தெய்வீக வெளிப்பாடான (REVELATION) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் இந்து மதத்தைப் பெற்றுள்ளனர்.-- பேப்பர்- 1. (ஆங்கிலத்தில் குறும்படம் காண்க)
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்துமதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள்வலிமையை நிரூபிக்கின்றன. யூதமதம், கிருஸ்துவ மதத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ள தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிருஸ்துவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டு விட்டது. இன்று தங்கள் பெருமைக்கு உரிய யூத மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. வேத நெறியின் அடித் தளத்தையே அவைகள் உலுக்கி விடும் போலத் தோன்றின. ஆனால் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால் எப்படி கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகிவந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அதுபோல எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரங்கள் ஓய்ந்ததும், மிகப் பெரியதான தாய் மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
அப்படியானால், ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொது மையம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது, ஒன்று சேரவே முடியாதது போலத் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது. இந்த கேள்விக்குத்தான் விடை கூற முயலப்போகின்றேன்.
தெய்வீக வெளிப்பாடான ( REVELATION ) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்கு துவக்கமோ, முடிவோ இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்கு துவக்கமோ, முடிவோ இல்லாதிருக்குமோ? அது அபத்தம் என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு கால கட்டங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே, வேதங்கள்.
புவிஈர்ப்பு விதி அது கண்டறியப் படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும், அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக உறவு முன்னமே இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும். இந்த விதிகளைக் கற்றறிந்தவர்கள் தான் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம், நிறை நிலை அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகின்றோம். அவர்களில் மிகச் சிறந்த சிலர், பெண்கள் என்பதைக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.!!!!
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு (தமிழாக்கம்). இந்து மதம் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி.(பேப்பர்-2), இந்துமதம், செப்டம்பர்,19,1893. இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாகவும், தமிழாக்கம் கட்டுரைப் பகுதியாகவும்...தொடரும்..அன்புடன் கே எம் தருமா......
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!