Search This Blog

Jan 22, 2012

சிவவாக்கியம் (481-485) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (481-485)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -481
வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்க காதல் கொண்ட தெவ்விடம்
சென்னி நாளு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.            
          

வன்னி எனும் சோதியில் சந்திரன் சூரியன் அக்னி எனும் மூன்று தீயாகி வாழ்கின்றான் எங்கள் நாதனாகிய ஈசன், காமம் எனும் காதல் தோன்றும் இடத்தில்தான் கன்னியாக வாலை உள்ளே இருக்கின்றாள். சென்னியாகிய சிரசிலே சூட்சமாக நான்கு கைகளாகவும் சிவசக்தி என்ற இரண்டு பாதங்களும் உள்ளது. அந்த இரண்டு பாதங்களும் ஒன்றாகி ஒன்றான மெய்ப்பொருளை அறிந்து அதையே சிந்தையில் வைத்து தியானித் திருங்கள். நமக்குள் உள்ள வாசியினால் அதையே உன்னி உன்னி நோக்கியிருந்து உய்வடையும் ஈசன் திருவடி அதுவே என்பதை உணர்ந்து கொண்டு தியானித்து பாருங்கள்..
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -482
தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர்
உண்டுழன்று நம்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவும்  சோலை சூழ வாழுமெங்கள் நாதனும்
பண்டு போல நம்முளே பகுத்திருப்பனீசனே.

இவரே குருவென்றும் அவதாரமென்றும் கூறிக் கொண்டு அப்பொய் குருவுக்கே வாழ்நாள் முழுதும் தொண்டு செய்தும், கூட்டமாக கூடி சூழ்ந்து ஓடி ஆடி உழன்று உண்மையை உணராமல் நீங்கள் செத்துப் போகின்றீர்கள். மெய்குருவாக அவர் நமக்குள்ளேயே உண்டு என்பதை அறிந்து அதிலேயே உழன்று தியானம் செய்தும், சத்விசாரம் செய்தும், உற்று
ர்ந்து பார்க்க மாட்டீர்கள். கற்பகத்தரு விளங்கும் சோலையில் வண்டுகள் போல் உலாவிக் கொண்டுள்ள எங்கள் உள்ளத்தில் வாழும் எங்கள் குருநாதன் ஆதியான மெய்ப்பொருளில் புகுந்து பகுத்தறிவாக இருப்பான் ஈசன் என்பதை உணர்ந்து அதையே பற்றித் தியானித்திருங்கள்.  
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -483
அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தமானதும்
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம்
தெரிய நாலு வேத மாறு சாத்திர புராணமும்
தேடு மாலும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே.
                       
அனாதியான அறிவதற்கரிய ஒரெழுத்தே நமசிவய என்ற அஞ்செழுத்தாகி ஆதி அந்தமான மெய்ப்பொருளாய் ஆகி உள்ளது. அதுவே எட்டான அகாரமாகி அளவிடமுடியாத ஆகாயம் போல் விரிந்து நூறு கோடி மந்திரங்களாக அமைந்தது. இதனையே தெரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களும், ஆறு சாஸ்திரங்களும் புராணங்களும் தேடுமாறு சொல்லுகின்றது. அந்த ஒன்றான ஈசனையே திருமாலும், பிரமனும் தேடியும் காணமுடியவில்லை. அந்த ஒன்றே சர்வ தேவர்களும் மேலான தேவ தேவனான ஈசன் என்பதை உணர்ந்து அறியுங்கள்.       
         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 484
பரமுனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா
கரமுனக்கு நித்தமுங் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவு நாதனே
உரமெனக்கு நீயளித்த உண்மை யுண்மை உண்மையே.
 
ஈசா! நீயே பரம்பொருள் என அறிந்து உனக்கே என்னை அளித்து விட்டேன். எனக்கு வேறு எதைப்பற்றியும் எந்த பயமும் இல்லை. பரமனையே பார்த்து தியானித்து இருக்கின்றேன். என்னுடைய கைகள் நித்தமும் நின்னையே வணங்கி குவித்திடுவதே கடமையாகக் கொண்டிருக்கின்றன. என் சிரசில் நின்று அன்பால் உருக வைத்து அமுத ஞானத்தைக் கொடுத்து ஆனந்தம் தந்து சீராக என்னுள் உலாவுகின்ற குருநாதனே! உரமாக நீ நின்று எனக்களித்த ஓம் நமசிவாயமே உண்மையான மெய்ப்பொருள் என்பதுவே உண்மையாகும்.          

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 485
மூல வட்ட மீதிலே முளைத்த ஐந் தெழுத்திலே
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற நீ
ஞால வட்ட மன்றுலே நவின்ற ஞானி மேலதாய்
ஏக வட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.       
     

மூல வட்டம் என்ற பிரமத்திலிருந்து முளைத்து விளைந்த ஐந்பூதங்களும் ஐந்தெழுத்தாகி இந்த உடம்பின் கோலமானது. அதில் மூன்று வட்டமாகி அகார உகார மகாரமான ஓங்காரத்தில் குளிர்ந்த நீராகவும் அலர்ந்த தீயாகவும் நின்றவன் ஈசன். உலக வட்டமே உங்கள் மன்றுளே ஞானப் பொருள் ஒன்றிலேயே அமைந்துள்ளது. அண்டத்தில் உள்ளவை யாவும் தங்கள் பிண்டத்திலே கண்டு அறிந்து சொல்பவர்கள் ஞானிகள். தங்களுக்குள் ஞானமே மேலாக ஏக வட்டமாகி நின்ற பிரமத்தில் இருந்த அதுவே சிவம் என்பதை உணர்ந்து அறிந்து தியானியுங்கள்.         
             
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைத் தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!