Search This Blog

Dec 30, 2011

சிவவாக்கியம் (341-345) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (341-345)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -341
பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.
 
     
ஞானம் பொங்கி நின்றது மௌனமே. உடம்பில் ஊமை எழுத்தாகி பொதிந்து நின்றது மௌனமே. உயிரில் தங்கி நின்றது மௌனமே. தயங்கி ஆடும் மனமும் மௌனமே. கங்கையான நீரானது மௌனமே. வாசி எனும் கதிக்குள் நின்றது மௌனமே. சந்திரனாகிய மதியும் மௌனமே. சிவன் இருந்த பஞ்சாட்சரமும் மௌனமே என்பதை அறிந்து மோனத்தில் தியானியுங்கள்.  
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -342
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்த செஞ் சுடரிலே
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில்
ஒனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே.   
 
மோனம் ஆன ஆகாய வீதியில் சுழிமுனையில் பிரம்மம் ஆக விளங்கி நின்று வாலையில் அம்பைப் போன்று கிளம்பி வரும் தனஞ்செயன் வாயு குண்டலினி சக்தியாக முதுகுத்தண்டின் வீதி வழியாக மேலேறி வாலையில் இருக்கும் செஞ்சுடராகிய சோதியில் சேரும். அதை ஞானக் கண்ணால் கண்டு அதன் மூலையில் நரலை எனும் மலம் தங்கும் வாசலில் நின்று ஓங்காரமான செஞ் சுடராக உதித்து நிற்பது சிவமே என்பதை உணர்ந்து தியானியுங்கள்.         
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -343
உதித்தெழுந்த வாலையும் உயங்கி நின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த
வாலையும் மறைந்து நின்ற வாலையும்
கொதித்தெழுந்து கும்பலாகி கூவும் கீயும் ஆனதே.  
     
உச்சித் திலகமாய் உதித்தெழுந்த வாலை நம் உடம்பில் உயிராகி உழன்று நிற்பவள் வாலை. வாசியோக கதியில் நம் கதியாக எழுபவள் வாலை, காலையாகி கதிரவனில் நின்றவள் வாலை, யாவரும் மதிக்க நிற்பவள் வாலை, அவளை மதித்து பூசிப்பதில் எழுந்தவள் வாலை, அவளால் நமக்குள் மறைந்து நின்ற ஞானத்தைத் தருபவளும் வாலையே. அவளை அறிந்து வாசியினால் கதி எழுப்பி கூவும் ஹீயும் என்ற அட்சரத்தால் ஒன்றாக்கி தியானியுங்கள். அகார, உகார, இகார நாதத்தால் ஒன்றாகி ஓங்காரமானவளே வாலை.    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 344
கூவும் கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நரைகள் போல் பொருந்தி நின்ற பூரணம்
ஆவி ஆவி ஆவி ஆவி அன்பருள்ளம் உற்றதே.  
 
  . 
கூ என்பது உகாரம், கீ என்பது இகாரம். இது அகாரத்தில் சேர்ந்து மௌனமாக நின்ற கொள்கையான அது என்ற கொள்கையை உணர்ந்திடுங்கள். மூன்றெழுத்தாக உதித்தெழுந்த வாசி சந்திர சூரிய அக்னி என்ற முச்சுடர் விரிவாக நின்றது. பூவிலே உள்ள மணம் போல நமக்குள் பொருந்தி நின்ற அதுவே பூரணம். அது ஆவியாக ஆன்மாவாகி அன்பே சிவமாக அன்பர்களின் உள்ளத்தில் உற்றிருக்கின்றது.     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 345
ஆண்மை கூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதி சூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்து நின்ற நாதமே.         
  . 
ஆண்மை பேசும் மனிதர்களே! சூரிய கலை ஓடும் வீதியை உற்று நோக்கி மெய்ப்பொருளைக் கண்டு தியானியுங்கள். உடலில் உள்ள மும்மலக் குற்றங்களையும் உயிரில் உள்ள பாவக் கறைகளையும் ஞானத்தால் அகற்ற வல்லவர்களானால் தூணாகி நிற்கும் ஆதியின் சூட்சத்தில் சோதியைக் காணலாம்.  நான்கு மறையாக உள்ள வாசலில் நாத விந்தாக நடித்து நின்ற நாதனைச் சேரலாம்.
     

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!