். மனதிலுள்ள குப்பையை எறிந்துவிட்டு, நல்லவற்றை மட்டுமே சுமந்தால் போதும். கண்ணாடி சன்னல் வழியாக இருவர் வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னலுக்கு வெளியே உள்ள அழகிய தோட்டம் ஒருவரின் மனதைப் பறித்தது; அங்கிருந்த பூக்கள் புத்துணர்வூட்டின. மற்றவருக்கோ சன்னலில் படித்துள்ள அழுக்கும் பிசுக்கும் மட்டுமே கண்ணை உறுத்தியது. தோட்டமும் பூக்களும் அவர் கண்ணில் படவே இல்லை.

நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே நமது மனம் காணும். அதுதான் சூட்சமம். ..தொடருவோம்...