Search This Blog

Nov 28, 2011

இன்னா நாற்பது (26-30) பாடல்கள், விளக்கத்துடன்

சங்க இலக்கியத் தொகுப்பு நூல்களான பதினெண் கீழ் கணக்கில் நீதி நூல்களின் வகையில் வகைப்படுத்தப்பப் பட்ட, புலவர் கபிலரால் இயற்றப்பட்ட, இன்னா நாற்பதின் தொடர் பதிவு.

**************************************************************

இன்னா நாற்பது பாடல்கள் விளக்கத்துடன்:-
இன்னா நாற்பது- பாடல்:26

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல். 26
பொருள்:- யாத்த - கொண்ட; கூற்று - சொல்;
பெரியவருடன் கொண்ட நட்பினை விடுதல் துன்பமாம். செய்தற்கரிய காரியங்களைச் செய்வோம் என்று கூறுவது துன்பமாம். அன்பு கொள்ளாதவர்களுக்குத் தாம் அடைந்த துன்பங்களைச் சொல்வது துன்பமாகும். பெருமையுடையவர்களுக்குத் தீயவற்றைச் செய்தல் துன்பமாகும்.
****************************************
இன்னா நாற்பது-பாடல்:27

பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;
கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;
வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,
இளமையுள் மூப்புப் புகல். 27
பொருள்:- பீடு - இகழ்ந்து; மூப்பு - முதுமை;
பெருமையுடையோரை இகழ்ந்து கூறுதல் துன்பம். உரிமையுடையோரை நீக்கி விடுதல் துன்பமாம். செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாம். இளமைப்பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் புகல் துன்பமாகும்.
****************************************
இன்னா நாற்பது-பாடல் 28:

கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல். 28
பொருள்:- கலிமா - குதிரை; கோட்டி - பைத்தியம்;
குதிரையேற்றம் தெரியாதவன் குதிரையில் செல்லுதல் துன்பமாம். கல்வி இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் பேசும் நயமான பேச்சு துன்பமாம். அவ்வாறே கல்வியறிவு இல்லாதவன் கற்ற அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும்.
****************************************
இன்னா நாற்பது-பாடல்:29

குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;
தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,
செறிவு இலான் கேட்ட மறை. 29
பொருள்:- மாநாகம் - பெரிய பாம்பு;

பாம்பினை அடக்கத் தெரியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம். உள்ளிருக்கும் ஆழத்தை அறியாமல் நீரில் பாய்ந்து விளையாடுதல் துன்பமாம். அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம். அடக்கமில்லாதவன் கேட்ட இனிய உரை துன்பமாம்.
****************************************

இன்னா நாற்பது- பாடல்:30


நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;
கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;


ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,
கடும் புலி வாழும் அதர். 30

பொருள்:- சேறல் - செல்லுதல்; அரவு - பாம்பு; அதர் - வழி;

நெடிய மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து கீழே குதித்தல் துன்பமாம். மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம். பாம்பு புற்றில் கை வைத்தல் துன்பமாம். கொடிய புலிகள் வாழும் வழியில் செல்லுதல் துன்பமாம்.
**************************************** 
நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யக் கூடாதவைகளைப் பற்றி கூறும் கபிலர் என்னும் புலவர் இயற்றியது, இன்னா நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இன்னா நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!