Search This Blog

Nov 30, 2011

இனியவை நாற்பது (36-40)-பாடல்களும் விளக்கமும்



பூதன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண் பாக்களினால் ஆனது. பண்டைக் காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பாத்தேன் கீழ் கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. 
இனியவை நாற்பது பாடல்கள் (36-40) விளக்கத்துடன்:
இனியவை நாற்பது- பாடல்:36
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது. 36 

பொருள்:- அழுக்காறு - பொறாமை; 
மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.
***************************************
இனியவை நாற்பது- பாடல்:37
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது. 37
பொருள்:- கிளைஞர் - சுற்றத்தார்; பணை - மூங்கில்;
தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.
***************************************
இனியவை நாற்பது-பாடல்:38
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து. 38
பொருள்:- நட்டார் - நண்பர்கள்; ஆ - பசு;
ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.
***************************************
இனியவை நாற்பது- பாடல்:39
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 39

பொருள்: பிளிற்றாமை - கோபம் கொல்லாமை; ஒற்கம் - மனத்தளர்ச்சி; பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக்கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.
***************************************
இனியவை நாற்பது-பாடல்:40
பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல். 40
பொருள்:- வித்து - விதை;
பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.
**************************************
நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யக் வேண்டியவைகளைப் பற்றி கூறும் பூதன் சேந்தன் என்னும் புலவர் இயற்றியது, இனியவை நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இனியவை  நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!