Search This Blog

Nov 23, 2011

இன்னா நாற்பது (09-13) பாடல்கள், விளக்கத்துடன்


இன்னா நாற்பது(09-13) - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு)  : தமிழும் இலக்கியங்களும்


தமிழகத்தில் சங்கம் மருவிய கால கட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப் பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடையதாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 
நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு
,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".
இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.
புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.
***************************************************************************************************
இன்னா நாற்பது- பாடல்:09

கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா;
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
பண் இல் புரவிப் பரிப்பு. 9

பொருள்: புரவி - குதிரை; பரிப்பு - தாங்குதல்; கலன் - குதிரையில் போடப்படும் சேணம்;
கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும் துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு துன்பமாகும். அவ்வாறே கலனை இல்லாத புரவி தாங்குதல் துன்பமாகும்.
**************************************************************
இன்னா நாற்பது- பாடல்:10
பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;
அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,
பொருள் இல்லார் வண்மை புரிவு. 10

பொருள்:- இல்வழி - இல்லாத இடத்தில்; சிறுநெறி - சிறிய வழியிலே;
பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில் தனியாகப் போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம் இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோலப் பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல்.
************************************************
இன்னா நாற்பது-பாடல்:11


உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
கடன் உடையார் காணப் புகல். 11
பொருள்:- யாத்த - பிணித்த; தொடர் - சேர்க்கை;
உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம்.
***************************************************************
இன்னா நாற்பது- பாடல்:12


தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,
முலை இல்லாள் பெண்மை விழைவு. 12
பொருள்:- சுரம் - பாலைவனம்; புலை - புலால்;
தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும். வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண் தன்மையை விரும்புதல் துன்பமாகும்.
*****************************************************
இன்னா நாற்பது-பாடல்:13


மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;
பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,
பிணி அன்னார் வாழும் மனை. 13
பொருள்:- ஊர்தல் - ஏறிச்செல்லுதல்; குஞ்சரம் - யானை;
மணியில்லாத யானையின் மீது ஏறிச் செல்லுதல் அரசனுக்குத் துன்பமாகும். பகையை வெல்லுந் துணிவில்லாதவர்கள் கூறும் வீர மொழிகள் துன்பமாகும். வணங்கத்தகாத அரசனை வணங்குதல் துன்பமாகும். நோயுள்ளவர் வீட்டில் வாழ்வது துன்பமாகும்.
********************************************

நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யக் கூடாதவைகளைப் பற்றி கூறும் கபிலர் என்னும் புலவர் இயற்றியது, இன்னா நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இன்னா நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!