Search This Blog

Oct 26, 2011

சிவவாக்கியம் (096-100) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (096-100)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -096

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை
 
சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

ஒரேழுத்து மந்திரமே முதல் எழுத்தாகிய அகாரம் தோன்றுவதற்கும் உயிர் எழுத்தாகி உகாரம் தோன்றுவதற்கும் காரணமாய் உள்ளது. அது எவ்வாறு என்பதை அறிந்து தியாநிப்பவர்களுக்கு இங்கு ஏழு பிறப்பு என்பது இல்லை என்றாகிவிடும். தொண்டைச் சவ்வில் உதிக்கும் அந்த மந்திரத்தை 'ம்' என்று ஓதி தன்னிடமே  உள்ள பரம்பொருளில் இருத்தி தியானியுங்கள். அகாரத்திலும், உகாரத்திலும், மகாரத்திலும் சிகாரமாய் அமர்ந்திருப்பது ஊமைஎழுத்தே 
என்பதை உணருங்கள். 
***********************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-097

நவ்விரண்டு காலத்தை நவின்ற மவ் வயிறதாய்
சிவ்வேரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வாய் ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!

பஞ்சாட்சரம் நமது உடம்பில் நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலும், மகாரம் வயிறாகவும், சிகாரம் நெஞ்சிலிருந்து இரண்டு தோள்கள் ஆகவும், வகாரம் தொண்டையாவும், யகாரம் இரண்டு கண்களாகவும் அனைவருக்கும் நேர்மையாக அமைந்துள்ளது. தூலத்தில் இவ்வாறு அமைந்துள்ள அஞ்செழுத்து சூட்சமத்தில் செம்மையான மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து தியானித்து சிவமே அஞ்செழுத்தாக  இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
***********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -098

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே! 

மூலாதார சக்கரத்தின் உள்ளே பாம்பைப் போல் சுருண்டு மூன்று வளையமாக குண்டலினி சக்தி கனலான தீயாக இருந்து தூங்கிக் கொண்டுள்ளது. அதனை வாசியோகத்தில் விழிப்புறச் செய்தால் அச்சக்தியானது சங்கின் ஓசையுடன் கிளம்பும். . அவ்வாசியை சுழுமுனை எனும் மூலனாடியால் முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றி சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.  அது சக்தியும் சிவனும் ஒன்றாகி இயங்கும் அரங்கன் பள்ளி கொண்ட இடத்தில் சிவமாக அமர்ந்திருப்பதை அறிந்து யோகஞான சாதகத்தால் தியானம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
***********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -099 

கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறு போல்
மடலுலே இருக்கும் எண்கள் மணியரங்க சோதியை
உடலுலே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே!

கடலில் வாழும் ஆமையானது கரையில் ஏறி முட்டையிட்டு மணலைப் போட்டு மூடிவிட்டு கடலுக்கே சென்று விடும்.  பின் கடலில் திரிந்து கொண்டே நினைவாலே அடைகாக்கும். அதனால் முட்டைகள் பொறித்து அவை ரூபமாக வெளிவரும். அதன் பின்னரே தாயுடன் சேர்ந்து ஆமை குஞ்சுகளும் கடலில் திரயும். அவை ரூபம் அடைவதற்கு தாய் ஆமையின் நினைவே காரணமாய் இருந்தது போல், நம் உள்ளமாகிய தாமரையில் இருக்கும் மணியாக விளங்கும் அருட்பெருஞ் சோதியான ஆண்டவனை உடலுக்குள்ளேயே  மெய்ப் பொருளாக இருப்பதை எண்ணி நினைத்து தியானியுங்கள்.
***********************************************
 
 சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -100

மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈண்ட தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே! 

அக்னி மண்டலம்சூரிய மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள் நம் உடற் தத்துவத்தில் உள்ளது. சந்திரகலை, சூரிய கலை சுழுமுனை நாடிகளில் ஓடும் காற்றை வாசியாக்கி மூலாதாரத்தில் செலுத்தி தூணாகிய முதுகுத் தண்டினில் முட்டி மேலேற்ற எண்டும் பாம்பைப் போல் சுருண்டு உறங்கும் குண்டலினி சக்தியை ஓங்காரத்தில் எழும் அகார உகார அட்சரத்தால் எழுப்பி உண்ணாக்கில் வைத்து ஊதவேண்டும். இந்த மந்திரமே பெற்ற தாயும் தந்தையும் எடுத்துரைத்த ஓங்காரமாகும். அதுவே 'ம்' என்ற நாத ஒலியுடன் சோதியான பிரம்மத்தில் சேரும், ஒரெழுத்தில் தோன்றுவதே ஓங்காரம். இதனைச் சொல்லித்தர யாரும் எங்கும் இல்லையே.
***********************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!