Search This Blog

Nov 30, 2011

இனியவை நாற்பது (16-20)-பாடல்களும் விளக்கமும்


பூதன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண் பாக்களினால் ஆனது. பண்டைக் காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பாத்தேன் கீழ் கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. 
************************************
இனியவை நாற்பது- பாடல்:17
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. 16

பொருள்:- ஈதல் - கொடுத்தல்;
கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.

************************************
இனியவை நாற்பது- பாடல்:17
நட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே;
பற்பல தானியத்ததாகி, பலர் உடையும்
மெய்த் துணையும் சேரல் இனிது. 17

பொருள்: நட்டார் - நண்பர்;
நண்பர்களுக்கு இனியவற்றைச் செய்தல் இனிது. அதனைவிட எள் அளவும் நட்பு இல்லாதவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது அதனைவிட இனியது. எல்லாவகைப் பொருட்களை உடையவராய் சமயத்தில் உதவும் நண்பர்களைத் துணையாக வைத்துக் கொள்வது
************************************
இனியவை நாற்பது- பாடல்:18
மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே;
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்
கண்டு எழுதல் காலை இனிது. 18

பொருள்:- தந்திரம் - நூல்; முதுமக்கள் - அறிவுடையோர்;
அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது. தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.
************************************
இனியவை நாற்பது-பாடல்:19 
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;
பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது. 19

பொருள்:- பேணி - பாதுகாத்து; ஈதல் - கொடுத்தல்;
நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:20
சலவரைச் சாரா விடுதல் இனிதே;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. 20 

பொருள்:- சலவரை - வஞ்சகரை; ஞாலத்து - பூமியில்;
வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.
************************************
நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யக் வேண்டியவைகளைப் பற்றி கூறும் பூதன் சேந்தன் என்னும் புலவர் இயற்றியது, இனியவை நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இனியவை  நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!