Search This Blog

Dec 31, 2011

சிவவாக்கியம் (351-355) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (351-355)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -351
உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பறந்து நின்றுலவுமே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே.  
  
    
அண்ட உச்சி எனும் புருவமத்தியில் சாதி பேதம் யாவும் ஒழிந்திருக்கும் மெய்ப்பொருள். அதிலே  பரவி மனமாகிய சந்திரனும் பரந்து நின்று உலவும், அம்மனதை அடக்கி சுழுமுனையைத் திறந்து செக்கச் சிவந்த தீபமாக சோதியில் மௌனத்தில் நின்று தியானியுங்கள். மௌனமே கச்சி எனும் சகஸ்ரதளத்தை கடந்து சிவமயமாய் விளங்கும் பரம் பொருளில் சேர்த்து வைக்கும்.
  
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -352
அஞ்சு கொம்பில் நின்ற நாதம்ஆலை போல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே..
 
ஐந்து புலன்களில் நின்ற நாதம் வாசிப் பயிற்சியினால் ஆலையில் வரும் புகைபோல் மேல் நோக்கி எழும். அது விந்துவுடன் சேர்ந்து பூவாக மலர்ந்து உன் உடம்பிலேயே பரிசுத்தமாகியே நின்றிருக்கும். அதில்தான் செஞ்சுடராக சிவம் உதித்து சுழன்று கொண்டுள்ளது. அங்கெ பஞ்ச பூதங்களும் பரந்து நின்று பஞ்ச வண்ணங்களில் திருவடியாக ஆகி ஊமை எழுத்தான மௌனமாக நிற்கின்றது. அதனை அறிந்து அதிலே மௌனத்தில் தியானியுங்கள்.            
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -353
சுடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே
அரனிருந்த ஹூவிலே
இடுதிஎன்ற சோலையிலிருந்து முச்சுடரிலே
நடுதிஎன்று நாதமோடி நன்குற அமைந்ததே. 
 
 

சடுதியில் மறையும் இவ்வுடம்பின் தத்துவங்கள் எல்லாம் ஒரேழுத்தான 'ஹீ' எனும் சிகாரத்தில் தான் இருக்கின்றது. மூலாதாரத்தீயானது முதுகெலும்பின் வழியே மேலேறி ஹ்ரீங்காரமாக ஒலிக்கும். அது அகாரமாக விளங்கும் உடம்பினில் 'ஹூ'வாகவும், ஈசன் இருந்த இடமான உகாரமான உயிரில் ஹீ எனும் அட்சரத்துடனும் வாசியாகி உட்புகும் அது இரு தீயாக விளங்கும் சந்திர, சூரியன் எனும் சோலையிலிருந்து சுழுமுனை என்ற மூன்று கலைகளும் ஒன்றாகி முச்சுடராக இருக்கின்றது. அச்சுரின் நடுவாக விளங்கும் சோதியில் தான் ஆ, ஹூ, ஹீ என்று ஓங்கார நாதம் வாசியில் சேர்ந்து கூடி நன்றாக அமைந்திருக்கின்றது.    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 354

அமையுமால் மோனமும் அரனிருந்த மோனமும்
சமையும்  பூத மோனமுந் தரித்திருந்த மோனமும்
இமையுங் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தையுற்று நோக்கிலார்.
 

திருமாலும், சிவனும் அமைந்திருந்தது மோனமாகிய ஒரெழுத்தில். ஐந்து பூதங்களும் ஒன்றாகி சமைந்திருப்பதும் அதனால் உடம்பு தரித்திருந்ததும் மௌனத்தில்தான். அதனை தங்கள் உடம்பில் இமயம் எனும் மலையில் வேகங்கொண்ட மனதை வாசியாக்கி உச்சியில் இலங்கிக் கொண்டிருக்கும் மௌனத்தில் தியானித்து இறைபாதம் சேர்த்து இன்புறுபவர்களே தன்னை அறிந்த யோகிகள். மௌனத்திலேயே தியானித்து மௌனத்தையே உற்று நோக்கி தவம் புரியும் ஞானிகள் தங்கள் உடம்பையும், அது அழிவதையும் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்.     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 355
பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே
காய்ச்ச கொம்பினுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமான தேதடா விரிவு தங்கு மிங்குமே
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே.  
  . 
மனம் பாய்ந்து செல்லும் இடமான வழியிலேதான் பரம் பொருளான ஈசன் சுழியாகிய முனையில் இருக்கின்றான். காயமான உடம்பினுள்ளே மெய்ப் பொருள் இருக்கின்றது. அது வெட்டவெளியாக வீசிக் கொண்டிருப்பதும், ஆகாயமாக அனைத்து தத்துவங்களும் விரிவாகி தங்கி இருப்பதும், எங்கும் எல்லா உடம்பிலும் உள்ளதை உணருங்கள். அதனை அறிந்து கொண்டு வெளிச்சுவாசத்தோடு உட்சுவாசத்தை வாசிப் பயிற்சியினால் கூட்டி மேலேற்ற அது அங்கு முட்டி நின்ற தூணிலே விளங்கும் சோதியில் சேர்த்து தியானியுங்கள்.


***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!