சிவவாக்கியம் (186-190)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 186
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!!!
கோயில் என்பதும் மெய் கல்வி கற்க வேண்டிய பள்ளி என்பதும் எது? மெய்ப்பொருளை குறித்து நின்றது எது? கோயில் என்ன்பது இறைவனை தொழுவதற்கும் பள்ளி என்பது arivai வளக்கவும் உள்ள இடங்களே! வெறும் வாயினால் மட்டும் சொல்லுன் மந்திரங்களால் மட்டுமே இறைவனைக் காண முடியுமா? இறைவனும் அறிவும் கோயிலாகவும் பள்ளியாகவும் உங்கள் உள்ளத்தில் உறைவதை உணருங்கள். யோக ஞானத்தால் அதனை அறிந்து இறை நாட்டத்துடன் நன்மையாய் வணங்கி மந்திரங்களைச் செபித்து தியானித்தால் இறைவனைக் காணலாம்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -187
நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்
கொள்ளு நாகம் மூன்றதாய் கலாவு செம்பொன் இறந்ததாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊதா வல்லிரேல்
எல்லை ஒத்த சொதியானை எட்டு மாற்ற தாகுமே!!!
நல்ல வெள்ளி ஆறுபங்கும், செம்பு நாலு பங்கும், துத்தநாகம் மூன்று பங்கும், தங்கம் இரண்டு பங்கும் சேர்ந்து துருத்தி கொண்டு ஊத்தி உருக்கினால் அது எட்டு மாற்றுத் தங்கமாகும் என்று பொருள் கண்டு ஏமாந்தது போனவர்கள் அநேகர். நான்கு இதழ் கமலமான மூலாதாரத்தில் உள்ள குண்ட்டளினியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்த கரணங்களாலும் இணைத்து ஆனவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் நீக்கி, நம்முள் செம்பொன்னம்பலமாக விளங்கும் சோதியில் அகாரம், உகாரம் என்ற எட்டிரண்டால் வாசியை வில்லில் இருந்து அம்புவிடும் போது தோன்றும் 'ம்' என்ற ஓசை லயத்துடன் உண்மை விளங்கி ஊதா வல்லவர்கலானால் ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பாலாய் சோதியாய் நிற்கும் ஈசனிடம் சேரலாம். இப்படி யோக ஞான தியானம் செய்யும் சாதகர்களின் உடம்பு பொன் போல மின்னும். இது எல்லையில்லா அந்த பரம்பொருள் அருளால் ஆகும்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -188
மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!
மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆஸ்ரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர் கலவி இன்பத்தில் பெண்ணில் முலைதடத்தில் கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 189
உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.
மெய்ப்பொருள் என்பது உருவும் அல்ல, ஒளியும் அல்ல, உருவும் ஒளியும் சேர்ந்து ஒன்றாகி நிற்பதே ! அது மருவாக இருப்பதல்ல, வாசனைப் பொருந்திய மனமாக வீசுவதல்ல, சுழுமுனை எண்டும் நாடியில் ஓடுவதல்ல. பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல, பேசுகின்ற ஆவியும் அல்ல. யாதுக்கும் நடுவாக இருந்து அறிவதற்கு அரியதாகி நிற்பதால் அந்த மெய்ப் பொருளை அறிந்து அதன் பெருமையை உணர்ந்து தியானித்து சோதியான ஈசனை யாவர் காண வல்லவர்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 190
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை\
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
பிரம்மமே ஒரேழுத்து அட்சரமாக உதித்து உலகமெல்லாம் நின்று உடம்பாகியது. அதில் ஈரேழுத்தாக இயங்கும் ஒலியையும் ஒளியையும் அறிந்து அகார உகார அட்சரத்தின் உண்மையை உணர்ந்து வாசி எனும் யோக ஞானத்தால் இறை இன்பத்தை அடையும் வழியை அறியாமல் இருக்கின்றீர்கள். மூவெழுத்தான அகார, உகார, மகாரம் எனும் ஓங்காரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவராக மூண்டெழுந்த சிவத்தை நாள் தோறும் அதிகாலையில் எழுந்து மனம் மொழி மெய்யால் 'ஓம் சிவயநம' என உச்சரித்து நினைவால் நினைந்து தியானம் செய்யுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!