சிவவாக்கியம் (201-205)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 201
பூவும் நீரும் என்மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவி ஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினாய்
மேவுகின்ற ஐவரும் விலங்கு தூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே!!!
பூவாகவும், நீராகவும் இருப்பது என் மனம். அதில் ஈசன் பொருந்தி கோயில் கொண்டிருப்பது என் உள்ளம். ஆவியான ஆன்மா இலிங்கமாக அமைந்து என் உடலிலும் இவ்வுலகங்கள் யாவிலும் நிறைந்து நின்றுள்ளது. இந்த அகிலம் எங்கும் நிறைந்த ஐம்பூதங்களும் என் உடலில் மேவி ஐம்புலங்களாக மணமாகவும், சோதியாகவும் விளங்கி ஆட்டுவிக்கின்ற ஈசன் எனக்குள் நடராஜனாக இரவு பகல் இல்லாது எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றான். அவனை இராப்பகல் இல்லா இடத்தே கண்டுகொண்டு தியானம் செய்யுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -202
உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறக்கில் என் நினந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!!
ஈஸ்வரா! நான் ஆன்மாவாக இருந்து உருவாகி வளர்ந்து, உன்னைக் கலந்து இவ்வுடம்பைப் பெற்றேன். என் உடலில் உருவாக நின்ற என்னை என்னிலே இருந்து, என்னிலே மறந்து, என்னிலே நினைந்து, என்னிலே அறிந்து கொண்டேன். உன் உருவை அறிந்து என் உடல் பொருள் ஆவியை உன்னிடம் ஒப்படைத்து என் ஊண் உருகி, உயிர் உருகி தியானித்து உன்னுடன் கலக்கும் போது, நீயும் நானும் ஒன்றாகி நிற்பதை உணர்ந்து கொண்டேன். உன் திருவருளால் ஞானம் பெற்று தவம் செய்யும் போது, சிவமே உண்மை என்பதை தெளிந்து கொண்டேன்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -203
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!!
சிவயநம எனும் அஞ்செழுத்து மந்திரத்தின் உட்பொருளை உணர்ந்து ஓதி செபிப்பவர்கள் தேவர்கள் ஆவார்கள். சிவாயம் என்ற அஞ்செழுத்துக்குள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானித்து தெளிந்து கண்டு கொண்ட வான் பற்றி நின்ற மெய்ப்பொருளை அறிவார்கள். சிவயநம எனும் அஞ்செழுத்துகுள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானித்து தெளிந்து, கண்டு கொண்ட நான் பற்றி நின்ற மெய்ப்பொருளை அறிவார்கள். சிவயநம எனும் அஞ்செழுத்துக்குள்ளே அனைத்தும் அடங்கியிருக்கும் உண்மைகள் யாவையும் தெளிந்து, தெரிந்துகொண்டு தியானம் செய்து சிவத்தை சேர்வார்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 204
பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி போகம் வீசுமாறு போல்
இச்சடமும் இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே!!
பொய்க் குடமாகிய மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் அமைந்து மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இந்த உடம்பும் இந்திரியங்களும் நாதவிந்தாக நீரினால் அமைந்தே அலைந்து கொண்டிருக்கின்றது. மண் குடத்தில் நீரை ஊற்றி வைத்தால் அது எப்படி உறுதியாக சாயாமல் இருக்கின்றதோ, அது போலவே பொய்க் குடமான இந்த உடம்பில் மெய்ப் பொருளாக சிவம் உகந்து அமர்ந்திருப்பதால் தான் இவ்வுலகில் உயிர்கள் நிலைத்திருக்கின்றது. சிவம் போனால் சவமே!!
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 205
பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.
பட்டத்தைபோன்று உயிர் பறந்து கொண்டும், கயற்றினைப் போல் உடம்பு இருந்து கொண்டும் அதனை இயக்கும் ஈசனால் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. பட்டம் அந்தரத்தில் பறப்பது போல உன் அரங்கத்தில் உயிர் பறந்து கொண்டு இருக்கிறது. அதில் மூச்சானது நூல் கயிற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கின்றது. பார்ப்பானாகிய ஈசனை உன் பார்வையால் பார்த்து மூச்சுக் காற்றை கும்பகத்தால் நிறுத்தி படுமுடுச்சு போட வேண்டும். யோக ஞான சாதகத்தால் பூராக, கும்ப, ரேசகம் செய்து வாசியைப் பிடிக்கத் தெரியாமல் யாரையும் மனம் நோக வையாதீர்கள். சீவனாகிய உயிரையும், உடம்பையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தியானத்தைக் கடைப்பிடித்து உயிரின் உண்மையை உணர்ந்து அதில் உறையும் இறைவனை சிக்கெனப் பிடித்து அனைத்தையும் அறிந்த உள்ளங்கவர்ந்த கள்வனான ஈசனை அன்பினால் கட்டுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!