Search This Blog

Jan 19, 2012

சிவவாக்கியம் (446-450) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (446-450)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -446
கொள்ளுவார்கள் சிந்தையிற் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி யேத்தினால்
உள்ளுமாய் புறம்பாய் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தள்ளியதாக நின்ற சோதி செம்மையைத் தெளிந்திடே.   
           

குரு இதுதான் என்ற குறிப்பை உணர்ந்த ஞானிகள் எந்நேரமும் சிந்தையில் இறைவனையே நினைவில் நினைந்திருப்பர். அவர்களை அறிந்து அவர்களை அணுகி ஞானம் அடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வேண்டி நின்று கேட்டால் பக்குவம், வைராக்கியம், பக்தி இருப்பதைக் கண்டு உணர்த்த உணரும் வண்ணம் உரைத்து உபதேசிப்பார்கள். உள்ளுமாகவும் வெளியாகவும் உணர்த்த உணரும் உணர்வுமாய் தெள்ளிய பொருள் அதுவாக நின்ற சோதியைக் கண்டு அதனை அடையும் செம்மையான வழியைத் தெரிந்து தெளிவுடன் தியானித்திருங்கள்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -447
தெளிந்த  நற் சரியை தன்னில் சென்று சாலோகம் பெறும்
தெளிந்த நற் கிரியை பூசை சேரலாம் சாமீபமே
தெளிந்த நல்ல யோகம் தன்னில் செர்லாகும் சாரூபம்
தெளிந்த ஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே.

தெளிந்து நீங்கள் கடைப்பிடித்து ஒழுகும் நல்ல சரியை வழியினால் சாலோகம் என்ற சிவலோக பதவியை பெறலாம். தெளிந்த நல்ல கிரியை வழியில் தொண்டினாலும், பூசையினாலும் சாமீபம் என்ற சிவத்தின் அருகில் சேரும் நிலையை அடையலாம். தெளிந்த நல்ல யோகம் செய்து சாரூபம் என்ற சிவத்தின் உருவத்தைச் சேரலாம். தெளிந்த ஞானம் நான்கிலும் ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்ற வழிகளில் சாயுச்யம் என்ற நித்தியமான மெய்ப்பொருளில் ஈசனைச் சேர்ந்து என்றும் நிலையாக இருக்கலாம்.  
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -448
சேருவார்கள் ஞானமென்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலு பாதச் செம்மை யென்றதில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டு நாலுஞ் செய்தொழில் திடப்படே. 
                       
மெய்ப்பொருளை அறிந்து சேர்ந்தால்தான் ஞானம் அடைய முடியுமென்று சொல்லுவார்கள் ஞானிகள். தெளிவுடன் ஞான வேட்கை கொண்டு தேடுவோர்கள் அதனை அடைந்து சேருவார்கள். நான்கு இதழ் கமலமான மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை செம்மையான மெய்ப் பொருளில் சேர்த்து தியானிப்பதுவே செம்மையாகும். வாசியினால் சிவகதி செய்து மேலேற்றி ஒன்றிலேயே ஒன்றி ஈசனின் திருவருளைப் பெற்றவர்கள் இறவா நிலை அடைவார்கள். நீங்களும் மெய்ப்பொருளைக் கண்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாக்கிலும் திடமுடன் பயிற்சி செய்து தியானித்திடுங்கள்.     
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 449
திறமலிக்கு நாலு பாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேச நாடி அவத்திலே அழிவதே
கூறியதனைக் காட்டியுட் குறித்து நோக்க வல்லிரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப் பதமடைவரே.

திறன்கள் யாவும் பொருந்தியுள்ள நான்கு இதழ் கமலா பீடத்தில் உள்ள மூலாதாரத்தில் குண்டலினி சக்தியை வாசியை செம்மையாக நடத்தி பாதமான மெய்ப்பொருளில் சேர்த்து தியானித்து திடப்படார்கள். அறிவை அறியாத அறிவிலிகள் தேசாந்திரம் செய்து இறைவனை நாடி அங்கு மிங்கும் அவத்திலே அலைகின்றனர். ஓரெழுத்து குறியாக உள்ளதை அறிந்து அதற்குள்ளேயே அதையே குறித்து நோக்கி ஒரே நினைவுடன் தியானிக்க வல்லவர்களானால் வெறிகமழ் கங்கையை தலையில் சுமந்த சடாமுடியையுடைய ஈசனின் உண்மையான திருவடியான மெய்ப் பொருளை அடைவார்கள்.       

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 450
அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவம் பாதகங்களல்லவோ
மடை திறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல்
உடலில் மூல நாடியை உயர வேற்றி ஊன்றிடே.   
     

அடைவாகவே இருந்து மெய்ப்பொருளை அடையாதவர்கள் முத்தியை அறிந்திடாது ஞானத்தை அடையாமல் போகும் முட்டாள்கள். ஆர்பாட்ட அலங்காரங்களால் தத்துவங்கள் சொல்லி நானே கடவுள் என்று வாய் ஜாலம் பேசுவது எல்லாம் பாவமாகி உனக்கே பாதகங்கள் ஆகும் அல்லவோ? அதலால் அதனை விட்டு உனக்குள்ளேயே வாசியை தேக்கி வைத்த நீரை அணையின் மடையை திறந்தால்பாயும் வெள்ளம் ஆற்றின் மடையில் ஏறுவது போல் உடலில் உள்ள மூலாதாரத்தில் மூண்டெழு கின்ற கனலைமூலனாடியான சுழுமுனையில் உயர ஏற்றி மெய்ப் பொருளில் ஊன்றி தியானித்திருந்திடுங்கள்.         

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!