Search This Blog

Showing posts with label ஆழ்மன சக்திகள். Show all posts
Showing posts with label ஆழ்மன சக்திகள். Show all posts

Dec 4, 2023

ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (3) தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்


ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (3)
ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை - அவநம்பிக்கை, அவசரம், அமைதியின்மை.


அவநம்பிக்கை
அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது. இந்த அவ நம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. மேலும் இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்ற வில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பர்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரம்மாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்பிற்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).

அவசரம்
அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். 

விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை
மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது. நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனதை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மனசக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள். இனி அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் காண்போமா?

மேலும் பயணிப்போம்.... (தொடரும்)
நன்றி:விகடன்

Aug 15, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 
தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்த கலையாக இருந்தது. யோகிகளும், சித்தர்களும் தியானத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்தியும், மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும் மலைக்க வைக்கும் சக்திகளை எல்லாம் பெற்றிருந்தார்கள். இந்திய வரலாற்றை ஆராய்ந்த பல வெளிநாட்டு வரலாற்றாசிரியர்களும் யோகிகளின் இந்த யோக சக்திகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
 
இந்திய யோகா பற்றி பல முனிவர்களும், யோகிகளும் பல வழிகளில் விவரித்திருந்தனர் என்றாலும் பதஞ்சலி மகரிஷி அவற்றை எல்லாம் சேர்த்து, தொகுத்து, சுருக்கி யோக சூத்திரங்கள்எழுதினார். அந்த யோக சூத்திரங்களைப் படித்துப் பார்த்தவர்களுக்கு ஒரு பிரமிப்பு வராமல் இருக்காது. அது என்ன வென்றால் ஒரு தேவையில்லாத அலங்காரச் சொல்லைக் கூட அதில் யாரும் காண முடியாது.

முதல் சூத்திரமே இப்போது யோகம் விளக்கப்படுகிறதுஎன்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார். மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்”  ஒரு குளத்தில் அலைகள் இல்லாத போது, அது நிச்சலனமாக இருக்கும் போது அதன் அடியில் உள்ளவை எல்லாம் மிகத் துல்லியமாகத் தெரியும். அதே போல மனமும் பல எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்படாமல், அது பல வித எண்ணங்களால் ஆட்கொள்ளப்படாமல் அமைதியாக இருக்கும் போது நம் ஆழ்மனதை நம்மால் முழுவதுமாக அறிய முடிகிறது. ஆழ்மனதை அறிகிற போது அதன் அற்புத சக்திகள் மிக எளிதில் நமக்குக் கை கூடுகின்றன. இதையே பதஞ்சலி மகரிஷி யோகமாகச் சொல்கிறார்.

இப்படி யோக சூத்திரங்களை மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகளால் சுருக்கமாக விளக்கிக் கொண்டே போகிறார் பதஞ்சலி. முழுவதுமாக யோக சூத்திரங்களைப் படிக்க விரும்புபவர்கள் விவேகானந்தரின் ராஜ யோகம் நூலைப் படிக்கலாம். அதில் அவர் பதஞ்சலியின் சூத்திரங்களையும், அதற்கான விளக்கங்களையும் மிக அழகாகக் கொடுத்துள்ளார்.

பதஞ்சலி யோகத்தின் எட்டு அங்கங்களைக் குறிப்பிடுகிறார். அதில் ஏழாவது அங்கம் தான் தியானம். பெரும்பாலான தியான வகைகள் யோகாவின் சில அம்சங்களை யாவது பின்பற்றி வலியுறுத்துகின்றன என்பதால் பதஞ்சலியின் யோகாவின் எட்டு நிலைகளை மிகச்சுருக்கமாக ஒரு சாமானியனுடைய பார்வையில் தெரிந்து கொள்வோம்.

1.
யமா அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகியவற்றை இதில் பதஞ்சலி கூறுகிறார்.
2.
நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றை பதஞ்சலி இதில் குறிப்பிடுகிறார்.
3.
ஆசனா - யோகாசனங்கள்
4.
ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.
5.
ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வழியோ போகாமல் கட்டுப்படுத்துதல்
6.
தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்
7.
தியானா- தியானம்
8.
சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்.

இந்த ஒவ்வொரு படியைப் பற்றியும் இங்கு கூறியிருப்பது துல்லியமான விளக்கமாகாது. இங்கு பதஞ்சலியின் யோக சூத்திரங்களை விரிவாக அறிந்து தேர்ச்சி அடைவது நம் குறிக்கோள் அல்ல என்பதால் பொதுவான விளக்கம் எளிய சொற்களில் தரப்பட்டிருக்கிறது. (அவற்றை மிகச்சரியாக, விரிவாக அறிய விரும்புபவர்கள் பதஞ்சலியின் யோகசூத்திரங்களை நல்ல நூல்கள் மூலம் படித்துக் கொள்ளலாம்)

இங்கு நம்முடைய ஆழ்மன சக்திகளை அடைய எட்டு படிகளை பதஞ்சலி காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆரம்பப் படிகளாகவே இவற்றை சொல்வது ஏனென்றால் நற்பண்புகள் இல்லாதவன் எதைக் கற்றாலும் அதனால் அவனுக்கும், அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் தீமையே விளையும் என்ற ஞானம் அன்றைய யோகிகளுக்கு இருந்தது. இன்றைய காலக் கட்டத்தில் நற்குணங்கள் இல்லாத அறிவு எத்தனை அழிவுகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அடுத்ததாக மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். உடல்நலம் சரியாக இருக்கும் வரை மட்டுமே மற்ற உயர்ந்த விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்துதல் சாத்தியம் அல்லவா?

நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது என்பதை முன்பே பார்த்தோம்.

ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.

அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது. குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.

சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசிபடியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா. இப்படி ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து தியான முறைகளும் அமைந்துள்ளன.

இனி அந்த தியான முறைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
அன்பு நண்பர்களே!! ஆழ்மனத்தின் அற்புதசக்திகள் என்னும் தலைப்பின்கீழ் வரும் இந்த தியானம் மற்றும் யோகா பதிவுகளை தனியாக ஒரு உப தலைப்பின் கீழ் தொகுத்துள்ளேன். தியானம் மற்றும் யோகா பதிவுகளை மட்டும் விரும்பும் அன்பர்கள் தனியே காணவேண்டியே இந்த பதிவு, இறுதியில் மீண்டும் நாம் ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் தலைப்பில் இணைந்து கொள்வோம். 

மீண்டும் சந்திப்போம் அன்பு நட்புக்களே.. பல பயனுள்ள பதிவுகளுடன்.. அன்புடன் கே எம் தர்மா....
நன்றி:விகடன்..என்.கணேசன்
 

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-7 தியானம் சில முக்கிய குறிப்புக்கள்:

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-7
தியானங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் யோகாவிலிருந்து உருவானவை. கௌதம புத்தர் தன் ஞானத் தேடலின் ஆரம்பத்தில் பல யோகிகளிடம் தியான முறைகளைக் கற்றிருந்தார். ஞானமடைந்த பின்னர் அவர் போதித்த தியான முறைகள் யோகாவையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. 

அவரது காலத்திற்குப் பின் அவருடைய சீடர்கள் அந்த தியான முறைகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, பல அனுபவங்கள் பெற்று மேலும் பல தியான முறைகளை உருவாக்கினார்கள். புத்த மதம் பரவிய பல நாடுகளில் தியான முறைகள் பல்வேறு வடிவம் எடுத்தன. ஜென் தியானம், திபெத்திய தியானம், தந்திரா தியானம், விபாசனா தியானம், போன்ற பல்வேறு தியானமுறைகளை புத்த மதம் உருவாக்கி வளர்த்தது.

ஜான் மெயின் (John Main), அந்தோனி டி மெல்லோ (Anthony de Mello) போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் இந்த தியானமுறைகளை கிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்து பிரபலப்படுத்தினார்கள். வியட்நாம் நாட்டுப் புத்தபிக்கு திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) வியட்நாமியப் போரால் பாதிக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்த சில தியான முறைகள் அமைதியிழந்த மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருவதில் வல்லமை உடையவையாக இருந்தன. ஓஷோ, மகரிஷி மகேஷ் யோகி, தீபக் சோப்ரா போன்றோர் பல தியான முறைகளை எளிமைப்படுத்தியும், பிரபலப்படுத்தியும் உலகெங்கும் பலதரப்பு மக்களைச் சென்றடையும் படி செய்துள்ளனர். இப்படி காலத்திற்கேற்ப, நம்பிக்கைகளுக் கேற்ப, தன்மைகளுக்கு ஏற்ப பல தியான முறைகள் பிரபலமாக உள்ளன.

ஆனால் எல்லா தியான முறைகளும் எல்லாருடைய தன்மைகளுக்கும் ஏற்ப இருப்பதில்லை. சிலருக்கு மிக நன்றாக தேர்ச்சி பெற முடிந்த தியான முறைகள் சிலருக்கு சிறிதும் ஒத்து வராததாக இருக்கும். ஒவ்வொரு தியான முறையையும் பிரசாரம் செய்பவர்கள் தங்களுடைய தியான முறை தான் மிகச் சிறந்தது என்று கூறுவார்கள். ஆனால் தியான முறைகளில் ஒன்று சிறந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது அறிவுபூர்வமான கருத்தல்ல. எல்லா தியான முறைகளும் நம்மை அமைதிப்படுத்துவதாகவும், நம்மை அறிவதற்காகவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. 

ஒரு தியான முறையே சகலருக்கும் மிகச் சிறந்ததாக இருக்குமானால் இன்னொன்றிற்கு அவசியமே இல்லை அல்லவா? அப்படிப் பல தியான முறைகள் இருப்பதே பல வகை மனிதர்களுக்கு ஏற்ப உதவுவதற்குத் தான். உங்கள் தன்மைக்கு ஏற்ப இருக்கும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டு விடுங்கள். இந்த முறை தான் சரி, மற்ற முறைகள் சரியல்ல என்று கணிக்காதீர்கள். போக வேண்டிய இடத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்த்தால் எல்லா பாதைகளும் சிறந்தவையே.

பொதுவாக தியானங்கள் மதசார்பற்றவை. சில தியானங்களில் மந்திரங்கள், பிரார்த்தனைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அந்த மந்திரங்களும், பிரார்த்தனைகளும் மத நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை மதங்கள் சம்பந்தப்பட்டவையாகின்றன. இல்லா விட்டால் அடிப்படையில் தியானங்கள் மத சார்பற்றவையே. தியானங்களின் வகைகள் பலவாக இருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் எல்லா தியானங்களுக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

முதலாவதாக இடம். ஆரம்பத்தில் தியானம் ஒரே இடத்தில் செய்வது நல்லது. அந்த இடத்தை நீங்கள் தூங்குவதற்கோ, அரட்டை அடிப்பதற்கோ, மற்ற வேலைகளைச் செய்வதற்கோ உபயோகப்படுத்தக் கூடாது. அந்த இடத்தை மிகத் தூய்மையாகவும், புனிதமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம். அந்த இடத்தில் வேறு வேலைகளைச் செய்தோமானால் தியான அலைகளுக்கு முரண்பாடான அலைகள் உருவாகி தியான அலைகளைப் போக்கடித்து விட வாய்ப்பு உள்ளது.

அந்தக் காலத்தில் பூஜையறை என்று ஒரு தனியறையை உருவாக்கி இருந்த காரணமும் அதற்குத் தான். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறானே பின் ஏன் தனியறை என்று சிலர் நினைக்கக் கூடும். காரணம் அந்த அறை இறைவனுக்காக இல்லை, நமக்காகத் தான். இறை எண்ணங்கள் அல்லாத, அதற்கு நேர்மாறான எண்ணங்களும் நமக்குள்ளே நிறையவே இருப்பதால் இறை எண்ணங்களையே பிரதானப்படுத்தும் ஓரிடமாவது நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர் எண்ணினார்கள். கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை உருவாக்கப்பட்ட காரணமும் அது தான். ஆனால் இன்று அவற்றை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியே!

யோகிகள், மகான்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்றவர்கள் ஒரு பேரமைதியை உணரக்கூடும். காரணம் அந்த இடங்களில் அவர்களது எண்ண அலைகள் நிறைந்திருப்பது தான். உதாரணத்திற்கு திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் ரமண மகரிஷி தினமும் தியானம் செய்தபடி மக்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்த இடத்தைச் சொல்லலாம். இன்றும் அந்த அறையில் சென்று தியானம் செய்பவர்கள் அங்குள்ள சக்தி வாய்ந்த தியான அலைகளை உணரலாம்.

தனியறை என்று எங்கள் வீட்டில் கிடையாது என்று சொல்பவர்கள் ஒரு அறையின் மூலையைக் கூடத் தாங்கள் தியானம் செய்யும் இடமாகப் பயன்படுத்தலாம். அந்த இடத்தை புனிதமாக வைத்துக் கொண்டால் போதுமானது. பூஜையறை ஆனாலும் சரி, வேறு ஒரு அறையானாலும் சரி, அறையின் மூலையானாலும் சரி கோபம், வெறுப்பு, தீய எண்ண அலைகள் எதையும் அங்கு ஏற்படுத்தி அந்த இடத்தின் புனிதத்தன்மை, தியானத்தன்மை குறைந்து விடாமல் கவனமாக இருத்தல் முக்கியம்.

இரண்டாவதாக காலம். தியானத்திற்கு ஏற்ற காலங்களாக சந்தியா காலங்களை அக்காலத்தில் குறித்திருந்தார்கள். இரவும், பகலும் சந்திக்கும் அதிகாலை நேரமும், பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரமும் தியானத்திற்கு உகந்தது என்று நினைத்தார்கள். ஆனால் இன்று நாளை ஆரம்பிக்கிற அதிகாலை நேரமும், நாளை முடிக்கிற இரவு நேரமும் சிறந்தது என்ற கருத்து பலப்பட்டு வருகிறது. ஒரு நாளை தியானத்தில் ஆரம்பித்து, தியானத்தில் முடிப்பது நல்லது என்பது அப்படி கருதுபவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால் இதில் திட்டவட்டமான விதிகள் இல்லை. 

குறைந்த பட்சம் 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாவது தியானம் நீடித்தல் அவசியம். தினமும் இந்த 20 முதல் 30 நிமிடங்களை காலையும், மாலை அல்லது இரவும் செய்வது நல்லது. அதை ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் செய்வது சிறந்தது. மனிதன் பழக்கங்களால் ஆளப்படுபவன் என்பதால் அதை குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் தொடர்ந்து செய்வது பழக்கமாகவே மாறி விடும். ஒரே ஒரு பொழுது தான் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் அந்த ஒரு பொழுதிலாவது குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்ய வேண்டும்.
 
மூன்றாவதாக குறுக்கீடுகள். தியான நேரங்களில் குறுக்கீடுகளை குறையுங்கள். அந்த நேரங்களில் செல்போனை ஆஃப் செய்து வையுங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் அந்த நேரத்தில் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் இருக்கச் சொல்லுங்கள். முடிந்த வரை மற்ற கவனஈர்ப்பு சமாச்சாரங்களை தவிர்க்கவும். மனமே வேண்டிய அளவு குறுக்கீடுகள் செய்யும் என்பதால் அதற்கு கூட்டணிக்கு மற்றவற்றையும் அழைத்துக் கொள்ளாதீர்கள்.

இனி தியானமுறைகளுக்குச் செல்வோமா?
மேலும் பயணிப்போம்.....(தொடரும்) நன்றி ஆனந்த விகடன் மற்றும் என்.கணேசன்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 6 தியானத்தால் மேம்பாடு

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 6 
ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல ஒரு எளிய பயிற்சியைப் பார்த்தோம். படிக்கும் போது மிக எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்து பார்த்த பலருக்கு அது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது. மனம் அரைமணி நேரத்திற்காவது அமைதியாக இருப்பது பெரும்பாடாக இருந்திருக்கலாம். 

 எண்ணங்களுக்கும் மூச்சிற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவ பூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர். 

ஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங் களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும். அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும். 

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும் என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள். தியானப்பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். 

முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப்பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996
ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். 

அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989
ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation ™ . அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது. 

ஆழ்மன சக்திகளுக்கு ஏற்ற அலைவரிசைகளில் நம்மை இருத்தச் செய்வதுடன் மற்றபல மன நலம் மற்றும் உடல் நலமும் தியானத்தால் மேம்படுவதால் முக்கியமான சில தியானங்கள் பற்றி அறிந்து கொள்வோமா? அடுத்த வாரம் வரை சென்ற அத்தியாயத்தில் சொன்ன பயிற்சியை இது வரை செய்யாத வர்களும் தொடர்ந்து செய்யவும். அது தியானம் சுலபமாகக் கைகூட உதவியாய் இருக்கும்.

மேலும் பயணிப்போம்.....(தொடரும்) நன்றி ஆனந்த விகடன் மற்றும் என்.கணேசன்