சிவவாக்கியம் (181-185)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 181
தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதிய மூன்று மண்டலம் புகுந்த பின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே!!
யோக ஞான சாதகத்தால் உடம்பில் உள்ள மூலாதாரத்தில் தீயாக இருக்கும் குண்டலினியை அங்கிருக்கும் தனஞ்செயன் என்ற பத்தாவது வாயுவால் வாசியை மேலே எழுப்பி கபாலத்தில் உள்ள கோழையை அகற்றி அமிர்தம் உண்ணவேண்டும். அது தேனைப் போல ஆயிரம் மடங்கு தித்திப்பைக் கொடுப்பது. ஆகாயத்தாமரையில் உள்ள இவ்வமுதத்தை வாசியோகத்தால் கறந்து சந்திர மண்டலம், ஆதித்த மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலத்திலும் கரைத்து தம் உடம்பில் தினந்தோறும் அளவுடன் சேர்க்கும் யோகிகள் நல்ல யோகிகளே!!!
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -182
முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே.
முக்தியைப் பெற நினைத்து முனைந்து தியானம் புரிகின்ற போது ஆதி அந்தமாக முடிந்த ஆகாயத் தாமரையின் உச்சியில் அப்பனும், அம்மையும் பரிவுடன் நடனம் ஆடுவதை அறியலாம். இதனை தவம் முடித்த சித்தர்களும், ஞானிகளும் தனக்குள் நின்று பரம்பொருள் ஆடுவதையே தில்லையில் ஈசனுக்கும் ஈஸ்வரிக்கும் நடந்த ஆட்டம் இதுவே என்பார்கள். இந்த வண்ணம் உடலில் நின்று ஆட்டுவிக்கும் அம்மை அப்பன் ஆட்டம் நின்று போனால் உயிர் பொய் உடம்பு ஆடிய ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும். ஆகவே இதனை நன்கு அறிந்துணர்ந்து நினைந்து தியானியுங்கள். ****************************************************
சித்தர் சிவவாக்கியம் -183
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அநாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பருத்து நாட்டினால்
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே!!!
சக்தியும் சிவனும் ஒன்றாகி இந்த உலகம் அனைத்திலும் ஒன்றான சிவமே எல்லாமாய் இருக்கின்றது. இதனை சக்தியாகிய உடலையும் சிவனாகிய உயிரையும் ஒன்றில் ஒன்றாக்கி ஒன்றி தியானித்து சிவம் ஆகிய மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். அன்றும் இன்றும் ஒன்றே தெய்வம். ஒருவனே தேவன். அவன் அனாதியாக என்றும் எப்போதும் நிலையான ஒன்றாக இருப்பவன். என்றும் இளமை மாறாமல் நின்ற செம்பொன்னம்பலத்தைக் கண்டு செம்பில் களிம்பருத்து பொன்னாக்குவது போல் நீங்கள் செய்த பாவங்கள் யாவையும் நீக்கி சோதியில் மனதை நாட்டி தியானித்தால் அப்போதே தெய்வம் உமக்குள்ளே இருப்பதை அறிவீர்கள். அது சிவம் என்று. (கன்றல் - இளமை)
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 184
நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதங்களும்
கட்டி வைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்தபின்!
மரம் நடுவது போன்ற புண்ணியச் செயல்களும், தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் உயர்ந்த பரம் பொருளும், ஹோமங்கள் செய்ய அமைத்த யோனி குண்டங்களும், வேள்வியில் ஓதுகின்ற நான்கு வேத மந்திரங்களும், மிகவும் முக்கியமான நூல்கள் என்று பாதுகாத்து வைக்கும் புத்தகங்களும், ஞானியர் உபதேசிக்கும் யோக ஞானங்களும், அது பெரியது இது பெரியது என செய்யும் வாதங்களும் ஆகிய இவைகள் யாவுமே என் உடம்பில் பொட்டாக விளங்கும் பிரம்மத்தையே போதிக்கின்றது என்பதையே என் பிரானாகிய ஈசனை அறிந்தபின் யான் தெளிந்து உணர்ந்து கொண்டேன்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 185
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படைத்திலே சங்கு சக்கரங்களாய்
விட்டது அஞ்சுவாசலில் கதவினால் அடைத்த பின்
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறது எங்ஙனே?
உடம்பாகிய கூட்டுக்குள்ளே வட்டமான பூரண நிலவாக வளர்ந்து எழுந்து நிற்கின்றது பிரமம். அதுவே இப்பூமியெங்கும் சங்கு சக்கரங்களாக திகழ்கின்றது. இதனை அறிந்து ஐம்புலன்களையும் அஞ்செழுத்தால் அடக்கி அண்டமாக விளங்கும் முட்டையில் எழுந்துள்ள உயிராகிய சீவனை சிவனுடன் சேருங்கள். இறவா நிலையடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் பெறலாம். .
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!