சிவவாக்கியம் (206-210)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 206
அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய்
அண்டரண்டமும் கடந்த அனேகனேகா ரூபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச்
சொல்லியாற என்னில் வேறு துணைவரில்லை ஆனதே!!
அல்லும் பகலும் அணுதினமும் அவனையே நினைந்து அகமும் பிரமமும் ஒன்றி இணைந்து தவம புரியுங்கள். அண்டரண்டங்கள் அனைத்தையும் இவ்வுலகம் யாவிலும் விளங்கும் ஆன்மா ஒன்றே என்பதை உணருங்கள். அறிவையும் உணர்வையும் நினைவையும் ஒன்றிணைத்து மெய்ப் பொருளையே தியானிக்க மௌனம் எனும் சொல்லும், மனமும் இறந்த சுகம் கிடைத்து சமாதி என்ற பேரின்ப நிலையில் ஈசன் சொரூபத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். இப்படி அவன் அருளால் நான் அனுபவித்த சுகத்தை வெளியில் ஒருவரிடம் சொல்லியாற அனுபவித்தறிந்தஉன்னைத்தவிர எனக்கு வேறு நண்பர்கள் இல்லை.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -207
ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கைய்ரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ராசா கந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!!!
பத்து மாத காலங்கள் தாயின் கருவறையில் அடங்கி நின்ற தீட்டினால் உயிர் வளர்ந்து, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு ஆகி மெய்யாகிய உடம்பு திரண்டு உருவானது. அதில் சத்தம் கேட்கும் காதுகளும் ரசமாகிய சுவை உணர வாயும், கந்தமாகிய நாற்றம் உணர மூக்கும் தோன்றி சுத்தமான உடம்பு ஆனதும் உலகோர் சொல்லும் தீண்டத்தகாத தீட்டினால் உருவானதே என்பதே உண்மை.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -208
அங்கலிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும்
சங்கு சக்கரத்திலும் சகல வானகத்திலும்
பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும்
sanka நாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே!!!
நம் அங்கத்தில் சூட்சமாக இலிங்க பீடமாக இருப்பதும் அசபை மந்திரம் எனும் "அ, உ, ம்" என்ற மூன்று எழுத்தாக இருப்பதும், சங்கு சக்கரங்களாகவும், சகல சராசரங்கலாகவும் இருப்பதும் மெய்ப்பொருளான சிவமே. இதனை அறிந்து ஆகாயமான தன் மனத்தில் ஈசனையே நினைந்து வாசியோகம் செய்யும் யோகிகள் பத்தாவது வாசல் எனும் பரமபத வாசலில் நாத ஓசையை சேர்த்து பரமனைக் கண்டு ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி தியானத்தில் இருப்பார்கள்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 209
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்சழுத்தி அவ்வெழுத்தறிந்த பின்
அஞ்செழுத்தும் அவ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே!!!
அஞ்செழுத்து பஞ்சாட்சரமென்றும் மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் உரைத்து அதனை ஓதி, உச்சரிக்கும் அன்பர்களே!!! நீங்கள் காண்கின்ற அந்த மெய்ப்பொருள் அஞ்செழுத்தாகவோ, மூன்றெழுத்தாகவோ இருப்பதில்லை. அஞ்செழுத்தின் அனைத்து உட்பொருளை யாவும் அறிந்து அதனை உடம்பில் நெஞ்செழுத்தாக இருக்கும் சிகாரத்தில் இருந்து 'சிவயநம' என்று உள்ளத்தில் இருத்தி தியானியுங்கள். அப்போது பிரமம் ஒரேழுத்தாகவும், உயிராகவும் உள்ளதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரேழுத்திலே ஐந்தெழுத்தும் அடங்கி இருப்பதையும் அவ்வேழுத்தே பஞ்சாட்சரமாக ஐந்து வண்ணங்கள் ஆகி நிற்பதையும் அதிலேயே ஐந்து பூதங்களும் உள்ளதையும் அறிந்து உணர்ந்து அஞ்செழுத்தை உள்ளத்திலே ஓதி மெய்ப்பொருளை சேர்ந்து தியானம் செய்யுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 210
ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும்
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே!!!
காலந்தோறும் சொல்லிவந்த மந்திரங்கள் அமைந்துள்ள ஆகம நெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்து வரும் போது மனைவி, மக்கள், உறவுகள், நட்புக்கள் என அனைத்தையும் மறக்கும் படியாக ஒரு நொடியில் மயக்க வந்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது? உடலில் உலாவிய உயிர் எங்கு போனது? ஆன்மா உடலிலேயே ஒளிந்து கொன்டதா? அல்லது அதுவே எங்குமான ஆகாயத்தில் போய் நின்றதா? ஆன்மாவில் சோதியாக துலங்கிய ஈசன் உடம்பை விட்டு எங்கு சென்று ஒளிந்து கொண்டான்? சோதி அப்போது இருக்கும் இடம் எங்கு என்பதை யாவும் சுவாமியாக வருபவர்கள் சொல்லி இறவா நிலை பெற உபதேசிக்க வேண்டும்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!