Search This Blog

Jan 6, 2012

சிவவாக்கியம் (391-395) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (391-395)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!


சித்தர் சிவவாக்கியம் -391
வானவர் நிறைந்த சோதி மானிடக் கருவிலே
வான தேவரத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்ட வீடறிந்த பின்
வானெலா நிறைந்து மன்னு மாணிக்கங்களானவே.
 

வானகத்தில் ஈசனாக நிறைந்த சோதி, மானிடக் கருவில் உயிருக்குள் அமைந்து உருவானது. வான தேவர்கள் அனைவரும் அச்சோதியாகிய மெய்ப்பொருளில் அமைந்து உறைந்து வானாகிய வெளியில் வந்தடைவார்கள். அதனை அறிந்து தனக்குள்ளேயே அமைந்து நின்ற வானகத்தையும் மண்ணகத்தையும் வட்ட வீடாகிய பிரமத்தில் நின்று யோகா ஞானம் செய்து தியானிப்பவர்கள் மனிதரில் மாணிக்கங்களாகத் திகழ்ந்து வானில் நிறைந்து மின்னும் நட்சத்திரங்கள் ஆவார்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -392
பன்னிரண்டு கால் நிறுத்திப் பஞ்சவண்ணமுற்றிடின்
மின்னயே வெளிக்குனின்றுளே வேரிடத்தமர்ந்ததுந்
சென்னியாந்தலத்திலே சீவனின்றியங்கிடும்
பன்னியுன்னி யாய்ந்தவர் பரப்பிரமமானதே.      
     
 
பன்னிரண்டு அங்குலம் சூரியகலையில் இருந்து வெளியேறும் காற்றை கும்பகம் செய்து நிறுத்தி 'சிவயநம' என மௌன பஞ்சாட்சரத்தை ஐந்து வண்ணங்கள் கொண்ட திருப்பாதத்தில் வாசியை ஏற்றுங்கள். அங்கு மின்னிய வண்ணம் நின்ற தீ, வெளிக்குள் இருந்ததும், அத்தீயே உள்ளே சோதியாக அமர்ந்திருப்பதையும் அறிந்து அறிவையும் உணர்வையும் நினைவையும் ஒன்றாக்கி தியானியுங்கள். சென்னி எனும் தலையில் உள்ள சகஸ்ரதலத்தில் சீவனாகிய உயிரும் சிவனாகிய சோதியும் நின்று இயங்குகின்றது. இதனை வாசியோகம் பண்ணி பரம்பொருள் ஒன்றையே எண்ணி தியானித்து ஆய்ந்தவர்கள் பரம்பொருளைச் சேர்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள்.       
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -393
உச்சி கண்டு கண்கள் கட்டி உண்மை கண்ட தெவ்விடம்
மச்சு மாளிகைக்குள்ளே மானிடங் கலப்பிரேல்
எச்சிலான வாசலும் ஏகபோக மாய்விடும்
பச்சை மாலும் ஈசனும் பறந்ததே சிவாயமே.
 

பரப்பிரம்மம் ஆன உச்சியைக் கண்டு கண்களை மூடி தியானித்து உண்மையான மெய்ப்பொருளைக் கண்டது எந்த இடம். நம் உடம்பிலேயே மச்சு மாளிகையான தலைக்குள்ளே உள்ள உயிரை அந்த இடத்திலேயே அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கி கலந்து தியானியுங்கள். அங்குதான் ஆனந்தம் கிடைக்கும். அந்த இடத்திலேயே பச்சை வண்ணமாகிய திருமாலும் பொன்னார் மேனியாகிய ஈசனும் தங்கி பறந்து கொண்டிருப்பதையும் இருவரும் ஒருவராகி சிவம் ஆகி இருப்பதையும் அறிந்து உணரலாம்.    

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 394
வாயிலிட்டு நல்லுரிசை யட்சரத்தைதொளியிலே
கோயிலிட்டு வாவியு மங்கொம்பிலே யுலர்ந்ததும்
ஆயிளிட்ட காயமு மனாதியிட்ட சீவனும்
வாயு விட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.  

வாசியை வாயினால் இழுத்து அகார உகார அட்சரத்தை ஒலித்து நடத்துங்கள். கோயிலாக விளங்கும் ஓங்கார வாசலில் உயிர் தங்கியிருப்பது சிகாரமான கொம்பிலே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மாயையான உடம்பும் அனாதியான உயிரும் வாசியால் நடக்கும் நாதத்தால் நம் தீயாக விளங்கும் சோதியில் இணைத்துத் தியானியுங்கள். அதனால் உயிர் வளர்ந்து சிவத்தை சேரும்.     
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 395
அட்சரத்தை யுச்சரித் தனாதியங்கி மூலமாய்
அட்சரத்தை யுந்திறந்து சோரமிட்டலர்ந்ததும்
அட்சரத்தி லுட்கர மகப்படக் கடந்த பின்
அட்சரத்தி லாதியோ டமர்ந்ததே சிவாயமே     
 

'ஓம்' என்ற அட்சரத்தை உச்சரித்து உணர்ந்து ஓத அதில் அனாதியாக இயங்கிய சிகாரமே அனைத்திற்கும் மூலமாக இருக்கின்றது. அதனை யோக ஞானத்தால் அறிந்து அகார உகார அட்சரத்தால் திறந்து 'ம்' என்ற அட்சரத்தில் சோதி அமர்ந்திருப்பதை உணருங்கள். 'ஓம்' என்ற அட்சரத்தில் உட்பொருள் உணர்ந்து ஓரெழுத்தை அறிந்து மாயையைக் கடந்த பின் அந்த ஓங்காரத்தில் ஆதியோடு அமர்ந்திருந்த சிவபதம் சேருங்கள்.        
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!