சிவவாக்கியம் (176-180)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 176
அங்கலிங்க பீடமாய் ஐம்பத்தோர் எழுத்திலும்
பொங்கு தாமரையிலும் பொருந்துவார் அகத்திலும்
பங்கு கொண்ட சோதியும் பரந்த அஞ்செழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே!!
உடம்பில் உள்ள அங்கத்தை பீடமாக இலிங்கமே ஐம்பத்தொரு அட்சரமாக உள்ளது. சகஸ்ரார தலமான தாமரையில் மனதை நிறுத்தி தியானத்தில் பொருந்துவார்கள் அகத்தில் சக்தியும் சிவனுமாய் பக்குகொண்டிருக்கும் சோதியாக பரந்து இருப்பதும் பஞ்சாட்சரமே! இந்த அஞ்செழுத்தில் சிகரமாகும் நாத ஒளியாகவும் இருப்பதும் பஞ்சாட்சரமே. இதை அறிந்துணர்ந்து ஒலியையும், ஒளியையும் ஒன்றாக்கி தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -177
உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்?
உவமையாக்கி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்?
தவம்தான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்?
தற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்?
எதனோடும் ஒப்பிடமுடியாத தனித்தன்மையான பேரொளி நம்முள் உருவமாக நிற்பது எவ்விடம்? ஆகாயத்திற்கு உவமையான மனம் அண்டத்திலும் பிண்டத்திலும் அமைந்திருப்பது எந்த இடம்? தவத்திற்கு உரிமையான பரமனார் மெய்ப்பொருளாய் தரித்து நின்றது எந்த இடம்? தன் உடம்பில் நீராக நின்று தாங்கி தற்பரமாய் இருப்பது எந்த இடம்?
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -178
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்?
சொல்லு கீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்/
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே!!!
மாடான மனதில்தான் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய மூன்றும் பிறந்தது. அந்த நான்கு அந்த கரணங்களும் உடம்பில் எங்கு இருக்கின்றது. சொல்லும் வார்த்தைகள் தோன்றுவதும் ஏழு உலகங்களாக நின்றதும் அதுவாக இருப்பதும் எவ்விடம். அவளதான வாலை மேரு சக்கரமாகவும் அம்மையான மனோன்மணியாகவும் அமர்ந்திருந்தது எவ்விடம்? அவனும் அவளும் ஆடியே அருஞ்சீவன் உருவானது. எல்லாம் சிவசக்தியின் திருவிளையாடல் என்பதை புரிந்து தியானம் செய்து இச்சீவனை சிவனோடு சேருங்கள். .
*****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 179
உதிக்குகின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்குகின்றது எவ்விடம் கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்க நின்றது எவ்விடம் மதி மயக்கம் எவ்விடம்?
வித்திக்கவல்ல ஞானிகள் விரித்துரைக்க வேணுமே!
மனம் உதிப்பதும், ஒடுங்குவதும் எந்த இடம்? கதியாகிய வாசி இருப்பது எந்த இடம்? கண்ணுறக்கம் கொள்வது எந்த இடம்? யாவரும் மதின்க்கும்படி நின்றது எவ்விடம்? மதியாகிய அறிவும் மயக்கமான மாயையும் தோன்றிய இடம் எது என்பதையெல்லாம் விதியை வெல்ல ஞானம் போதிக்க வந்த குருமார்களே!! சீடர்கள் ஆறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 180
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருந்கிலாத கோலம் எட்டு வன்னியோடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றி வந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே!
மீண்டும் மீண்டும் இப்பூவுலகில் பிறந்திறந்து உழலும் உடல் எண்சான் அளவே. அந்த எட்டான உடலில் திறமாக செயல்படும் உயிர் எட்டாகிய ஆகாரத்தின் வாசலில் உள்ளது. அது ஆகாயமான எட்டாகி இருக்கும் கோலமும் அதிலே வன்னி எனும் தீயாக ஈசன் இருந்து ஆடும் இடம் அகாரம். அந்த எட்டான அகாரத்தில் ஒரு தூசோ, துரும்போ அண்டாது. பரிசுத்தமான கோலமாய் உள்ள இடமாகிய அகாரத்தில்தான் சோதி உள்ளது. இதனை யாவும் எட்டாக விளங்கும் தன் உடம்பிலே காணாமல் வேறு எங்கெங்கோ சுற்றி வருகின்ற மருள் பிடித்த மனிதர்களே! அரும்போ, மோட்டோ இல்லாத பூவாக உன் ஆன்மா உனக்குள் இருப்பதை உணர்ந்து அதிலேயே தியானித்து பிறவா நிலை பெற வாருங்கள். இது என் ஐயன் மீது ஆணையிட்டு உண்மையாகச் சொல்லுகின்றேன்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!