Search This Blog

Jan 5, 2012

சிவவாக்கியம் (381-385) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (381-385)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -381
முப்புரத்தி லப்புறம் முக்கணன் விளைவிலே
சிற்பரத்து ளுற்பனஞ் சிவாய மஞ்செழுத்துமாந்
தற்பரமுதித்து நின்று தாணுவெங்கு மானபின்
இப்புறமொடுங்கு மோடி யெங்கும் லிங்கமானதே.      
       

சூரிய சந்திர அக்னி எனும் மூன்று மண்டலங்களுக்கு அப்புறத்தில் இருக்கும் முக்கண் ஈசன் அருளால்தான் யாவும் விளைந்தது. உனக்குள் இருக்கும் சிற்றம்பலத்தில் உற்பத்தி ஆகி உறையும் சிவத்தை அஞ்செழுத்தால் உச்சரித்து அது பஞ்சாட்சரமாக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். அது தனக்குள் பரம்பொருளாய் உதித்து தானாகி நின்று தாணு எனும் ஈசனாகி உலகம் எங்கும் ஆகி உள்ளது. அதுவே உனக்குள் ஒடுங்கி ஓடி லிங்கமாக அமைந்துள்ளது.  

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -382
ஆடி நின்ற சிவனோ ரஞ்சு பஞ்ச பூதமோ 
கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ
நாடு கண்டு நின்றதோ நாவு கற்ற கல்வியோ
வீடு கண்டு விண்டிடின்
வெட்டவெளியுமானதே.
 

உடலில் ஆடி நின்ற சீவனே ஒரெழுத்தாகவும் அஞ்செழுத்தாகவும் பஞ்சபூதங்களாய் விரிந்து நின்றது. அதிலே கூடி நின்றது சோதியாகவும் அங்கே குலாவி நின்ற மூலப் பொருளான ஆதியாகவும் உள்ளது. எல்லா நாட்டிலும் கண்டு நின்றது அதுவே. நாவில் கற்றுத் தெளிந்த மெய்கல்வி அதுவே. அது இருக்கும் சூட்சம வீட்டை கண்டு உணர்ந்து சொன்னால் அதுவே வெட்ட வெளியாக இருப்பதை நமக்குள் அறியலாம்.     
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -383
உருத்தரித்த போது சீவன் ஒக்க நின்ற வுண்மையுந்
திருத்தமுள்ள தொன்றிலுஞ் சிவாய மஞ்செழுத்துமாம்

இருத்து நின்றுறுத் தடங்கி யேக போக மானபின்
கருத்துனின்று தித்ததே கபாலமேந்து நாதனே.
 
உருத்தரித்த போதே சிவனும் சீவனும் ஒன்றாகி நின்ற உண்மையை உணர்ந்து அது உனக்குள் திருத்தமுள்ளதாக ஒன்றில் ஒரெழுத்தாகவும் சிவமாகவும் அஞ்செழுத்தாகவும் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த ஒன்றிலேயே இருத்தி நின்று வாசியால் ஏற்றுங்கள். மனம் அடங்கி ஒன்றில் ஐம்புலன்களும் ஒடுங்கி கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனையே கருத்தில் வைத்து துதித்து ஏகப் பொருளையே தியானியுங்கள். அதுவே உங்களுக்கு பேரின்பத்தைக் கொடுத்து ஆனந்தம் தரும்.     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 384
கருத்தரித் துதித்த போது கமல பீடமனதுங்

கருத்தரித் துதித்த போது காரணங்களாவதும்
கருத்தரித் துதித்த போது காணிரண்டு கண்களாய்க்
கருத்தினின்றுதித்ததே கபாலமேந்து நாதனே.      
  . 
கருத்தரித்து உதித்த போது உயிர் உடம்பில் தாமரையான கமல பீடத்தில் இடங் கொண்டது மெய்ப்பொருள். அதுவே அனைத்திற்கும் காரண குருவாக ஆனது. கருவாக உருவான போதே காணுகின்ற இரண்டு கண்களே முதலில் தோன்றி உடல் ஆனது. கருவாக தரிக்கும் போதே என் கருத்தில் நின்று உதித்தது கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனே..    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 385
ஆன வன்னி மூன்று கோணமாறிரண்டும் எட்டிலே
ஆன சீவனஞ்செழுத் தகார மிட்டலர்ந்ததும்
ஆன சோதியுண்மையும் அனாதியான வுண்மையும்
ஆன தான தான தூய வலமாய் மறைந்திடும்.

வன்னியாகிய தீயே சூரிய சந்திர அக்னி கலைகளாக மூன்று கோணமாகி நின்று எண்சான் உடம்பாகியது. அதிலே ஆன சீவன் அஞ்செழுத்தாகி அகாரத்திலே அமர்ந்திருந்தது. அகாரத்திலே ஆன சோதியின் உண்மையையும் அதிலே அநாதியான ஈசனின் உண்மையையும் உணர்ந்து தியானியுங்கள். அதுவே தனக்குள்ளே தானாகி வலமாய் நின்ற மெய்ப் பொருளால் அனைத்து அவலங்களும் மறைந்திடும்.    
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!