Search This Blog

Dec 31, 2011

சிவவாக்கியம் (356-360) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (356-360)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -356
சோதி சோதி யென்று நாடித் தோற்பவர் சிலவரே
ஆதி ஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே
வாதி வாதி யென்று சொல்லும் வம்பருஞ் சிலவரே
நீதி நீதி நீதி நீதி நின்றிடு முழுச்சுடர்.     
  
    
சோதியை உண்மையென்று உணர்ந்து அச்சோதியை உணர்ந்து அச்சோதியையே நாடித் தியானித்து சோதியை அடையமுடியாமல் தோற்பவர்கள் சிலரே. அது ஆதியாக அனைவரிடமும் வாலையாக உள்ளதை அறிந்து அதையே நாடித் தேடும் ஆண்மையாளர்கள் சிலரே. வாத கற்பம் செய்து உண்டு இறைவனை அடையலாம் என்று சொல்லி வாதவித்தை செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான நீதியாக நிற்பது பூரணமான முழுச்சுடர் சோதி என்பதை உணருங்கள்.    

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -357
சுடரதாகி யெழும்பியங்குந் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய மைக்க முன்
படரதாக நின்ற வாதி பஞ்ச பூத மாகியே
அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே.
 
காலங்காலமாக நீதியாக ஒளி மிகுந்த சுடராக யாவிலும் பொருந்தி இயங்குவது தூய சோதியே. அச்சோதியிலிருந்து நெருப்புக் கோலத்தில் இருந்தே இப்பூமியும் விண்ணும் உண்டாகி அதுவே ஏகமான மெய்ப் பொருளாகி நமக்குள் அமைந்திருந்தது. அது ஆதியாகி அனைத்திலும் படர்ந்து விரிந்து பஞ்ச பூதங்கள் உண்டாயிற்று. அதுவே அகாரமான சூரியனில் இருந்து அண்டத்திலும் பிண்டத்திலும் ஆண்மையாகி சிவனாக நின்றது.             
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -358
நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்றுலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார்
நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.
 
   
இவ்வாறு அனைத்திலும் அனாதியாக நின்று கொண்டிருந்த சோதியை இப்பூமியிலே அரும்பிறப்பாக பிறந்த மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிவை அறிந்து, கண்களில் நீர் மல்க, அன்பே சிவமாய் உணர்ந்து யோக ஞான சாதகம் செய்து உலாவுவார்கள். தனக்குள் சூட்சம தேகத்தில் உள்ள அகக்கண்ணினையே நோக்கி அதன் மேல் முனையில் ஞானக் காட்சியையும் கண்டு நானாக உள்ள தன்னைக் காணுவார்கள். அங்கே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை பொங்கி வடிந்திடும். நாதமாகிய உடலும் விந்தாகிய உயிரும் ஒன்றி மகிழ்ந்து ஒளி. ஒலி கலப்பால் பேரின்பம் புலப்படும்.    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 359
வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும்
காயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி யின்றியே படர்ந்து நின்ற பான்மையே
நயங்கள் கோ வென்றே நடுங்கி நங்கையான தீபமே.  
 
நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் தோன்றியது. அதுவே விந்து நாதமாகி இப்புவியில் தொடர்ந்து கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. அது எதிலும் தோன்றாத சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றி படர்ந்து வெகு நேர்த்தியாக நடந்து வருகிறது. இவை யாவும் உடம்பிலேயே நயமாக இருந்து நடனமாடிக் கொண்டு கோனாக விளங்கும் இடத்தில் வாலையாகி அதுவே சோதியான தீபமாக உயிரில் சிறந்துள்ளது.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 360 
தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
தாபமான மூலையிற் சமைந்து நின்ற சூட்சமுந்
சாபமான மோட்சமுந் தடிந்து நின்றி லங்குமே.     
 

அச்சோதி தீபத்தின் உச்சி முனையிலே சூரியன் விளங்கும் அகாரத்தின் சுழியில் குண்டலினி சக்தியை ஆறு ஆதாரங்களையும் கடந்து கோயிலாக இருக்கும் இடத்தை அறிந்து 'கூ' என்ற உகாரத்தால் ஊதி நம் தீயாக கொதித்து நின்ற தீயான சிகாரத்தில் சேருங்கள். கோபமும், காமமும், தீயாக கொதித்து நிற்கும் மூலையில் வாலையாக சமைந்து நின்ற சூட்சமத்தை அறிந்து அதிலேயே தவம் செய்யுங்கள். அதனால் சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து மோட்சவீடு அது என்று உணர்ந்து தியானியுங்கள். அவ்வாலையில்தான் ஆன்மா நின்று இலங்குகின்றது.   

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!