Search This Blog

Nov 27, 2011

சிவவாக்கியம் (211-215) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (211-215)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!

சித்தர் சிவவாக்கியம் - 211
அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துறக்க வேணுமே!!

உடம்பு அனாதியா? உயிர் அனாதியா? ஐம்பூதமும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்த தகுந்த நூல்கள் அனாதியா? ஆஞ்ஞா எனும் ஆகாயத்தில்  உள்ள சதாசிவம் அனாதியா? யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே!!! எது அனாதி என்பதை விரைந்து விளக்க வேண்டும். எது தொடக்கமும் முடியும் அற்று இருக்கின்றதோ, எது சுய ஒளிபடைத்து விளங்குகின்றதோ, எது உள்ளதும் இல்லாததாகவும் உள்ளதோ அதுவாகிய சிவமே அனாதி. எங்கும் எப்போதும் என்றென்றும் எக்காலத்தும் நித்தியமாய் உள்ளதே அனாதி. 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -212
 
ஒன்பதான வாசல்தான்ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம எனும் நாமமே
வன்மமான  பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!!

ஒன்பது வாசல் கொண்ட உடம்பு ஒரு நாள் அழியும் என்பதுவே உண்மை என்றுணர்ந்து எந்நேரமும் இராம நாமம் செபித்து அவன் பாதம் பற்றியிருங்கள். இராம நாமம் மரணபயம் போக்கும். வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் இறக்கும் தருவாயில் நோய் வந்து அவர்கள் வாக்கில் இப்புண்ணிய நாமத்தை சொல்ல மாட்டாது இறப்பார்கள். இது அன்பே சிவம் என்று வாழும் அன்பர்கள் வாக்கில் எப்போதும் அமைந்திருக்கும். அவர்கள் இராமநாமம் என்பது என்ன என்பதைப் புரிந்து ஆராய்ந்து அறிந்து தியானம் தவம்  செய்வார்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -213
அள்ளி நீரை இட்டதேது அங்கையில் குழைந்ததேது
மெல்லவே மினமினவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர்!

உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டு குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்லவே வாய்க்குள்ளேயே முனுமுனுவென்று மந்திரங்களை சொல்லி விளம்பும் மூடர்களே! உங்களுக்குள் கள்ள வேடமாக சூட்சுமமாக விளங்கும் பொருள் எது? மரணம் நேர்ந்த போது கண்களை மூடிவிட்டதற்கு காரணம் எது? என்பதை குருவாக வருபவர்களே, மெதுவாக விளக்கிக் கூறுங்களேன்!!

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 214
அன்னை  கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னி தொக்குள் உழலும் தூமையுள் அடங்கிடும்
பிள்ளையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!!

தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி அளவே ஆகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே சிசுவாக வளர்ந்து தாயின் வயிற்றுக்குள் உழன்று ஐம்புலன்களுடன் கூடிய உடம்பு உண்டாகி தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பத்து மாதங்கள் தாயின் தூமையின் நீரிலேயே மிதந்து வளர்ந்து அதன் பின்னரே உலகில் உயிர், உடம்பு பிறக்கின்றது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்பதனை உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள்  ஏனெனில் அத்தூமையை உடம்பில் ஒட்டியே பிரம்மம் இருக்கின்றது என்பதனைக் கண்டு அச்சிவத்தை சேர தியானியுங்கள்.


***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 215
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சொதியோடு அணுகி வாழலாகுமே!!!
 
அழுக்குப் போகவேண்டும் என்று தினந்தினம் நீரில் குளித்தும் அழுக்கு அகலாத மனிதர்களே! அழுக்கான உடம்பில் அழுக்கான இடம் எது என்பதனை அறிந்தீரா? அவ்விடத்தில் மனதை நிறுத்தி அம்மனத்தில் உள்ள ஆசைகளையும் பாவங்களையும் பக்தி, தொண்டு, யோகம், ஞானம் என்ற சாதனங்களால் அறவே ஒழித்து தியானிக்க வல்லவர்களானால், அழுக்கே இல்லாத பரிசுத்தமான அவ்விடத்தில் சதியாக விளங்கும் ஈசனோடு இணைந்து மரணமிலா பெரு வாழ்வில் வாழலாம்.

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!