Search This Blog

Jan 21, 2012

சிவவாக்கியம் (461-465) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (461-465)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -461

அல்ல தில்லை யென்று தானாவியும் பொருளுடல்
நல்லவீசர் தாளினைக்கும் நாதனுக்கும் ஈந்திலை
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினை விடென்று தூர தூரமானதே.    
           

இதற்கு இணையாக வேறொன்றுமில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அதுவே நல்லதான ஈசர் திருவடித்தாளிணை என்பதனை அறிந்து கொண்டு தன் உடல் பொருள் ஆவியை குருநாதனுக்கு கொடுத்திடுங்கள். என்றும் தனக்குள் அன்பை வளர்த்து அன்பே சிவமாய் இருப்பதை அறிந்து வாசியை நடத்தி தியானித்திருந்தால் தொல்லையாக வந்த வினைகளும் வருகின்ற வினைகளும் நமக்குத் துன்பம் தராமல் நம்மை விட்டு அகன்று வெகு தூரம் ஓடிவிடும்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -462
ஆனதே பதியது அற்றதே பசு பாசம்
போனதே  மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில்  இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே.

இறைவனால் பதியாக ஆனதே மெய்ப்பொருள். அதிலேயே பசுவாகிய உயிரும், பாசமாகிய மனமும் உற்று இருக்கின்றது. அதிலேயே தியானித்திருப்போர்க்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அகன்று ஐம்புலன்களும் ஒடுங்கி எல்லா வினைகளும் ஒழிந்து போய்விடும். காட்டில் இட்ட தீயுடன் காற்று வந்து சேர்ந்து அக்கானகமே பற்றி எரிவதைப் போல் உங்கள் உடம்பிற்குள் உள்ள தீயில் வாசிக்காற்று சேர்ந்து இரண்டும் ஒன்றாகி ஒன்றி சோதியாக உலாவும்.  
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -463
உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்திருந்திடும்
நிலாவும் அங்கு நேசமாகி நின்றமுர்தம் உண்டு தாங்
குலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.
                       
உடம்பினில் உகாரமாக சந்திரனும் அகாரமாக சூரியனும் உலாவி உதித்து உயிர் அடர்ந்து நின்றதும் ஐம்புலன்களும் அகாரமாக ஒரு தலத்தில் இருந்ததும் அறிந்து அதிலேயே யோக ஞானத்தில் தவம் புரிந்து இருந்திடுங்கள். உடலையும், உயிரையும் பக்தியால் கரைத்து அன்பால் உருகி தியானித்து நின்றிட சூரியனில் நேசமாகி சந்திரனும் இணைந்து அமுர்தகலை  உருவாகி சுழுமுனை திறந்து அமிர்தம் இறங்கிடும். மெய்ப் பொருளில் சோதியாக குலாவுகின்ற ஈசனையே குறித்து உணர்ந்து கும்பிட்டு இருந்திடுங்கள்.       
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 464
கும்பிடும் கருத்துளே குகனையும் ஐங்கரனையும்
நம்பியே இடம் வ
ம் நமஸ்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத்
தும்பி போல வாசகந் தொடர்ந்து சோம்பி நீங்குமே.  

நமக்குள்ளேயே கருத்தாக இருந்து கும்பிடுவது எவ்வாறெனில் முழு நம்பிக்கையுடன் குகனாகிய முருகனை பிரணவத்தாலும் ஐங்கரன் ஆகிய கணபதியை ஓங்காரத்தாலும் உச்சரித்து சந்திர சூரிய கலைகளால் பிராணாயாமம் செய்து சுற்றி வந்து குனிந்து மண்டியிட்டு நமஸ்கரித்து நாட்டமுடன் தியானித்திடுங்கள். நடுவணையில் இருக்கும் மெய்ப் பொருளில் சிவனையும் சக்தியையும் சிவகதியால் இணைத்து வாசியை இருத்தி தொடர்ந்து நடத்திடுங்கள். அதனால் வாசி லயமாகி தும்பியின் ரீங்கார நாதம் ஒலித்து ஓரெழுத்தான சோதியில் சேர்ந்து பரவசம் கிடைக்கும். எல்லாத் துன்பங்களும் சோம்பலும் நீங்கி இறை இன்பம் அடையுங்கள்.           

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 465
நீங்குமைம் புலன்களும் நிறைந்த வல் வினைகளும்
ஆங்காரமா மாசையும் அருந்தடர்ந்த பாவமும்
ஓங்காரத்தினுள்ளிருந்த ஒன்பதொழிற் தொன்றிலத்
தூங்க விசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.       
     

ஐந்து புலன்களின் சேட்டைகளும், உடம்பையும் உயிரையும் பற்றி நிறைந்திருந்த வல்வினைகளும், ஆங்காரமும், மூவாசைகளும் பிறவியை தொடர்ந்த பாவங்களும் மெய்ப் பொருளில் தியானம் செய்து வர நீங்கும். ஓங்காரத்தின் உள்ளிருக்கும் ஒரெழுத்தில் ஒன்பது வாசலில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒன்றான பத்தாம் வாசல் தலத்தில் சோதியாக துலங்க விளங்கும் ஈசனை அறிந்துணர்ந்து அந்த பரிசுத்தமான இடத்தில் குரு சொற்படி துணிவுடன் யோக ஞானத்தால் தியானித்து தூயவனாகுங்கள்.             

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  

 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!