Search This Blog

Nov 30, 2011

இனியவை நாற்பது (21-25)-பாடல்களும் விளக்கமும்



பூதன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண் பாக்களினால் ஆனது. பண்டைக் காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பாத்தேன் கீழ் கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. 
இனியவை நாற்பது பாடல்கள் (21-25) விளக்கத்துடன்:
இனியவை நாற்பது- பாடல்:21
பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது. 21

பொருள்:- வௌவான் - அபகரிக்காமல்; மயரிகள் - அறிவிலிகள்;
பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:22
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது. 22

பொருள்:- வழங்கல் - கொடுத்தல்; ஊக்கம் - மனவெழுச்சி;
தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:23
காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;
பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. 23

பொருள்:- தொட்டல் - வெட்டுதல்; ஆ - பசு;
சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.
************************************
இனியவை நாற்பது-பாடல்:24
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. 24

பொருள்:- வெகுளி - கோபம்; பொறை - பொறுத்தல்;
மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:25
ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25

பொருள்:- வேட்கை - ஆசை; புல்லா - சேராது;
ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.
************************************
நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யக் வேண்டியவைகளைப் பற்றி கூறும் பூதன் சேந்தன் என்னும் புலவர் இயற்றியது, இனியவை நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இனியவை  நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!