Search This Blog

Dec 31, 2011

சிவவாக்கியம் (356-360) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (356-360)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -356
சோதி சோதி யென்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி ஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி வாதி யென்று சொல்லும் வம்பருஞ் சிலவரே
நீதி நீதி நீதி நீதி நின்றிடு முழுச்சுடர்.     
  
    
சோதியை உண்மையென்று உணர்ந்து அச்சோதியை உணர்ந்து அச்சோதியையே நாடித் தியானித்து சோதியை அடையமுடியாமல் தோற்பவர்கள் சிலரே. அது ஆதியாக அனைவரிடமும் வாலையாக உள்ளதை அறிந்து அதையே நாடித் தேடும் ஆண்மையாளர்கள் சிலரே. வாத கற்பம் செய்து உண்டு இறைவனை அடையலாம் என்று சொல்லி வாதவித்தை செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான நீதியாக நிற்பது பூரணமான முழுச்சுடர் சோதி என்பதை உணருங்கள்.    

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -357
சுடரதாகி யெழும்பியங்குந் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய மைக்க முன்
படரதாக நின்ற வாதி பஞ்ச பூத மாகியே
அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே.
 
காலங்காலமாக நீதியாக ஒளி மிகுந்த சுடராக யாவிலும் பொருந்தி இயங்குவது தூய சோதியே. அச்சோதியிலிருந்து நெருப்புக் கோலத்தில் இருந்தே இப்பூமியும் விண்ணும் உண்டாகி அதுவே ஏகமான மெய்ப் பொருளாகி நமக்குள் அமைந்திருந்தது. அது ஆதியாகி அனைத்திலும் படர்ந்து விரிந்து பஞ்ச பூதங்கள் உண்டாயிற்று. அதுவே அகாரமான சூரியனில் இருந்து அண்டத்திலும் பிண்டத்திலும் ஆண்மையாகி சிவனாக நின்றது.             
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -358
நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்றுலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.
 
   
இவ்வாறு அனைத்திலும் அனாதியாக நின்று கொண்டிருந்த சோதியை இப்பூமியிலே அரும்பிறப்பாக பிறந்த மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிவை அறிந்து, கண்களில் நீர் மல்க, அன்பே சிவமாய் உணர்ந்து யோக ஞான சாதகம் செய்து உலாவுவார்கள். தனக்குள் சூட்சம தேகத்தில் உள்ள அகக்கண்ணினையே நோக்கி அதன் மேல் முனையில் ஞானக் காட்சியையும் கண்டு நானாக உள்ள தன்னைக் காணுவார்கள். அங்கே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை பொங்கி வடிந்திடும். நாதமாகிய உடலும் விந்தாகிய உயிரும் ஒன்றி மகிழ்ந்து ஒளி. ஒலி கலப்பால் பேரின்பம் புலப்படும்.    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 359
வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும்
காயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி யின்றியே படர்ந்து நின்ற பான்மையே
நயங்கள் கோ வென்றே நடுங்கி நங்கையான தீபமே.  
 
நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் தோன்றியது. அதுவே விந்து நாதமாகி இப்புவியில் தொடர்ந்து கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. அது எதிலும் தோன்றாத சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றி படர்ந்து வெகு நேர்த்தியாக நடந்து வருகிறது. இவை யாவும் உடம்பிலேயே நயமாக இருந்து நடனமாடிக் கொண்டு கோனாக விளங்கும் இடத்தில் வாலையாகி அதுவே சோதியான தீபமாக உயிரில் சிறந்துள்ளது.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 360 
தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையிற் சமைந்து நின்ற சூட்சமுந்
சாபமான மோட்சமுந் தடிந்து நின்றி லங்குமே.     
 

அச்சோதி தீபத்தின் உச்சி முனையிலே சூரியன் விளங்கும் அகாரத்தின் சுழியில் குண்டலினி சக்தியை ஆறு ஆதாரங்களையும் கடந்து கோயிலாக இருக்கும் இடத்தை அறிந்து 'கூ' என்ற உகாரத்தால் ஊதி நம் தீயாக கொதித்து நின்ற தீயான சிகாரத்தில் சேருங்கள். கோபமும், காமமும், தீயாக கொதித்து நிற்கும் மூலையில் வாலையாக சமைந்து நின்ற சூட்சமத்தை அறிந்து அதிலேயே தவம் செய்யுங்கள். அதனால் சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து மோட்சவீடு அது என்று உணர்ந்து தியானியுங்கள். அவ்வாலையில்தான் ஆன்மா நின்று இலங்குகின்றது.   

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

சிவவாக்கியம் (351-355) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (351-355)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -351
உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பறந்து நின்றுலவுமே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே.  
  
    
அண்ட உச்சி எனும் புருவமத்தியில் சாதி பேதம் யாவும் ஒழிந்திருக்கும் மெய்ப்பொருள். அதிலே  பரவி மனமாகிய சந்திரனும் பரந்து நின்று உலவும், அம்மனதை அடக்கி சுழுமுனையைத் திறந்து செக்கச் சிவந்த தீபமாக சோதியில் மௌனத்தில் நின்று தியானியுங்கள். மௌனமே கச்சி எனும் சகஸ்ரதளத்தை கடந்து சிவமயமாய் விளங்கும் பரம் பொருளில் சேர்த்து வைக்கும்.
  
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -352
அஞ்சு கொம்பில் நின்ற நாதம்ஆலை போல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே..
 
ஐந்து புலன்களில் நின்ற நாதம் வாசிப் பயிற்சியினால் ஆலையில் வரும் புகைபோல் மேல் நோக்கி எழும். அது விந்துவுடன் சேர்ந்து பூவாக மலர்ந்து உன் உடம்பிலேயே பரிசுத்தமாகியே நின்றிருக்கும். அதில்தான் செஞ்சுடராக சிவம் உதித்து சுழன்று கொண்டுள்ளது. அங்கெ பஞ்ச பூதங்களும் பரந்து நின்று பஞ்ச வண்ணங்களில் திருவடியாக ஆகி ஊமை எழுத்தான மௌனமாக நிற்கின்றது. அதனை அறிந்து அதிலே மௌனத்தில் தியானியுங்கள்.            
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -353
சுடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே
அரனிருந்த ஹூவிலே
இடுதிஎன்ற சோலையிலிருந்து முச்சுடரிலே
நடுதிஎன்று நாதமோடி நன்குற அமைந்ததே. 
 
 

சடுதியில் மறையும் இவ்வுடம்பின் தத்துவங்கள் எல்லாம் ஒரேழுத்தான 'ஹீ' எனும் சிகாரத்தில் தான் இருக்கின்றது. மூலாதாரத்தீயானது முதுகெலும்பின் வழியே மேலேறி ஹ்ரீங்காரமாக ஒலிக்கும். அது அகாரமாக விளங்கும் உடம்பினில் 'ஹூ'வாகவும், ஈசன் இருந்த இடமான உகாரமான உயிரில் ஹீ எனும் அட்சரத்துடனும் வாசியாகி உட்புகும் அது இரு தீயாக விளங்கும் சந்திர, சூரியன் எனும் சோலையிலிருந்து சுழுமுனை என்ற மூன்று கலைகளும் ஒன்றாகி முச்சுடராக இருக்கின்றது. அச்சுரின் நடுவாக விளங்கும் சோதியில் தான் ஆ, ஹூ, ஹீ என்று ஓங்கார நாதம் வாசியில் சேர்ந்து கூடி நன்றாக அமைந்திருக்கின்றது.    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 354

அமையுமால் மோனமும் அரனிருந்த மோனமும்
சமையும்  பூத மோனமுந் தரித்திருந்த மோனமும்
இமையுங் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தையுற்று நோக்கிலார்.
 

திருமாலும், சிவனும் அமைந்திருந்தது மோனமாகிய ஒரெழுத்தில். ஐந்து பூதங்களும் ஒன்றாகி சமைந்திருப்பதும் அதனால் உடம்பு தரித்திருந்ததும் மௌனத்தில்தான். அதனை தங்கள் உடம்பில் இமயம் எனும் மலையில் வேகங்கொண்ட மனதை வாசியாக்கி உச்சியில் இலங்கிக் கொண்டிருக்கும் மௌனத்தில் தியானித்து இறைபாதம் சேர்த்து இன்புறுபவர்களே தன்னை அறிந்த யோகிகள். மௌனத்திலேயே தியானித்து மௌனத்தையே உற்று நோக்கி தவம் புரியும் ஞானிகள் தங்கள் உடம்பையும், அது அழிவதையும் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்.     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 355
பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பினுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமான தேதடா விரிவு தங்கு மிங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே.  
  . 
மனம் பாய்ந்து செல்லும் இடமான வழியிலேதான் பரம் பொருளான ஈசன் சுழியாகிய முனையில் இருக்கின்றான். காயமான உடம்பினுள்ளே மெய்ப் பொருள் இருக்கின்றது. அது வெட்டவெளியாக வீசிக் கொண்டிருப்பதும், ஆகாயமாக அனைத்து தத்துவங்களும் விரிவாகி தங்கி இருப்பதும், எங்கும் எல்லா உடம்பிலும் உள்ளதை உணருங்கள். அதனை அறிந்து கொண்டு வெளிச்சுவாசத்தோடு உட்சுவாசத்தை வாசிப் பயிற்சியினால் கூட்டி மேலேற்ற அது அங்கு முட்டி நின்ற தூணிலே விளங்கும் சோதியில் சேர்த்து தியானியுங்கள்.


***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

சிவவாக்கியம் (346-350) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (346-350)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -346
நாதமான வாயிலில் நடித்து நின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்த முச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.  
    

நாதம் வந்து சேர்ந்து பத்தாம் வாசலில் விந்து நிழலாக நடித்து நின்றது. வேதமான நான்கு வாசல் பொருந்திய வீதியில் விரிந்திருக்கின்ற சூரிய சந்திர அக்னி ஆகிய முச்சுடரில் நாத ஒலி வாசியில் கீதமான ஹ்ரீங்கார ஓசையுடன் கிளர்ந்தெழும்பி உடம்பினுள் உகாரத்திலே நின்றது. ஐந்து பூதங்களும் ஒன்றாகப் பொருந்தி நின்ற அகாரத்தில் புகுந்து அறிவாகிய ஆதியை அறிந்து அனைத்தையும் ஒன்றிணைத்து ஒன்றாக்கி தியானியுங்கள்.
  
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -347
ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி
மேதினியில் மானிடர்
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாதரே.
 
ஆவி எனும் ஆன்மா ஐந்து புலன்களிலும் கலந்து ஆவியாகவே இருக்கின்றது. அது உலகில் மனிதர்களின் உடம்பில் மேவி சூட்சமமாக நின்றுள்ளது. அ, உ, இ என்பதின் உண்மைகளையும், எல்லாம் போய் எஞ்சியுள்ள வண்டல்களாய் இருந்த உப்பின் தன்மைகளையும், எவரும் அறிந்திடாமல் இடத்தில் இருக்கின்றனர். உப்பை படியில் அளந்து அதனை உண்டு வாழ்ந்து அதன் உண்மையை அறியாது பாவியாகி மாளும் மாந்தர்களே! உப்பு என்ற மெய்ப்பொருளின் உண்மைகளை உணருங்கள்.        
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -348
வித்திலே முளைத்த சோதி வில்வளையின் மத்தியில்
உத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே
த்திலே திரட்சி போன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடத்துழன்ற வாலையான சூட்சமே. 
 
 

வித்தாகிய உப்பிலே முளைத்த சோதி வில்வளைவைப் போன்ற புருவ மத்தியில் அமர்ந்திருக்கும். அந்த உத்தமமான ஒளி அதுவாக உள்ளதை அறிந்து யோக ஞான சாதகத்தால் மௌனத்தில் தீபமாக பிரகாசிக்க செய்யுங்கள். அதையே உற்று நோக்கி அங்கேயே தவமிருங்கள். நத்தையின் திரட்சி போன்று நமக்குள்ளேயே அதுவாக உள்ள நாதனை அறியாது இருக்கின்றீர்கள். அது நம் உடம்பிலேயே வஸ்துவாக கிடந்தது உழலும் சூட்சமாய் உள்ள வாலை என்பதை கண்டுணர்ந்து தியானியுங்கள். 
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 349

மாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு கா
லையான வாறறிந்த மாந்தரே
மூளையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.
 
  . 
காலையும் மாலையும் சந்தியா வந்தன காலங்களில் ஈசனையே ஒரு மனதாய் தியானிக்க தியானிக்க அனைத்து மன ஆட்டங்களும் வடிந்து மௌனம் பொங்கி மெய்ப்பொருளில் நிற்கும். காலையும் மாலையும் மாறி மாறி வருவது போல் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடந்து வருவதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடம்பிலேயே முக்கோண வட்டத்தின் மூலையில் முளைத்து எழுகின்ற செஞ்சுடராக விளங்கும் சோதியைக் கண்டு இரவும் பகலும் எந்நேரமும் சூரியனில் தங்கி மௌனத்திலேயே நின்று தியானியுங்கள்.  

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 350
மோனமான வீதியில் முடுகி நின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே.
  . 
வாசி நடக்கும் வீதியை அறிந்து மௌனத்தினாலேயே நாத ஒலியை ஹ்ரீங்கார ஓசையில் மேலேற்ற மேலேற்ற வாசி இலயமாகி எல்லை காண முடியா வேகத்தில் ஆறு ஆதரங்களையும் கடந்து சகஸ்ராதளம் எனும் கபாலத்தில் சுழன்று கொண்டிருக்கும். அது இசையுடன் கூடி உச்சியில் பக்குவத்துடன் இருந்த வாலையின் நடுவில் ஞானமாக விளங்கும் செஞ்சுடராகிய சோதியில் அன்பினால் நடத்தி ஒன்றாக இணையும். அப்படி வாசியும் வாலையும்
இணைந்து சோதியாக விளங்கும் மெய்ப் பொருளே சிவமாகிய பரம்பொருளே.

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

Dec 30, 2011

சிவவாக்கியம் (341-345) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (341-345)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -341
பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.
 
     
ஞானம் பொங்கி நின்றது மௌனமே. உடம்பில் ஊமை எழுத்தாகி பொதிந்து நின்றது மௌனமே. உயிரில் தங்கி நின்றது மௌனமே. தயங்கி ஆடும் மனமும் மௌனமே. கங்கையான நீரானது மௌனமே. வாசி எனும் கதிக்குள் நின்றது மௌனமே. சந்திரனாகிய மதியும் மௌனமே. சிவன் இருந்த பஞ்சாட்சரமும் மௌனமே என்பதை அறிந்து மோனத்தில் தியானியுங்கள்.  
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -342
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ் சுடரிலே
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஒனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே.   
 
மோனம் ஆன ஆகாய வீதியில் சுழிமுனையில் பிரம்மம் ஆக விளங்கி நின்று வாலையில் அம்பைப் போன்று கிளம்பி வரும் தனஞ்செயன் வாயு குண்டலினி சக்தியாக முதுகுத்தண்டின் வீதி வழியாக மேலேறி வாலையில் இருக்கும் செஞ்சுடராகிய சோதியில் சேரும். அதை ஞானக் கண்ணால் கண்டு அதன் மூலையில் நரலை எனும் மலம் தங்கும் வாசலில் நின்று ஓங்காரமான செஞ் சுடராக உதித்து நிற்பது சிவமே என்பதை உணர்ந்து தியானியுங்கள்.         
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -343
உதித்தெழுந்த வாலையும் உயங்கி நின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த
வாலையும் மறைந்து நின்ற வாலையும்
கொதித்தெழுந்து கும்பலாகி கூவும் கீயும் ஆனதே.  
     
உச்சித் திலகமாய் உதித்தெழுந்த வாலை நம் உடம்பில் உயிராகி உழன்று நிற்பவள் வாலை. வாசியோக கதியில் நம் கதியாக எழுபவள் வாலை, காலையாகி கதிரவனில் நின்றவள் வாலை, யாவரும் மதிக்க நிற்பவள் வாலை, அவளை மதித்து பூசிப்பதில் எழுந்தவள் வாலை, அவளால் நமக்குள் மறைந்து நின்ற ஞானத்தைத் தருபவளும் வாலையே. அவளை அறிந்து வாசியினால் கதி எழுப்பி கூவும் ஹீயும் என்ற அட்சரத்தால் ஒன்றாக்கி தியானியுங்கள். அகார, உகார, இகார நாதத்தால் ஒன்றாகி ஓங்காரமானவளே வாலை.    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 344
கூவும் கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நரைகள் போல் பொருந்தி நின்ற பூரணம்
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பருள்ளம் உற்றதே.  
 
  . 
கூ என்பது உகாரம், கீ என்பது இகாரம். இது அகாரத்தில் சேர்ந்து மௌனமாக நின்ற கொள்கையான அது என்ற கொள்கையை உணர்ந்திடுங்கள். மூன்றெழுத்தாக உதித்தெழுந்த வாசி சந்திர சூரிய அக்னி என்ற முச்சுடர் விரிவாக நின்றது. பூவிலே உள்ள மணம் போல நமக்குள் பொருந்தி நின்ற அதுவே பூரணம். அது ஆவியாக ஆன்மாவாகி அன்பே சிவமாக அன்பர்களின் உள்ளத்தில் உற்றிருக்கின்றது.     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 345
ஆண்மை கூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதி சூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே.         
  . 
ஆண்மை பேசும் மனிதர்களே! சூரிய கலை ஓடும் வீதியை உற்று நோக்கி மெய்ப்பொருளைக் கண்டு தியானியுங்கள். உடலில் உள்ள மும்மலக் குற்றங்களையும் உயிரில் உள்ள பாவக் கறைகளையும் ஞானத்தால் அகற்ற வல்லவர்களானால் தூணாகி நிற்கும் ஆதியின் சூட்சத்தில் சோதியைக் காணலாம்.  நான்கு மறையாக உள்ள வாசலில் நாத விந்தாக நடித்து நின்ற நாதனைச் சேரலாம்.
     

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

சிவவாக்கியம் (336-340) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (336-340)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -336
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே
கான்மையான வாதி ரூபம் கால கால காலமும்
பான்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நான்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே.
 
     
ஆண்மை ஆண்மையென்று ஆண்மை பேசுகின்ற அசடர்களே! பெண்மை இல்லாத ஆண்மை வந்தது கிடையாது. உங்களின் உடலிலே காணும் ஆதியான வாலை ரூபம்தான் காலா காலமும் யாவருக்கும் இருந்து வருகின்றது. அதுவே பாங்கான வண்ணம் மூன்றாகி பசுபதி பாசமாகி நின்றிடும். அந்த வாலை நாறாத யோனியில் நாற்றம் இல்லாத நரலைவெளி வரும் வாசலில் தங்கி இருப்பதை இங்கும் அங்கும் எங்குமே அவளால் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -337
மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டுவாகி கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன் மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி.  
 
மிங்கு என்ற அட்சரம் ஒரேழுத்து அதனை வாசியில் ரீங்கார ஓசையுடன் மீட்டி கூ என்ற உகாரத்துடன் கூட்டி ஊதும் போது, வாசியானது துல்லியமாக லயமாகி மேலேற்றும் அது சந்திரகலையில் சந்திரனில் இருக்கும் மனமே அறிவாக மாறி நின்றிடும். அறிவும் மனமும் ஒன்றாகி சூக்கும அங்கத்தின் சுழிமுனையில் புகுந்து செல்வதை உணர்ந்தால் இராப்பகல் இல்லா இடத்தே சேரலாம். அப்போது அறிவு மனம் உணர்வு ஆகிய மூன்றும் ஒன்றிணைத்து தியானம் செய்யுங்கள். பரம்பொருள் சுடரொளியாகி ஜோதி காட்சியைக் காணுங்கள்.       
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -338
சுடரேழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே.

       
தீயான அக்னிகலையில் சோதி எழும்பும் இரகசியத்தையும் சுழிமுனை இருக்கும் இரகசியத்தையும், சூரியனில் உயிர் எழும்பி நானாக ஏகமாக அமர்ந்து நின்ற இரகசியத்தையும், திடப்பொருளான அதுவாக உள்ள ஞானப்பொருளின் இரகசியத்தையும், உடம்பாகிய காயத்தின் உயிர் எனும் திரியாக வாலை இருக்கும் இரகசியத்தையும், ஏழு கடலும் அடங்கி நீராக நின்ற இரகசியத்தையும் தன்னை அறிந்து தனக்குள்ளேயே கண்டு தவம் புரிபவர்களே ஞானிகள். 
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 339
ஞானி ஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழை நாளென்று வாதி கோடி கோடியே
தானிலாத சாகரத்தின் தன்மை கானா மூடர்கள்
முனிலாமல் கோடி கோடி முன்னறிந்த தென்பரே. 
 
  . 
தன்னையே ஞானி ஞானி என்று சொல்லித் திரிந்து நின்ற பேர்கள் கோடி கோடியாக நாயாகி பிறப்பார்கள். வானில் இல்லாத மழை நீரே அமுரி என்று நாள்தோறும் கூறி அதனை தேடித் தேடி அலையும் வாதிகளும் கோடி கோடியாக வருவார்கள். தன்னந்தனியாக தனக்குள் இருக்கும் தங்கத்தின் தன்மையை அறிந்து காணாத மூடர்கள் தங்கள் முன்னேயே உள்ளதை உணராமல் நாங்கள் அனைத்து இரகசியங்களையும் முன்னமே அறிந்தவைகள்தான் என்று பேசியே மாண்டவர்களே கோடி கோடியாவார்கள்.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 340
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வெயிலே விபுலை தாங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.     
  . 
உடம்பில் சூட்சமான இடத்தில் கொம்பாக உள்ள சுழி முனையில் உள்ள தீயான சுடரிலே வீசிக்கொண்டு ஆடிய உயிரில் வாலை தங்கிப் பத்தாம் வாசலில் கூச்சம் மிகுந்திருக்கும் கொம்பிலே குரு குடியிருந்த கோயிலான கோனாகிய இடத்திலே தொட்டுக் காட்டி தீட்சை வழங்கிய சோதி விளங்கிய இடத்தில் சிறந்து இருந்த அது சிவமே என்பதை அறியுங்கள்.
     

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

Dec 28, 2011

அகங்காரம் வெந்து சாம்பலாகும்: படித்ததில் பிடித்தது.


 
ரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை  ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப் பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது, அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில்  பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,

இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில் அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,

அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும் பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான், விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான், காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,

இப்படிப்பட்ட பூஜையும். பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில் ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்?  தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி வீசினால் பேய் அகன்று விடும்,

ஆனால் பேய் கடுகுக்குள்யே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப் பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது, படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால் அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப் போகவேண்டியதுதான்.

மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில் உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும். உஜிலாதேவிக்கு வந்தனங்களுடன்.. படித்ததில் பிடித்தது.. அன்புடன் கே எம் தர்மா !!!