Search This Blog

Showing posts with label இந்து மத வரலாற்று தொடர். Show all posts
Showing posts with label இந்து மத வரலாற்று தொடர். Show all posts

Feb 19, 2012

கடவுளை பார்க்க அனுமதி வேண்டாம் ! இந்து மத வரலாற்று தொடர் 18

டவுள் எப்படிப்பட்டவன்? அவனது குணம் எப்படியிருக்கும்? என்று நம்மைப்போன்ற சாதாரண ஜனங்கள் கேள்வி கேட்டால் அருளாளர்களும், ஞானிகளும், கடவுள் அன்பு மயமானவர். கடவுள் கருணை வடிவானவர். தாயினும் சாலப்பரிவுடைய பாசத்திரு மூர்த்தி என்று பதிலைத் தருகிறார்கள். கடவுள் அன்பே வடிவானவர். என்பதில் நமக்கு சந்தேகமில்லை உலகிலுள்ள எல்லா மதங்களும், எல்லா மக்களும் அவரை அப்படித்தான் நம்புகிறார்கள். இந்த உலகத்தின் நிகழ்வுகளை மிக கூர்மையாக பார்க்கும் போது கடவுளின் அன்புத் தன்மையை நம்மால் உணர முடிகிறது. நகக்கண்ணுக்குள் மறைந்து கொள்ளும் அளவிற்கே ஒரு சிறிய எறும்பை படைத்து அது உணவைப்பற்றி கடித்து, மென்று தின்பதற்காக கண்ணுக்கே தொரியாத பற்களையும் படைத்துள்ளான் எனபதை அறியும் போது அவனது ஆற்றலை மட்டுமல்ல அன்பையும் எண்ணி வியப்பு வருகிறது.
சாதாரண மனித சமூகத்தை பார்த்தே அறியாத ஒருவன் அடர்ந்த காட்டிற்குள் தவம் செய்தானாம், அவனுக்கு தவம் செய்ய கற்றுக் கொடுத்த ஞானி நீ சிறிது கூட உலக அனுபவமே இல்லாதவனாய் இருக்கிறாய். ஆகவே நீ காட்டை விட்டு நாட்டுக்குள் சென்று உலக அனுபவத்தை சம்பாதித்துவா என்று சொல்லி கையில் திருவோட்டை கொடுத்தானாம்.  திருவோட்டை கையில் வாங்கிய அந்த இளம் சாது இது என்ன? என்று கேட்டானாம். நாட்டிற்குள் கனியும் கிழங்கும் கிடக்காது பசியாற உணவை நீ கேட்டுத்தான் பெற வேண்டும், அதை வாங்கிக் கொள்ளவே இந்த பாத்திரம் என்று பதில் சொல்லி அனுப்பினானாம்.

உலக அனுபவத்தை பெற காட்டை விட்டு வெளியேறினான் இளம் சாது. ஒரு சிறிய கிராமத்திற்குள் நுழைவதற்கு முன்னால் மண்குடத்தில் தண்ணீர் எடுத்துவரும் இளம் மாது ஒருத்தியை அவன் பார்த்தான். இதற்கு முன் அவன் பெண்ணையே பார்த்தது இல்லை. பெண் என்ற ஒரு சிருஷ்டி உலகத்தில் இருக்கிறது என்பது அவனுக்கு இதுவரை தொரியாது. இப்போதுதான முதல் முறையாக பெண்ணை பார்க்கிறான்.வியப்பால் கண்கள் விரிய அந்த பெண்ணிடம் நீ யார் என்று கேட்கிறான். அவள் இந்த காலத்து பெண் அல்ல நான் கோபால்சாமியின் மகள் என்று பதில் சொல்ல, அவள் அந்த காலத்தவள் என்பதனால் அறிவுடையவளாய் இருந்தாள். தன் எதிரே நிற்பவன் யார்? அவன் தகுதி என்ன? என்பதை அங்கலட்சணங்களை வைத்தே முடிவு செய்து நானும் உன்னைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் ஆனால் நீ ஆண் இனம். நான் பெண் இனம் என்று பதில் சொன்னாள்.

அவளை தலையிலிருந்து கால்வரையில் அணு அணுவாக பார்த்து அறிந்த அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இவளுக்கு என்னைப் போலவே இரண்டு கண், ஒரு மூக்கு, கால்களும், கைகளும் என்னைப் போலவே இரண்டு இரண்டாக இருக்கிறது. ஆனால் மார்பு மட்டும் என்னைப் போல் சமமாக பரந்து விரிந்து இல்லையே? உயர்ந்து இருக்கிறதே ஒரு வேளை காட்டிலே கட்டெறும்பு கடித்தால் கடித்த இடம் வீங்கி விடுமே அதே போலவே இவளையும் மார்பில் ஏதோ பெரிய கட்டெறும்புகள் கடித்து வீங்கியிருக்குமோ? ஐயோ பாவம் வலியால் இவள் துடித்துக் கொண்டிருப்பாளே என்று மனதிற்குள் கசிந்துருகி அவன் அவளது மார்பை சுட்டிக்காட்டி இது என்ன? என்று கேட்டான்.

தனது கண்ணெதிரே நிற்பது அறிவைத் தேடும் குழந்தை என்பதை சட்டென்று புரிந்து கொண்ட அவள் அப்பனே ஆணுக்கு இல்லாத குழந்தை பெறும் சக்தியை பெண்ணுக்கு தந்திருக்கிறான். இறைவன். அப்படி குழந்தை பெறும் போது பச்சைக்குழந்தை கடினமான உணவுகளை சாப்பிட முடியாதல்லவா? அதனால் அந்தக் குழந்தை பசியாறுவதற்கு பால் கொடுக்கும் பாத்திரம் இது என்று பதில் சொன்னாள். அவள் பதிலை கேட்ட மறுகணமே கையில் இருந்த திருவோட்டை தூக்கியெறிந்தான் இளையசாது. இருந்த ஒரு ஓட்டையும் எறிந்துவிட்டாயே? உணவு உண்ண என்ன செய்வாய் என்று அந்த பெண் கேட்டாள். அதற்கு அம்மா என்றோ பிறக்க போகும் உன் குழந்தைக்காக பால் குடிக்கும் பாத்திரத்தை இப்போதே படைத்து வைத்திருக்கும் இறைவன் எனக்கு மட்டும் பசியாறுவதற்கு வழி வைக்காமலா போய்விடுவான். இறைவனின் கருணையை உணர்ந்த பிறகும் சுய பாதுகாப்பிற்காக முன்னேற்பாடுகளை செய்பவன் அறிவில் குறை உடையவன். என்று பதில் சொன்னானாம்.


கடவுளின் கருணையை அறிந்து எண்ணி பாருங்கள். அவனது கருணா சாகரத்திற்குள் ஞான இமயங்கள் மறைந்திருப்பதும் நமக்கு நன்றாக தெரியும். கடவுளின் இத்தகைய கருணா விலாசத்தை சாமான்யனும் தொரிந்து கொள்ள வேண்டுமென்று ஸ்ரீ வைஷ்ணவம் விரும்புகிறது. அதற்காக முழுமுதற்கடவுளான நாராயணன் தனது பக்தர்களை எப்படியெல்லாம் அன்பு காட்டி அரவணைக்கிறான் என்று விபரம் தெரிவிக்கிறது.

உங்கள் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் முதன் முறையாக கன்று ஈனும் பசுவை பார்த்து இருக்கிறீர்களா? பிரசவ வலியால் அங்குமிங்கும் தாவும் தடுமாறும் நிற்கவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் அவஸ்தைபடும். வேதனை உச்சத்தை தொடும் போது கால்களை பரப்பி தலையை மேல் தூக்கி அம்மா என்று அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பும். அந்த குரல் எழுப்பும் நேரத்திலேயே மூச்சை உள்வாங்கி தனது பலத்தை எல்லாம் கர்ப்பைக்குள் செலுத்தி உள்ளே புரண்டு கொண்டிருக்கும் இளம் கன்றை வெளியில் தள்ளும். வெட்டியவுடன் நுங்கு வெளியில் வந்து விழுவது போல் குட்டி பூமியில் வந்து விழும். கன்று குட்டியின் உடம்பு முழுவதும் ஒட்டியிருக்கும் வழும்பினை பசு தனது நாக்கால் நக்கியெடுக்கும். அது தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயலும் போது கீழே விழுந்துவிடாமல் தனது முகத்தால் தாங்கிபிடிக்கும். மடியில் கனத்து சுரக்கும் பாலை கன்று குட்டி உறிஞ்சி குடிக்கும் போது கண்களை மூடி தான் இதற்காகவே ஜென்மம் எடுத்ததுபோல தன்னை மறந்த மோனத்தில் திளைத்து நிற்கும்.

தனது அருமை குட்டியை இடைஞ்சல் படுத்த கஷ்டப்படுத்த யாராவது முனைந்தால் சாதுவான பசு தனது பிடரியை குலுக்கி கொண்டு கொம்புகளால் முட்டித்தள்ளி சீறி எழும்பும். தான் தாக்கப் போவது ஆற்றல் பொருந்திய மனிதனா? கொடிய சிங்கமா? என்பதை கூட சிந்திக்காது. தன் குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு சிந்தனை மட்டுமே அதற்கு மேலோங்கி நிற்கும்.
இறைவனும் அப்படித்தான் மூன்றடியால் இந்த உலகத்தையே அளந்த திருமால் சதையாலும் ரத்தத்தாலும் உருவான அற்ப மனிதன் தன் மீது பக்தி கொண்டுவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மனிதன் மீது படிந்திருக்கும் பாவ அழுக்குகளையும் பாச மாசுகளையும் பொருட்படுத்தாமல் பக்தர்களை விரும்பி ஏற்று மகிழ்வான். பக்தனுக்கு ஒரு சிறிய துக்கம் என்றால் தனக்கே அது வந்தது போல் பாதுக்காக்க ஓடிவருவான். திருமாலின் இத்தகைய இயல்பை வாச்சல்யம் என்ற பெயரால் வைஷ்ணவம் அழைத்து மகிழ்கிறது.


ஒரு அன்னை இருக்கிறாள். அவளுக்கு ஐந்தாறு குழந்தைகள் ஒரு தாயால் தனக்கு பிறந்து ஏதோ ஒரு குழந்தையிடம் மட்டும் தனி அன்பு செலுத்தமுடியாது? நிச்சயம் முடியாது. கொடிய சிங்கமானாலும் தான் ஈன்ற குட்டிகள் அனைத்தையும் சமமாக காப்பதற்கு போராடுமே தவிர ஒன்றுக்காக மட்டும் போராடாது. இந்த விலங்கே தாய்ப் பாசத்தை சமமாக பிரித்து காட்டுகின்ற போது மனிதனால் மட்டும் தனிப்பாசம் செலுத்த முடியுமா என்ன?
பாசத்திலேயே மிகச்சிறந்தது தாய்ப்பாசமாகும். அதற்கு இணையாக வேறு எதையும் கூறமுடியாது. மனைவி சொல்வாள் என் கணவனின் மேல் நான் அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறேன். அவனில்லாமல் என்னால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. அவருக்காக உயிரையே கொடுப்பேன் என்று காதல் மொழி பேசுவாள். அதே கணவனே குடித்து விட்டு அவளை உதைத்தால் சம்பாதித்ததை அவளிடம் கொடுக்காமல் மறைத்தால் அவளை விட்டுவிட்டு வேறொரு பெண் துணையை தேடினால் இந்த படுபாவி செத்து ஒழியமாட்டானா? இவன் செத்தால் தான் எனக்கு நிம்மதி கடவுள் எப்போதுதான் இவனது கைகால்களை ஒடித்து மூலையில் போடுவானோ என்று புலம்புவார்கள். மனைவி மட்டுமல்ல கணவன் காட்டும் பாசமும் இப்படி நீரின் மேல் போட்ட கோலம்தான். என்னைப் பெற்றவர்களை காலமெல்லாம் கண்களுக்குள் வைத்து பாதுகாப்பேன் அவர்களுக்காக எதையும் தியாகம் செய்வேன் என்று பாசமொழிபேசும் பிள்ளைகள் பலர் தனக்கென்று மனைவி வந்தவுடன் பிள்ளை குட்டிகள் பிறந்தவுடன் வயதான பெற்றோர்களை சுமையாக கருதி தூக்கியெறிந்து விடுவதை அன்றாடம் பார்க்கிறோம்.


ஆனால் தாய் அப்படிப்பட்டவள் அல்ல குருடாக குழந்தை பிறந்தாலும் அது எதற்குமே உதவாது என்று தெரிந்தாலும் கைவிட்டு விட மாட்டாள்.  மனைவியினை சேலையைப் பிடித்துக்கொண்டு தனிக் குடித்தனம் மகன் போனாலும் ஐயோ என் பிள்ளைக்கு ஒரு பிடிசாதம் கூட கொடுக்க முடியாத பாவியாகி விட்டேனே என்று தன்னைத் தானே நொந்து கொள்வாள் கொலைகாரணாக காம வெறிபிடித்த மிருகமாக பிள்ளை அலைந்தாலும் ஊரெல்லாம் அவனை வெறுத்து ஒதுக்கினாலும் ஏன் அந்த முரட்டுப்பிள்ளை தன்னையே கொலை செய்ய வந்தாலும் வலிய பிடித்து இழுத்துப் போட்டு மார்பில் சாய்த்து தாலாட்ட விரும்புவாளே தவிர வேண்டாம் இவன் என்று வீசி விட மாட்டாள்.

நாராயண
ரும் இப்படித்தான். ஒழுக்கம் கெட்டு ஊதாரியாய் அலைந்தாலும் தர்மத்தை அழிக்கும் தருதலையாக திகழ்ந்தாலும் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினாலும் மனிதனின் குற்றங்களை களைந்து குணத்தை மட்டுமே பார்ப்பான். சூரியனின் வெளிச்சம் எப்படி எல்லா பொருளையும் சமமாக தீண்டுமோ அதைப்போலவே திருமாலின் திருவருள் எல்லா உயிரையும் சமமாக பார்க்கும் நாராயணனின் சன்னதி முன்பு பொருளை கொள்ளை அடித்தவனும் கடவுளின் அருளை கொள்ளை அடித்தவனும் ஒன்றேதான். கடவுளே வேண்டாம் அவன் கருணையே தேவையில்லை என்று மதம் கொண்டு மனிதர் கூட்டம் திரிந்தாலும் அத்தனை பேரையும் கருணை விழியால் பார்த்து அன்பு கரத்தால் அணைத்து தனது திருவடி நிழலில் இளைப்பாற அழைப்பதுதான் திருமாலின் நித்திய கல்யாண குணம் இந்த குணத்திற்கு ஒரு வைஷ்ணவம் சுவாமித்துவம் என்ற பெயரைத் தருகிறது.

நேற்று வரை சைக்கிள் கடை மரபெஞ்சில் தோள் மீது கை போட்டுக் ஊர்க்கதையெல்லாம் பேசித்திரிந்த நண்பன் இன்று தனக்கு மேலாளர் பதவி வந்து விட்டதனால் தனது நண்பர் களை பார்த்து புன்னகை செய்வதற்கு கூட கூச்சப்படுவான். படித்து பட்டம் பெற்ற் உயர்ந்த பதவியில் அமர்ந்துவிட்டால் மனிதனுக்கு ஏற்படும் ஆணவத்திற்கு அளவேயில்லாமல் போய்விடும். அழுக்கு வேட்டியோடு பெற்ற தகப்பனே எதிரில் வந்தாலும் இவன்தான் என்னை பெற்றவன் என்று அறிமுகப்படுத்த தயக்கம்க் காட்டுவான். பத்து வேலி நிலத்திற்கு சொந்தக்காரன் நான் ஊராரின் பிரச்சனையை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கும் நாட்டாண்மைக்காரன் நான். நான் போய் என் தகுதியை தாழ்த்தி கீழ்ஜாதிக் காரனிடம் பேசுவதா? அவர்களோடு சரி நிகர் சமானமாக பழகுவதா? முடியவே முடியாது என்று ஆணவத்தில் கொக்கரிக்கும் எத்தனையோ மூடர்களை தினசரி பார்க்கிறோம்.

இந்த மனித சரிரம் அழியக்கூடியது ஓடுகின்ற மூச்சு நவதுவாரங்களின் எதாவது ஒன்று வழியாக வெளியேறிவிட்டால் ஆடிப்பாடி ஆட்டம் போட்ட உடல் சடலமாக சாய்ந்துவிடும் மாடி மனை கட்டியிருந்தாலும் கோடி பணம் சொத்து இருந்தாலும் ஆள்அம்பு அதிகாரப்பதவி இருந்தாலும் யமன் வந்து கூப்பிடும் போது கொஞ்சம் நேரம் பொறு இந்த வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவகாசம் கேட்க முடியாது. போட்டதை போட்டபடி வாயை மூடிக்கொண்டு கிளம்பி விட வேண்டியது தான் இப்படிப்பட்ட அற்பமான மனித வாழ்வை நிரந்தரமானது என்று நம்பி ஆணவத்தால் எத்தனை அக்கிரமங்கள் செய்கிறோம் பணத்தாலும், மதத்தாலும், ஜாதியாலும் எத்தனை மனிதர்களை அடிமைப்படுத்தி ஆனந்தப் படுகிறோம்.


நம்மைபோல் இறைவன் அழியக் கூடியவனா? அவன் இந்த பிரபஞ்சம் அனைத்துமே தோன்றுவதற்கு முன்னாலும் இருந்தான். இவையாவும் அழிந்தபிறகும் இருப்பான். இன்று நாம் பெருமை மிக்கதாக எதையெல்லாம் கருதுகிறோமோ உயர்ந்தது உன்னதமானது ஈடு, இணையற்றது என்று எதையெல்லாம் போற்றி புகழ்கிறோமோ சுற்றி நின்று பாதுக்காக்கி றோமோ அவையெல்லாமே நாராயணனால் படைக்கப்பட்டதுதான் ஒரு சிறிய கல்லை செதுக்கி சிலையாக வடிப்பதற்கு ஒரு மனிதனுக்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது எவ்வளவு உழைப்பு, அறிவு அதற்காக செலவிடப் படுகிறது? ஆனால் ஒரு நொடியில் கால்பங்கு நேரத்தில் பலகோடி உயிர்களை பல கோடி உடல்களை உருவாக்கும் பரந்தாமனிடம் எத்தகைய ஆற்றல்கள் குடிக்கொண்டிருக்க வேண்டும். அவன் எவ்வளவு உயரத்தில் இருப்பவனாக இருக்க வேண்டும் ஆனால் அத்தனையும் மறந்து அனைத்து சக்திகளையும் அனைத்து கௌரவங் களையும் ஒதுக்கி வைத்துவிட்டு தன் தகுதிக்கு முன்னால் தூசிக்கான தகுதி கூட இல்லாத மனிதனுக்காக இறங்கி வருவான்.
தன் மீது அன்பு செலுத்தியவன் ஏழையா, பணக்காரனா, தன் மீது பாசம் வைத்தவன் கோழையா? மாவீரன? தன்னை நேசிப்பவன் அறிஞனா? அசடனா? என்று வேற்றுமை பாராட்டாமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று கீதையிலே சொல்கிறானே பார்த்த சாரதி அவனுடைய இந்த இயல்பை சௌசால்யம் என்ற பெயரில் ஸ்ரீ வைஷ்ணவம் அழைக்கிறது.
ஒரு வகுப்பாசிரியனை நினைத்த நேரத்தில் சென்று ஒரு மாணவனால் கண்டுவிட முடியாது. அதற்கு என்ற சில நடைமுறைகள் இருக்கிறது. ஆசிரியர்களின் கதையே இப்படியென்றால் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அவ்வளவு சீக்கிரம் ஒரு சாமானியனால் பார்த்துவிட முடியுமா? சந்திக்க அவர்கள் நேரம் ஒதுக்கி தருவதே பெரிய விஷயம் ஆனால் கடவுள் அப்படியல்ல அவனை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் உள்ளன்போடு நினைத்தால் தரிசனம் செய்யலாம். இன்று எனக்கு வேலையாயிருக்கிறது நாளைக்கு பார்க்கலாம் என்று அவன் தரிசனத்தை தள்ளிப்போட மாட்டான். இந்த உயரிய குணத்தை சௌலப்பியம் என்ற பெயரால் வைஷ்ணவம் அழைக்கிறது.
 
 
அறிவு, ஞானம் என்று சொல்கிறோமே அப்படியென்றால் என்ன? ஒரு பிரச்சனையை எப்படி தீர்ப்பது எப்படி உருவாக்குவது என்று ஷன நேரத்தில் முடிவு செய்யும் ஆற்றல்தான் அறிவு. இப்படி நடந்தால் எப்படி முடியும் என்று முன் கூட்டியே தீர்மானத்திற்கு வருவதுதான் ஞானம். இப்படி கீழ் நிலையில் கிடக்கின்ற ஜீவங்கள் அனைவரையும் உயர்த்துவதான நாராயணனின் இயல்பை ஸ்ரீ வைஷ்ணவம் ஞானம் என்று அழைக்கிறது.

உயிர்களுடைய குற்றங்குறைகளை களைந்து பிறப்பால் பெருநிலையை ஜீவங்களுக்கு தருவதும் நிரந்தர வைகுண்டவாசிகளாக அடியவர்களை வைத்து அருள் பாலிப்பதும் பாவ அழுக்குகள் மூடிய கடையனை கூட தன் அருள் ஜூவாலையால் சுத்தனாக மாற்றக்கூடிய இயல்பு கொண்ட திருமாலின் ஆற்றல் மிகு கருணைக்கு சக்தி என்ற பெயரை கொடுத்து சிறப்பிக்கிறது, ஸ்ரீ வைஷ்ணவம்.


தன்னலமே இல்லாத ஒரு மாபெரும் தலைவரை பற்றி கேள்விபடுகிறோம். அவரது கொள்கைகள் வாழ்ந்த முறை அவரின் சேவைகள் அனைத்துமே நமது மனதை கவர்கின்றன. உடனே நம்மையறியாமல் இத்தகைய மாமனிதனிடம் நமக்கும் தொடர்பும் உறவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறோம். உடனே நமது கற்பனை வானில் சிறகடித்து பறக்கிறது. அந்த மனிதரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம். அவரை மதிப்பிற்குரிய ஒரு உயரிய உறவு நிலையில் வைத்து எண்ணிப்பார்க்கிறோம். ஒரு உண்மையான பக்தனின் நிலையும் இப்படித்தான் இருக்கும். இறைவனின் கல்யாண குணங்களை அறிந்தவுடன் அவரோடு நாம் ஐக்கியமாக வேண்டும். உறவு பாராட்ட வேண்டும் என்று துடிக்கிறோம்.


சரித்திர ஏடுகளில் அத்தகைய துடிப்பு பல ஞான புருஷர்களுக்கு ஏற்படுள்ளதை காணுகிறோம். ஆண்டாள், மீரா போன்றோர்கள் கார்மேக வண்ணணை காதலனாக எண்ணி கசிந்துருகியதும். மகாகவி பாரதி கோகுலத்து நந்த குமாரனை தோழனாக தொண்டனாக அறிவுரை சொல்லும் ஆசிரியனாக கருதுயது. இதே ஆசைகளால்தான். ஆசை என்பது மனிதனை விலங்கிட்டு பூட்டும் சிறைச்சாலை என்றாலும் கடவுள் மீது கொள்ளுகின்ற ஆசையானது மனிதனை பந்தபாச தளைகளில் இருந்து விடுதலை செய்கிறது. இதை உணர்ந்துதான் “ஸ்ரீ வைஷ்ணவம்” கடவுளின் கருணைத்தன்மையை விவரித்ததோடு அல்லாமல் அவரிடம் பக்தர்கள் கொள்ளும் உறவு முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்றும் விவரிக்கின்றார்கள்.

இந்து சமயத்தில் உள்ள தத்துவப் பிரிவுகளின் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் “அத்வைதம்”. கடவுள் என்பவன் வெளியே இல்லை. உள்ளே இருக்கிறான். அதாவது அகம்
பிரம்மாஸ்மி என்று சொல்கிறது. அதாவது இதனுடைய அர்த்தம் என்னவென்றால் கடவுளும் மனிதனும் ஒன்றுதான். இதை மனிதன் உணராமல் இருக்கிறான் என்பதாகும். ஆனால் இந்த கருத்தை சைவ சிந்தாந்தமும் ஸ்ரீ வைஷ்ணவமும் ஏற்றுக்கொண்டதில்லை. இவர்கள் இருவரும் ஜீவன் வேறு இறைவன் வேறு என்று உறுதியாக வாதிடுகிறார்கள். அப்படி வாதிடும் போது கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுகளை ஆண்டான் அடிமை, தந்தை, மகன், தோழன், குரு சீடன் என்று நான்கு வகையாக பிரித்து கூறுகிறார்கள் அந்த உறவுகளை அடுத்த பதிவில்  விரிவாக பார்ப்போம் .
 
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு மிக்க வந்தனங்களும், வணங்கங்களுடன் மீள் பதிவு: மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!! இந்துமத வரலாற்று தொடரின் ஊடாக!! அன்புடன் கே எம் தர்மா!

Jan 9, 2012

மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம்!! இந்து மதத்தின் சாக்த பிரிவு(2)

மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம் ! 
இந்து மதத்தின் சாக்த பிரிவு(2)

அடுத்ததாக உள்ள நான்காவது ஆவரணத்தில் கீழே எழும் மேலே ஏழும் ஆக பதினாறு உலகங்கள் அமைந்துள்ளன. இதை சர்வ செளபாக்கிய தயகச்சக்கரம் என்று அழைக்கிறார்கள். மேலே உள்ள ஏழு கோணத்தில் பூர் பூவ சுவ ஜன தப சக்திய ஆகிய ஏழு உலகங்களையும், கீழே உள்ள ஏழு கோணங்கள் அதல விதல சுதல நிதல ரசாதல மகாதல பாதாள ஆகிய ஏழு உலகங்களையும் காட்டுகிறது. அது மட்டும் அன்றி ஒலித்தத்துவமான சட்ஜமம் சமம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் விவாதம் ஆகிய ஏழு சப்த லயங்களையும், ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சு  சிவப்பு ஆகிய நிறதத்துவங்களையும் காட்டுகிறது.  அதாவது இறைசக்தி ஓசையாகவும் ஒளியாகவும் இருப்பதை இந்த கோணங்கள் விளக்குகின்றன. 

ஐந்தாவது ஆவரணமான சர்வார்த்த சாதக சக்கரத்தில் கீழே ஐந்து கோணமும் மேலே ஐந்து கோணமும் உள்ளது. இந்த பத்து கோணங்களும் மனித உடலில் உள்ள தச வாயுக்களை குறிக்கிறது. ஸ்ரீ அன்னையை வழிப்படும் தசமகாவித்தியா தோற்றங்களை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கூறலாம். மேலும் மேலே உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி லஷ்மி கெளரி மகேஸ்வரி மனோன்மணி என்ற அன்னையின் பஞ்ச வடிவங்களையும், கீழே உள்ள ஐந்து கோணங்கள் தத்புருஷம் சத்யோஜாதம் அகோரம் வாம தேவம் ஈசானம் ஆகிய ஈஸ்வர பஞ்சப்ரம்ம வடிவத்தையும் காட்டுகிறது.

தேவியை வழிபடும் சர்வசோமணி சர்வவிக்ஷிரவினி சர்வாஷ்ணி சர்வசந்தசர்வேசினி மாதினி சர்வமகோரங்குசா சர்வகேச சர்வபிகம்ப சர்வயோனி சர்வதிகண்டா ஆகிய பத்து மூர்த்திகளையும் இந்த கோணங்கள் காட்டுகின்றன. இதே போல அன்னமய கோசம் ஞானமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து உடல்களையும் அந்த உடல்களை தாக்கும் தோஷங்களான பொய்யாமை கொல்லாமை கள்ளுண்ணாமை திருடாமை காமியாமை ஆகிய ஐந்து நெறிகளை சுட்டிக் காட்டுகிறது.  இப்பகுதி விந்து அணுக்களையும் கருமுட்டைகளையும் காட்டுவதாக தாந்திரிக தத்துவம் காட்டுகிறது. 

ஆறாவது ஆவரணமான சர்வஞசக்கரம் ஆஞ்சாசக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இது உருவவழிபாட்டின் விளக்கமாகும். அன்னையானவள் சர்வத்தையும் அருளும் மூர்த்தியாகவும் திகழ்கிறாள். சர்வத்தையும் அழிக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள். உடல் இயக்க ரீதியில் இந்த ஆவரணம் எழும்பில் உள்ள மட்சையை குறிக்கும்.

சர்வரோகர சக்கரம் என்ற ஏழாவது ஆவரணம் பிந்துவை குறிப்பதாகும். இதில் எட்டு கோணங்கள் உண்டு. இக்கோணங்கள் வசினி காமேஸ்வரி மோதினி விமலா அருணா ஜெயினி சர்வேஸ்வரி கெளலனி ஆகிய வித்தைக்கும் ஞானத்திற்கும் உரிய தேவதைகள் வாசம் செய்கிறார்கள். இந்த அஷ்ட கோணத்தின் அதிதேவதை திரிபுரா ஆவாள். யோகமார்க்கத்தில் கூறப்படும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி ஆகிய எட்டு நிலைகளும் இதில் அடங்குகிறது.

மேலும் நூல்களை கற்றுத்தரும் போத குரு, பேதங்களை அறிய செய்யும் வேதகுரு, மந்திர சித்தி பெற வழிகாட்டும் மிசிதகுரு, செயலூக்கம் தரும் சூட்சக குரு,  வார்த்தைகளால் ஞானத்தை போதிக்கும் வாசககுரு, தான்பெற்ற ஞானத்தை சுயநலம் இல்லாமல் சீடருக்கு தரும் காரககுரு, முத்தியடைய வழிகாட்டும் விஷிதககுரு ஆகிய அஷ்ட குருக்களையும் இக்கோணங்கள் உணர்த்துகின்றன. அன்னை ஆதிபராசக்தியின் நான்கு திருகரங்களும் அந்த கரங்களில் இருக்கும் பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் கணை ஆகிய நான்கு கருவிகளும் இந்த எட்டு கோணத்தின் வடிவங்கள் எனலாம். இதில் பாசம் என்பது ஆசையின் வடிவம் அங்குசம் என்பது கோபத்தின் வடிவம் கருப்பு வில் என்பது மனதின் வடிவம் மலர் கணை என்பது உணர்வுகளின் வடிவம்.

எட்டாவதாக உள்ள ஆவரணம் முக்கோணமாக அமைந்த காயத்திரி பீடமாகும். அன்னை இந்த
காயத்திரி பீடத்தில் திரிபுராம்பா என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள். காமேசி வச்சிரேசி பகமாலினி என்ற மூன்று தேவதைகளையும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி உள்ளாள். மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம் கர்மா மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி விடுகிறது. சுழன்றடிக்கும் சூறாவளி என்ற பேராசை அடங்கி விடவும், ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடவும், வைராக்கியத்தை பெறவும் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனமென்னும் மாய பிசாசை வசப்படுத்தி ஒடுக்கி அன்னையின் திருபாதத்தில் பூர்ண சரணாகதி அடைய செய்யவும் இச்சக்கரம் வழிவகுக்கும்

இறுதியாக சர்வானந்த மயசக்கரம் என்ற ஒன்பதாவது ஆவரணம் ஸ்ரீ சக்ரத்தின் மைய புள்ளியான பிந்து மையமாகும். இது பேரானந்தம் அடையக்கூடிய அம்பிகையின் திருகாட்சியை நேருக்கு நேராக தரிசிக்கும் நிலையை காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இந்த பிந்து பகுதியில் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள். இன்பம் துன்பமற்ற ஆழ்ந்த சமாதிநிலை பிந்து பகுதி காட்டும் சின்னமாகும். யோக மார்க்கத்தில் சொல்லப்படும் சமாதி நிலையின் மூன்றவது கண் திறக்கும் அனுபவமே ஸ்ரீ சக்ரத்தில் உள்ள மூல பிந்தாகும்.

இது வரையில் தாய் தெய்வ வழிபாட்டின் ஆழ்ந்த கருத்துக்களை சுருக்கமாக சிந்தித்தோம். இனி நமது இந்து மதத்தில் உள்ள மற்ற பிரிவுகளையும் சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
 வணக்கத்திற்கும், மதிப்பிற்கும் உரிய குருஜியின் அருளாசியுடன் மீள்பதிவு செய்யப் படுகின்றது.  மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!!! அன்புடன் கே எம் தர்மா..

மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம்!! இந்து மதத்தின் சாக்த பிரிவு


மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம் ! 
இந்து மதத்தின் சாக்த பிரிவு

லக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது முதலில் ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம வடிவம் மூன்றாவது காரண வடிவம் என்பதாகும் ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும் காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும் சூட்சம வடிவம் என்பது புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர வடிவாகும்.

மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும், தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது. இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள். இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்ச வெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை, ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும். இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும். அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன. இந்த மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது.

ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும். அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது முடிவும் கிடையாது. அப்படிபட்ட அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத் திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும்.  இதை ஒரு பிரபஞ்ச கணித கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம்.

ஒரு புள்ளிக்கு 360 பாகைகள் உண்டு. ஒவ்வொரு தனித்தனி பாகையில் இருந்து புறப்படும் கோடுகள் பிரபஞ்சவெளியில் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே செல்லும். அந்த கோடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது புறப்பட்ட இடத்திலேயே வந்து சேர்வதால் வட்டமாகவோ கோளமாகவோ தோற்றம் அளிக்கும். அந்த வடிவத்தை இரண்டு பாகமாக பிளந்தால் 180 பாகைகள் கொண்ட அரைவட்டம் கிடைக்கும் நான்காக பகிர்ந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 90 பாகைகள் பிரிந்து, நான்கு துண்டுகளாக விரிவடையும். இப்போது அந்த தோற்றத்தை பார்த்தால் ஒரு கூட்டல் குறியை போல நம் கண்ணுக்கு தெரியும். இது தான் சிவ சக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடாக அமையும். அது தான் பிரபஞ்சத்தின் அக்ஷர வடிவாகும்.

இந்த அக்ஷர வடிவம் 'க' என்ற எழுத்தாக அமைந்திருக்கிறது.  இந்த எழுத்து வடிவம் தான் படைப்பு தத்துவத்தின் வெளிப்புற சின்னமாகும்.  எல்லையே இல்லாத பிரபஞ்சம் 'க' வடிவ சதுரத்துக்குள் காணப்படுகிறது. இந்த சதுரத்தில் அணிமா, லகிமா, மகிமா, பிரத்தி, பிராம, வசித்துவம், சத், சித்துவம் என்ற அஷ்டமா சித்துகள் அடங்கியிருந்து ஆட்சி செய்கிறது. இந்த சக்கரத்தில் உள்ள நான்கு புற சதுர ரேகைகளும் அண்ட வெளியை காவல் செய்யும் லோக பாலகர்களாக உருவகப்படுத்தப்பட்டு நிர்மானிக்கப்படுகிறார்கள். இச்சக்கரத்தின் உள் வரிகளில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு குணங்களை கட்டுப்படுத்தும் பண்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு நற்குணங்கள் மறைந்துள்ளன இதை பிரகட யோகினிகள் என்று அழைக்கிறார்கள்.

நிலையான பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் வட்டத்திற்குள் சதுரம் தோன்றும். ஸ்ரீ சக்ர சதுரத்திற்குள் இதே போன்று தான் வட்டம் தோன்றுகிறது இது நமது கண்களில் உள்ள கருவிழிகள் போல் தெரிவதால் அண்டத்தின் ஒத்தைக் கண் எனவும் சுதர்மம் என்னும் அண்ட கருவாகவும் கருதப்படுகிறது. சதுரம் என்பது ஆகாச வெளியினையும், வட்டம் என்பது ஆகாச காலத்தையும் குறித்து நிற்கிறது. வெளி என்ற சதுரம் வளர்ந்து கொண்டே செல்கிறது, காலம் என்ற வட்டம் சுழன்று கொண்டே செல்கிறது.  

பார்வையை இன்னும் சற்று கூர்மை படுத்தி வட்டத்தை பார்த்தோம் என்றால் வட்டத்திற்குள் வட்ட வட்டமாக மூன்று வட்டங்கள் தோன்றும். இதில் இந்திரன் அக்னி எமதர்மன் நிருதிதேவன் வருணன் வாயு குபேரன் ஈசானன் ஆகிய எட்டு திக்கின் அதிபதிகள் நிற்கிறார்கள். ஒரு சதுரத்தில் அதற்குள் இருக்கும் வட்டத்தை அதாவது சதுரமான அண்டவெளியும் அதற்குள் இருக்கும் பூகோளத்தையும் எட்டு பாகமாக்கி, அஷ்டதிக்கிலும் பிரபஞ்சம் பறந்து விரிந்துள்ளதை ஸ்ரீ சக்ர குறியீடுகள் காட்டுகின்றன.

ஸ்ரீ சக்ரத்தின் வட்டத்தில் உள்ள நடுவட்டம் அகமுகமான வழிபாட்டால் பெருகக்கூடிய கொல்லாமை வெகுளாமை புலனடக்கம் பொறுமை தவம் வாய்மை அன்பு ஆகிய நற்குணங்களை வரிசைபடுத்தி காட்டுகிறது. அதற்கு அடுத்த வட்டத்திற்குள் மனிதனின் 360 சுவாச கூறுகளான காலம் நிற்கிறது. இந்திய நாள்கணக்கு படி ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் உண்டு. ஒரு நாழிகையில் அதாவது 24 நிமிடத்தில் ஒரு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கை 360,  இந்த 360தை 60 நாழிகையால் பேருக்கும் போது சராசரியாக ஒரு மனிதனின் தினசரி சுவாசம் 21.600 ஆகும். ஒவ்வொரு நாழிகைக்கான 360 சுவாசத்தை பாகங்களாக கொண்டோம் என்றால் அது ஒரு வட்டமாக வரும். இந்த பாகம் காலத்தை குறிப்பதாகும், இந்த காலம் என்னும் உள் வட்டம் கிருதயுகம்(அ) திருதயுகம் (அ) திரேதாயுகம் 2. திரேதாயுகம் 3. துவாபரயுகம் 4. கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாக சுழன்று வருகிறது. 

இப்படி வட்டமும், சதுரமும், அண்டவெளியாகவும், காலமாகவும் விளங்கி மூலாதாரத்தில் கனலாக வடிவெடுக்கிறது. இதை நெருப்புக்குள் நெருப்பு அல்லது சிவத்துக்குள் சக்தி அல்லது சக்திக்குள் சிவம் என்றும் சொல்லாம். இந்த மூன்றாவது வட்டத்தில் பத்து இதழ் கொண்ட தாமரை ஸ்ரீ சக்ரத்தில் மலர்கிறது.

பதினாறு இதழ்கள் பிறக்கும் சக்ர பகுதியை சர்வ பரிபுரா சக்ரம் என்ற அழைக்கிறார்கள். இந்த ஒவ்வொரு இதழ்களிலும் அன்னையின் பதினாறு யோகினி சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது.  இந்த சக்திகள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தேவதைகள் ஆவார்கள். யோக நெறியில் இந்த பகுதி சுவாதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது.  இதில் மனம் சித்து சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு அந்தகரணங்களும் பார்த்தல் கேட்டல்  நுகர்தல் சுவைத்தல்  உரைத்தல் நினைவுவைத்தல் கனைத்தல் சூட்சமம் சுக்குலம் காரணம் பெயர் வளர்ச்சி ஆகிய பனிரெண்டு தன்மாத்திரைகள் அடங்கியுள்ளன. 
  
இத்தகைய பதினாறு இயல்புகளும் நிரம்பி இயங்கினால் தான் உலக வாழ்க்கைக்கு தேவையான உடல் நலம் மனநலம் அறிவு நலம் பண்பு நலம் சமூக நலம் பொருள் நலம் ஆகிய பெயர்கள் கிடைக்கும், அதனால் தான் இப்பகுதியை படைத்தல் தத்துவம் என்கிறார்கள்.

அடுத்ததாக பதினாறு இதழ் தாமரைக்குள் எட்டு இதழ் கொண்ட மூன்றாவது ஆபரணம் பிறக்கிறது. இது சர்வ சம்மோகன சக்ரம் என்ற பெயர் கொண்டதாகும். எட்டு இதழ் கமலத்தில் எட்டு யோகினிகள் உள்ளதோடு அனங்க மன்மதன என்ற சக்திகளும் அருளாட்சி செய்கின்றன. அனங்க என்றால் உருவம் இல்லாதது என்ற பொருள் வரும் அதனால் இந்த பிரபஞ்சமானது உருவம் இல்லாத பரப்ரம்மத்தில் இருந்து உதயமானது என்ற மூல கருத்து வெளிப்படுகிறது. மேலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு பிரம்மாணங்களாகும். மேலும் இந்த சக்ரம் மனித உடலின் சதை பகுதியை குறிக்கிறது.
 
 வணக்கத்திற்கும், மதிப்பிற்கும் உரிய குருஜியின் அருளாசியுடன் மீள்பதிவு செய்யப் படுகின்றது. அன்புடன் கே எம் தர்மா.. மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!!!