Search This Blog

Nov 21, 2011

இன்னா நாற்பது (05-08) பாடல்கள், விளக்கத்துடன்

சங்க இலக்கியத் தொகுப்பு நூல்களான பதினெண் கீழ் கணக்கில் நீதி நூல்களின் வகையில் வகைப்படுத்தப் பட்ட புலவர் கபிலரால் இயற்றப்பட்ட இன்னா நாற்பதின் தொடர் பதிவு


**************************************************************
இன்னா நாற்பது-பாடல்:05
சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை. 5


 பொருள்:-ஓம்பல் - பாதுகாத்தல்;


வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.
*************************************
இன்னா நாற்பது-பாடல்:06
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா; 

இடும்பை உடையார் கோடை இன்னா; இன்னா,

கொடும்பாடு உடையார் வாய்ச் சொல்.-06


பொருள்:  மறம் - வீரம்; கொடை - ஈகை;
அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம். வீரத்தன்மை உடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடை யாரது வாயிற் சொல்லும் துன்பமாகும்.

*****************************************************************
இன்னா நாற்பது - பாடல் 07
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா; 

தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,

மாற்றம் அறியான் உரை. -07

பொருள்
: உரை - சொல் தேற்றம் - தெளிவு
வலியில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.

*******************
இன்னா நாற்பது-பாடல் 08
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;

இகலின் எழுந்தவர் ஒட்டு இன்னா; இன்னா,

நயம் இல் மனத்தவர் நட்பு.-08

பொருள்:- நகை = சிரித்தல்; நெஞ்சத்தார் = மனமுடையார்.
ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும்.
******************************************** 

நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யககூடாதவைகளைப் பற்றி கூறும் கபிலர் என்னும் புலவர் இயற்றியது, இன்னா நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இன்னா நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!