Search This Blog

Dec 2, 2011

குரு பரம்பரை:- படித்ததில் பிடித்தது. (ஆன்மீக தீப்பொறி)


 
குரு பரம்பரை:
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று 
சொல்லுகின்றார்களே! எதனால் என்பது இதுவரையிலும் புரியாமல் இருந்தது. ஏனெனில் நம்பத்தகுந்த விதமல்லாது அல்லது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் காணப்படும் கருத்துக்களை காணும் பொழுது வியப்பாக உள்ளது.  
 
இணைய தளத்தில் உலவும் பொழுது, கடாரத் தமிழ்ப் பேரறிஞர்  டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்களின் வலைத்தளம் பார்க்க நேர்ந்தது. அதில் முனைவர் எஸ். ஜெயபாரதி அவர்கள் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை பகிர்ந்ததை காண முடிந்தது. அனைத்து பதிவுகளும் அறிந்து கொள்ள வேண்டிய தலைப்புக்களை தேர்ந்தெடுத்து சரள நடையில், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும், தக்க சான்றுகளோடும் பகிர்ந்துள்ளார். 

அதில் ஒன்றுதான் இந்த குருபரம்பரை விளக்கச் சிறுகதை. சித்தம் தெளிய, சித்தி அடைய எவ்விடத்திலிருந்தும் தூண்டுதலோ, விளக்கமோ, வியாக்கியானமோ கிடைக்க வாய்ப்பு உள்ளதனை காணக் கொடுத்துள்ளார். நாமும்தான் அதனை காண்போமே இனிய நட்புக்களே!!! 
***************************************************************

பெரிய துறவி ஒருவர் மகாசமாதி அடையும் நிலையில் இருந்தார். உண்மையிலேயே பற்றற்ற நிலையில் வாழ்ந்துவந்தவர். அவருக்கு யார் குரு, அவருடைய பூர்வாசிரமம் என்ன, துறவியான பின்னர் எங்கெல்லாம் சென்றார், என்னவெல்லாம் படித்திருக்கிறார் என்ற விபரமெல்லாம் யாருக்கும் தெரியாது. அவருக்கென்று எதுவுமே வைத்துக் கொண்டதில்லை. ஒரு பிச்சைப்பாத்திரம், ஓடுபோல் எதுவுமே கிடையாது. ஒரு கோயில்மண்டபம், அதில் இருப்பார். அல்லது அதன் அருகில் உள்ள அரசமரத்தின் மேடை.
   
உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில்,ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு; சகமுழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு: பசித்துவந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே நமக்குக் குறைவில்லையே!

என்று பட்டினத்தார் சொன்னது போல் வாழ்ந்து வந்தார். இன்னும் சொல்லப் போனால் அந்த வேட்டியையும்கூட அவர் மற்றவர்களுக்காகத்தான் கட்டியிருந்தார். பசிக்கும் போது ஏதாவது ஒரு வீட்டின் முன்னால் நிற்பார்.                  
அந்த வீட்டுக்காரர் உணவு கொண்டுவந்து நீட்டும் போது இருகைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஏந்துவார். அது கொள்ளுமளவுக்கு பிச்சையைப் போடுவார்கள். அப்படியே அதனைக் கையில் வைத்துக்கொண்டே உண்பார். அதன் பின் நீரருந்துவார். பிறகு போய் விடுவார். அம்மா பிச்சை,  என்றெல்லாம் கேட்பதில்லை. அவர்களாகவே போட்டால்தான் உண்டு. சிலர் அவர் இருப்பிடத்துக்கு வந்து உணவை வைத்துவிட்டுப் போவார்கள். பசித்தால் உண்பார்.

அவருடைய அறிவையும் ஆற்றலையும் பற்றி வியந்து பேசிக் கொள்வார்கள். அவராகக் கூட்டமேதும் திரட்டாமலேயே அவருக்குச் சீடர் கூட்டமொன்று இருந்தது. அவர்கள் தாம் தம்மைத்தாமே அவருடைய சீடர்களாகக் கூறிக்கொள்வார்கள். அவர் ஏதும் கண்டு  கொள்வதில்லை.

ஓர் இளைஞன் அவரிடம் மிகுந்த பக்தியும் பிடிப்பும் வைத்திருந்தான்.  துறவி மகாசமாதி அடையும்தருவாயில் அந்த இளைஞன் அவரிடம் வந்தான். அவருடைய குரு பரம்பரையைப் பற்றி அறிந்துகொள்ள அவனுக்கு ஆசை.  ஆகவே உபநிஷத்தில் உத்தாலக ஆருணி முனிவரிடம் சுவேதகேது கேள்வி கேட்டதுபோல் கேட்டான். சுவாமி! இப்போதாவது சொல்லுங்கள். உங்களுடைய குரு யார்? உங்கள் குரு பரம்பரை என்ன? என்று.

லேசாகக் கண்களைத் திறந்துபார்த்துவிட்டு, அவனை மிக அருகில் வைத்துக்கொண்டு சொல்லலானார்: "என்னுடைய வாழ்க்கையில் மூன்று பேர் என்னுடைய குருமார்களாக விளங்கினார்கள்".நான் துறவியாகிய ஆரம்பகாலத்தில், நானும் ஏனைய பல சாமியார்களைப் போலவே ஆசார நுஷ்டானங்களைக் கடைப் பிடித்து வந்தேன். ஆனால் என்னுள் ஒரு வெட்கை - ஓர் ஆன்மதாபம் - இருந்து கொண்டே யிருந்தது. ஒரு தேடல். அதனைத் தீர்ப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை. என்னுடைய உடமைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊர், ஊரூராகத் திரிந்தேன்".

மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே... இரண்டாம் பாகத்தில். 
பதிவுசெய்த கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்களைப் பின்தொடர்ந்து.
நன்றியுடன் மீள் பதிவு செய்த அன்பன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!