Search This Blog

Jan 19, 2012

சிவவாக்கியம் (451-455) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (451-455)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -451
ஊன்றியேற்றி மண்டலம் மூடுருவி மூன்றுதாள் திறந்து
ஆன்று தந்தி ஏறிடில் அமுதம் வந்திறங்கிடும்
நான்றிதன்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே.    
           

வாசியை மெய்ப்பொருளில் ஊன்றி ஏற்றி மூன்று மண்டலங்களையும் ஊடுருவிக் கடந்து பத்தாம் வாசலில் தாள் திறந்து அங்கேயே ஆழ்ந்து தவம் புரிந்து இருந்திட்டால் மனோன்மணி தாய் கருணையால் தன்னிலேயே அமிர்தம் வந்து உண்ணாக்கில் இறங்கிடும். நான் என்பது இதுதான் என்று ஞான சாதகம் செய்யும் தொண்டருக்கு மெய்ப்பொருள் தெரிந்திடும். அதிலேயே நாதனான ஈசனும் வெளிப்பட்டு தோன்றிடும். நன்கு ஆராய்ந்து நம் உயிரில் பரம்பொருள் பொருந்தி இருப்பதை அறிந்துணர்ந்து தவம் புரிந்து மரணமில்லா பெரு வாழ்வில் வாழ்ந்திடுங்கள்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -452
ஆக மூலனாடியில் அனலெழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வதும் மொழிந்திடில்
தகமேறு நாடியேகர் ஏகமான வாறு போல்
ஏகர் பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே.

மூலாதாரத்தில் இருக்கும் மூலக்கனலை வாசியால் மூலநாடியான சுழுமுனையில் அனலை எழுப்பி இணைத்து அன்பால் கசிந்து தியானித்து இருந்திடுங்கள். மோகம் எனும் மாயையில் விழாது சிற்றின்ப நாட்டத்தை அடக்கி ஒழித்திடுங்கள். எருது ஏறும் எங்கள் ஈசனையே நாடி அவனன்றி ஓர் அணுவும அசையாது என்பதை உணர்ந்து அவன் ஒன்றான மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து ஏகர் பாதத்தில் அன்புடன் இறைஞ்சி தவத்தில் இருப்பவர்கள் ஈசனை அறிவார்கள்.  
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -453
அறிந்து நோக்கி உம்முளே அயன் தியானம் உம்முளே
இருந்திரா மனீசர் பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்து மீள வைத்திடா வகையு மரண மேத்தினார்
செறிந்த மேலை வாசலைத் திறந்து பாரு மும்முளே. 
                       
மெய்ப்பொருளை உங்களுக்குள் அறிந்து அதையே நோக்கி அவனையே எண்ணி தியானம் செய்து இருந்தீர்களானால் அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் ஏக பாதமான மெய்ப்பொருளில் இருப்பது உண்மையே என்பதை உணர்வீர்கள். இந்த உண்மையை உங்களுக்குள் அறிந்து மீண்டும் பிறக்க வைத்திடாத வகையில் மரணமில்லா வாழ்வைப் பெற வாசியை ஏற்றி மெய்ப் பொருளில் சேர்த்து செம்மையான சோதியாக ஈசன் திகழ்வதை உணர்ந்து மேலை வாசலெனும் பத்தாம் வாசலின் பூட்டுடைத்து திறந்து பார்த்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.      
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 454
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்
ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாதி கண்டு கொள் பிராணனைத் திருத்தியே.  

சோதியாக உங்களுக்குள்ளே உள்ள மெய்ப் பொருளை தெளிந்து நோக்கி தியானிக்க வல்லவர்கள் ஆனால் அதிலேயே சோதி தோன்றி உதித்து நிற்கும். துரியாதீதமான வெளியையே உற்று நிற்கும். ஆதியான வாலை சக்கரத்திலேயே ஈசன் அமர்ந்து நீராகி நிறைந்து ஆடிக் கொண்டிருக் கின்றான். சக்தி சிவன் என்ற பேதம் பாராது சிவமாக நின்ற ஆதியிலேயே அனைத்தையும் கண்டு கொள்ளுங்கள். உயிரை வளர்த்து திருத்தமான யோக ஞான சாதகம் செய்து சிவத்திலே சேருங்கள்.       

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 455
திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துள்ளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்து வீசும் வாசனைய தாகுவான்
கருவிலே விழுந்தெழுந்த கன்ம வாதனை யெலாம்
பருதி முன் இருளதாய்ப் பறியும் அங்கி பாருமே.    
     

திருவும் அதுவே சிவனும் அதுவே என மெய்ப்பொருளாகி இருப்பதை அறிந்து தெளிந்து எந்நேரமும் சிந்தையில் வைத்து தியானம் செய்பவர்கள் மீது மருக்கொழுந்திலே எழுந்து மணம் வீசும் வாசனையாய் ஆகி நிற்பான். தாயின் கருவிலே நாம் விழுந்த போதே உருவான உடம்பில் கர்மாவால் தோன்றிய வினைகளும் வாதனை செய்யும் நோய்களும் அந்த மெய் ஞானிகளை கண்ட போதே சூரியனின் முன்பு மறைந்து போகும் இருளைப் போன்று விரைவில் விலகிப் போய்விடும். இதை உங்கள் உடம்பிலேயே இருந்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.           

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!