Search This Blog

Jan 1, 2012

சிவவாக்கியம் (361-365) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (361-365)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -361
தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியனிருந்த மூலையில்
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே.       
  
    
இத்தேகத்தில் ஈசன் சுழன்று ஆடிக் கொண்டிருப்பது காயத்திரி எனும் உயிரின் முனையில் நிற்கும் வாலையில் மறைவாக வேடமிட்டு நிற்கும் வாலையை அறிந்து அதன் மூலையில் அமர்ந்து இருக்கின்ற ஈசனை அன்பினால் உணர்ந்து பூரணமாக சந்திரன் நிறைந்திருந்தவாறு போல் சந்தியா வந்தனம் செய்து தியானியுங்கள். தேகத்தில் வீசி வீசி நின்று அனைத்திலும் விரிந்து தத்துவங்களாகிய அது பரம்பொருளாகிய மௌனமே என்பதை சும்மா இருந்து தவத்தில் அறியுங்கள்.       

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -362
உட்கமல மோன மீதிலுயங்கி நின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்த தென்னவே முடுக்கி நின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவுங் கடிந்து நின்ற காட்சியே. 
 
உட்கலமாக விளங்கும் பத்தாம் வாசலில் உள்ள ஒரெழுத்தான மௌனத்தில் இயங்கி நின்ற நந்தி என்ற நம் தீயாகிய ஆன்மாவை அறிந்து கொண்டு, வாசியை விக்கலைப் போல் தொண்டையிலிருந்து 'கீ' எனும் சிகாரத்தில் மேலேற்றுங்கள். மூலாதார கமலத்திலிருந்த குண்டலினி சக்தியையும், பரிபாஷை ரகசியங்களையும் உணர்ந்து நம் உடம்பில் வில்வளைவாக இருக்கும் புருவ மத்தியில் முட்களின் கூர்மையைப் போல் பொதிந்து நின்ற மெய்ப்பொருளில் முடிந்து நின்று இயங்கும் செஞ்சுடரில் சேர்க்கவேண்டும். இது யோக ஞானம். அதனால் அண்டக்கல்லை அறிந்து அங்கே கல்லால மரத்தில் கலந்து காட்சி தரும் குரு அதுவென கண்டுணருங்கள்.                
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -363
உந்தியிற் சுழி வழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளிக்கிர
ந் தாண்டி நின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவிற் பஞ்சபூத விஞ்சையாங்
கிந்து போலக் கீயில் நின்று கீச்சீ மூச்சு மென்றதே.  
 
   
உகாரமான உந்திக்கமலத்தின் சுழியாகிய பிரம்மத்தின் உச்சியான பொருளின் மத்தியில் சந்திரனின் ஒளிக்கிரணம் தாண்டி சூரியனில் வரும் செஞ்சுடர் அகார உகாரத்தை கடந்து நின்றதுவே சோதி. அது பந்தமாக வில்வளைவாக இருக்கும். புருவமத்தியில் பஞ்ச பூதங்களும் பஞ்ச வண்ணங்களாக ஒரே இடத்தில் ஆச்சர்யமாக அமைந்துள்ளது. அது சிகாரமான ஓரெழுத்தாகி 'கீ' என்ற அட்சரத்தால் மௌனத்தில் இருந்து வாசியை ஏற்றி இறக்கி கும்பகம் செய்து நிறுத்தி தியானியுங்கள்.     
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 364
செச்சையென் மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே யிருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.      
 
செம்மையான வாசி மூச்சில் "சிவ சிவ" எனும் சிகார வகாரத்தால் நினைந்து ஏற்றுங்கள். அது பச்சை வண்ணமாக பரவெளியாக மனத்தில் பான்மையாக இருக்கின்றது. வாசியை நோக்கி ஹூ என்ற உகாரத்தினால் ஏற்றி ஊத ஊத அதில் இருந்து எழுகின்ற ஹீ என்ற சிகாரத்தின் மீது உச்சியான கோணத்தில் சோதியாக உதித்து நின்ற அது எனும் மெய்ப்பொருளாய் இருப்பதுவே சிவம். இதன் நுட்பத்தை உணர்ந்து சிவ சிவ எனும் வாசியால் நாதலயமாகி சோதியாகிய சிவத்தில் சேர்ந்து ஒரே நினைவில் இருந்து தியானியுங்கள்.    

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 365 
ஆறுமூலைக் கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே
நாறு மென்று நங்கையான நாவியுந் தெரிந்திடக்
கூ
றுமென்று ஐவரங்குக் கொண்டு நின்ற மோனமே
பாறு கொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.     
 

ஆறு ஆதாரங்களும், கூடிய ஒன்பது வாசல்கள் கொண்ட இந்த உடம்பு இருக்கும்போதும், இறக்கும்போதும் நாற்றமடிக்கின்றது. அப்படி நாறுகின்ற இவ்வுடம்பில் நாறாத வாசலில் நங்கையான வாலையாக நம் ஆவியில் உள்ளது வாலை. அதிலேயே ஐந்து பூதங்களும் இணைந்து ஐவண்ணமாக கொண்டு நிற்கும் மோனமே திருவடி. அத்திருவடியை நம் சென்னியில் வைத்து இவ்வுலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களிலும் பரந்து நின்று இயக்குவது சிவமே.      

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!