Search This Blog

Jan 17, 2012

சிவவாக்கியம் (431-435) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (431-435)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -431
கூட்டமிட்டு நீங்களுங் கூடி வேத மோதுறீர்
ஏட்டகத்துளீசனு மிருப்ப தென்னெழுத்துளே
நாட்டமிட்டு நாடிடு நாலு மூன்று தன்னுளே
ஆட்டகத்துளாடிடும் அம்மை ஆணை உண்மையே.      

யாகம் செய்கிறோம், யோகம் கற்றுத் தருகிறோம் வாருங்கள் வளம் பெறுவோம் என நீங்கள் கூட்டங்களை கூட்டி கூட்டாக சேர்ந்து வேதங்களை படித்து ஒதுகின்றீர்கள். நூல் ஏடுகளின் உள்ளேயும் நம்கூடான வீட்டின் உள்ளேயும் ஈசன் எந்த எழுத்தில் இருக்கின்றான் என்பதை அறிந்து உணர்ந்தீர்களா? ஈசனையே அடைய நாட்டங்கொண்டு அவனையே நாடி நின்று தியானித்து நான்கு அந்தக்கரணங்கள் ஆன மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பவைகள் உள்ள நான்கு வாசலையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அகார, உகார, மகாரமான மூன்றும் முக்கோண வட்டச் சக்கரமாகவும் தனக்குள்ளே ஆடிக் கொண்டிருப்பதை அறிந்து தியானியுங்கள். நிலையில்லாத உடம்பில் நிலையாக நின்று ஆடிடும் வாலை அம்மையின் மீதே ஒரே நினைவோடு நின்று ஈசனை அடையுங்கள். இதுவே இறவா நிலையடைய உண்மையான வழி என அம்மையின் மீது ஆணையிட்டு சொல்கின்றேன்.  .
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -432
காக்கை மூக்கை யாமையா ரெடுத்துரைத்த காரணம்
நாக்கையூன்றி யுள் வளைத்து ஞான நாடி யூடுபோய்
ஏக்கை நோக்க அட்சர மிரண்டேழுத்துமேத் திடிற்
பார்த்த பார்த்த திக்கெலாம் பரப்பிரம்மமானதே.

 

காகபுசுண்டர் திருமூலர் அகத்தியர், போன்ற சித்தர்கள் ஆமைப்போல் ஐம்புலனடக்கி தவம் புரிந்து எடுத்துரைத்த உண்மையை உணர்ந்து பரம்பொருள் இருந்த காரணத்தை அறிந்திடுங்கள். நாக்கை உள்மடக்கி உண்ணாக்கில் ஊன்றி ஞான நாடியான சுழுமுனையில் நின்று அகார, உகார அட்சரத்தால் வாசியை ஏற்றி ஏகமான ஈசனையே எண்ணித் தியனித்திருங்கள். பார்த்த அதையே பார்த்திருக்க பார்க்கும் திசைகள் யாவிலும் பரப்பிரம்மமே நிறைந்து நின்று ஆனதை உணருங்கள். 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -433
கொள்ளாணாது குவிகொணாது கோதற குலைக்கொணாது
ள்ளாணாது அணுகொணாது ஆதிமூலம் ஆனதைத்
தெ
ள்ளாணாது தெளியொணாது சிற்பரத்தினுற் பன்
வி
ள்ளாணாத பொருளை விளம்புமாற தெங்கனே.                       
 
எங்கேயும் வாங்கிக் கொள்ள முடியாதது அது. மனதை குவிக்க ஒண்ணாதது. கோ வெனும் பசுவாகிய கோனான பதியாக கோயிலான இடத்தில் குலையாமல் இருப்பது அது. அளவிடமுடியாதது, அணுகவிடாதது அது. ஆதிமூலமான வஸ்துவாக ஆனது. தெள்ளத் தெளிவான தெளிந்த பொருளானது அது. சிற்றம்பலத்தில் உற்பனமாகி பொன்னார் சோதியாக ஈசன் விளங்கும் சொல்லக் கூடாத அதுவான மெய்ப்பொருளை யான் சொல்லுவது எவ்வாறு? அது அறிந்து உணர்ந்து நினைந்து அனுபவித்த உண்மைப் பொருளாகும்.   
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 434
ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டு செய்துமே
வாசலிற் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீருஞ் சார்த்துறீர்
ஈசனுக்கு வைத்த கல் எந்தக்கல்லு சொல்லுமே.  

ஓசையுள்ள ஒரே கருங்கல்லை இரண்டு பாகமாக உடைத்து வாசல்படிக் கல்லாகவும் ஒன்றை செதுக்கி சிலயாகவும் செய்து வைக்கின்றீர்கள். வாசலில் வைத்த கல்லை மழுங்கவே காலால் மிதிக்கின்றீர்கள். பூஜைக்கு வைத்த கல்லில் பல வகையான வாசனைத் திரவியங்களையும் நீரில் கலந்து அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து வணங்கு கின்றீர்கள். இவைகளில் ஈசன் உகந்திருப்பது எந்தக் கல்லில் என்பதை சொல்லுங்கள். அவன் உனக்குள் இருக்கும் அண்டக்கல்லில் அல்லவோ உகந்து உள்ளான் என்பதை உணர்ந்து தியானியுங்கள்.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 435
ஒட்டு வைத்துக்கட்டி நீருபாயமான மந்திரம்
கட்டுப்பட போதிலுங் கருத்தனங்கு வாழுமே
எட்டு மெட்டு மெட்டுளே யியங்குகின்ற வாயுவை
வட்டமிட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே.  
     

அண்டக்கல்லே கட்டாத லிங்கமாக ஒட்டு வைத்து கட்டிய நீரே நாம் உய்வடைய உதவும் உபாயமான ஓரெழுத்து மந்திரமாக உள்ளது. அதற்குள் கட்டுப்பட்டு சோதியாக கர்த்தனாகிய ஈசன் அங்குதான் வாழ்கின்றான். இதனை எட்டாகிய அகாரமான சூரிய கலையில் இயங்குகின்ற பிராண வாயுவை பிரானாயாமத்தால் வட்டமிட்டு சக்கரமாக உள்ள யகாரமான சதாசிவம் விளங்கும் ஆஞ்ஞா கமலத்தில் கும்பகம் செய்து நினைவை நினைவு கொண்டு நினைந்து, தியானத்தில் வைத்து உணர்ந்து கொள்ளுங்கள்.     

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!