Search This Blog

Nov 8, 2011

சிவவாக்கியம் (121-125) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (121-125)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 121
உயிரு நன்மையால் உடல் எடுத்துவந்து இருந்திடுமே
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றை ஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே!!!

உயிரானது நல்வினை, தீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்புவியில் வந்து வாழ்ந்து வருகின்றது. உடம்பைவிட்டு உயிர் போனபோது அது உருவம் ஒழிந்து அரூபமாக ஆகின்றது. உயிர் என்பது சிவமென்ற பரம்பொருளின் மாயையாகி, மெய்ப்பொருளாகி அனைத்தையும் தன்னுள் மறைத்து மறைந்திடுமே!!! உயிர் சிவனாகவும், உடம்புச்  சக்தியாகவும்  இருப்பதை அறிந்து தியான தவத்தால் ஒன்றிணைத்து சமாதி இன்பம் அடைபவர், உடம்பை உயிரில் கரைத்து இரண்டும் ஒன்றாகி சிவத்தை அடைவர்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 122
நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்

நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்ற தொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதொன்று கொம்பு கால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே!!!

'
' முதல் '' வரை உள்ள நேட்டேழ்த்துக்கள் யாவும் வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் வட்டமான பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு வருகின்றது. எல்லா எழுத்திலும் ஒரேழுத்து நின்றதை கண்டுகொள்ளுங்கள். குற்றெழுத்தாகிய '' முதல் '' வரையில் அகார ஒலியில் உற்றிருப்பதை உணருங்கள். அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் எழுத்துக்களின் ஒலி மாறுவதை அறியுங்கள்.  உதாரணமாக '' என்பதில் கொம்பு போட்டால் 'சி' என்ற சிவனாகவும், 'சீ' என்ற சீவனாகவும், கொம்பு கால் சேர்த்தால் செ, சே, சு, சூ, சா, சொ, சோ, என்று ஒலி மாறுகிறது. இப்படி விளங்கும் எழுத்துக்கள் யாவும் ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி மொழியில் நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து தியானியுங்கள்
***********************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 123
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணியாகவே கலந்து நின்ற தென் பிரான்
மன்னிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே!!!

அமிர்தம் உண்டு அழியாமல் வானுலகில் இருக்கும் தேவர்களும் அறிய முடியாதது மெய்ப்பொருள். அதனை ஈசன் எனக்கு அறிவித்து கண்ணில் ஆணியைப் போல் கலந்து நிற்கிறான் என் குருபிரான்.
மெய்ப் பொருளை அறிந்தாலே இம்மண்ணில் பிறப்பு, இறப்பு இல்லாது போகும் ஈசனின் திருவடிகளை சிந்தையில் வைத்து தியானியுங்கள். இந்த ஞானத்தை பெற்ற யோகியரிடத்தில் அண்ணலாக ஈசன் சோதி வடிவாய் அமர்ந்து வாழ்வதும் சத்தியமே.
******************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 124
வின் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்து புக்கிருந்த பின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே!!!

உனக்குள் வின்வேளியாக இருக்கும் மனத்தை கடந்து அப்பால் சோதியாக உலாவும் ஈசனை அறிந்து மேலைவாசல் என்னும் பத்தாம் வாசலை யோக ஞானத்தால் திறந்து தியானிக்க வேண்டும். அப்போது கண்களிக்க உனக்குள்ளே கலந்து புகுந்திருக்கும் இறைவனை தரிசிக்கலாம். இம்மண்ணிலே பிறவி எடுக்கும் மாயமும், மயக்கத்தைத் தருகின்ற சுக போகங்கள் யாவும் மறைந்துபோய் விடும். விண்ணில் நிற்கும் சூரியனைப் போல் என்னில் அகாரத்தில் கலந்து நிற்கும் ஈசனோடு இணைந்து இருப்பது உண்மையாகும்.
*********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 125
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்ட பின்
நாலுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம் உண்ட கந்தர் ஆணை அம்மை ஆணை உண்மையே!!!

இவ்வுடலுக்கு மூலமாக இயங்கும் பிராணவாயுவை அறிந்து பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை செய்யவேண்டும். நம் பிராணனில் இருந்து வெளியேறும் நாலு அங்குல மூச்சை இந்த யோகத்தில் நாட்டம் வைத்து ரேசகம், கும்பகம், பூரகம், என்று வாசியை நாட்டி செய்து வந்தீர்களானால் என்றும் இளமை பெற்று பாலனாக வாழலாம். இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அவ்விஷத்தை தடுத்த என் அன்னையின் மீதும் ஆணையிட்டுக் கூறுகின்றேன்
**************************************************************************.
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!