சிவவாக்கியம் (171-175)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 171
தாதர் செய் தீமையும் தலத்தில்செய் கீழ்மையும்
கூத்தருக்கு கடைமக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே!
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தொண்டு செய்ய வந்தவர்கள் சுயநலமாக செய்யும் தீமைகளும், தலம் எனப்படும் கோயில், பள்ளி, ஆஸ்ரமம் போன்ற அறச்சாலைகளில் நடக்கும் கீழான செயல்களும், கூத்தாடிப் பிழைப்பவர்க்கு இழிவான கடைமக்கள் கூடிச் செய்கின்ற தீங்கும், வீதி வழியாகப் போகும் ஞானியை பழித்துரைத்துக் கல்லால் எரிந்து அடித்ததும் தப்பாமல் திரும்பி வந்து அவர்களுக்கு பாதகங்கள் ஆகவே பலித்து, துன்புற்று சாவார்கள். நீங்கள் செய்த பழிபாவங்கள் நீங்க 'சிவயநம' என்ற அஞ்செழுத்தை ஓதி பாதகங்கள் செய்யாது வாழுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -172
ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே!!
நெசவு நெய்யும் பாவைப்போல அங்கும் இங்கும் ஓடியோடி உழைத்து மூச்சானது ஓடி ஒய்ந்து உயிர்போகின்ற தருனஹ்தில் உங்கள் உள்ளங்கால் வெளுத்து படுக்கையில் படுத்ததும் அச்சமயம் ஓடிய நேசவுப்பாவிலே பூனை வந்து குதித்ததும், பாவிழை அறுந்து போவது போல, எமன் வந்து உயிரை எடுத்துப் போவது போனதும் மூச்சு நின்றதும், மருத்துவன் வந்து பார்த்து உயிர் போய்விட்டது என்பதும், பாவிலே நூல் இழை அறுந்து தறி ஓட்டம் நின்றுபோவது போலவே உடம்பைவிட்டு உயிர் மூச்சு நின்று போவது யாவும் உன்மாயமே ஈசனே!!
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -173
சதுரம் நாலு மறையும் எட்டுதான தங்கி மூன்றுமே
எதிரத்தான வாயு ஆறு என்னும் வட்ட மேவியே
உதிரந்தான் வரிகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்
கதிரதான காயகத்தில் கலந்தேழுந்த நாதமே!!
சதுரம் எனப்படும் நான்கு வேதங்களும் எண்சான் உடம்பிலே தங்கி, மூன்றான ஓங்காரமாய் இருக்கின்றது. அதையே பிரனவமாக்கி மூன்றெழுத்தால் ஆறு ஆதார வட்டங்களிலும் வாசியினால் மேலேற்றிப் பயில வேண்டும். உயிரிலிருந்தே உதிரங்கள் எட்டாகிய உடம்பு முழுவதும் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்து அகார, உகாரத்தை உயிரில் அறிந்து சிரசு எனும் தலை உச்சியில் சூரியனாக இருக்கும் சூட்சும உடம்பில் சுழுமுனையில் அவ்வாசியினைச் சேர்க்க நாத ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.
*****************************************************
சித்தர் சிவவாக்கியம் -174
நாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்
மேலு பத்து மாறுடனூமே திரண்ட தொன்றுமே
கோழி அஞ்ச்செழுத்துடே குருவிருந்து கூறிடில்
தொழு மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே
மூலாதாரத்தில் நான்கு இதழ் கமலமாகவும் 'ஓம்' என்ற மூன்று எழுத்தாகவும், சுவாதிட்டானத்தில் ஆறு இதழ் கமலமாகவும் 'ந' என்ற மண் பூதமாகவும், மணிப் பூரகத்தில் பத்து இதழ் கமலமாகவும் 'ம' என்ற நீர்பூதமாகவும், அனாகத்தில் பனிரெண்டு இதழ் கமலமாகவும் 'சி' என்ற நெருப்பு பூதமாகவும், விசுத்தியில் பதினாறு இதழ் கமலமாகவும் 'வ' என்ற காற்றுப் பூதமாகவும், ஆஞ்ஞாவில் இரண்டு இதழ் கமலமாகவும் 'ய' என்ற ஆகாயப் பூதமாகவும் உயிர் ஒன்றாகவும் உங்கள் உடம்பில் அஞ்செழுத்து அமைந்துள்ளது. இதனை உண்மையான குறு விரும்பி உபதேசித்து அதை உன் உடம்பிலேயே உணர்ந்து உபாசித்தால் நாத ஒலித் தோன்றும். அந்த நாதம் 'ஓம் நமசிவய' கோசமாக எழுந்து நிற்கும்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 175
கோஷமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும் தேசமாய்
பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேகனேகே மந்திரம்
ஆசனம் நிரந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே!
ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் என்ற கோச அட்சரங்களாக எழுந்து கூடாகிய உடலுக்குள் ஊடுருவி நின்று இத்தேசத்தில் தேகம் எடுத்து பிறந்ததும் 'நமசிவய' என்ற அஞ்செழுத்து மந்திரத் தத்துவத்தாலே தானே. சோதியான ஈசனையும், அவன் நம் உடம்பில் தற்பரமாய் நின்ற இடத்தையும் தான், அனைத்து மந்திரங்களும் வேதங்களும் சொல்கின்றது. அதனை ஐந்து ஐந்து கட்டங்களாக வரைந்து 'நமசிவய' என்ற அஞ்செழுத்தின் பீஜ அட்சரமாக அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களால் ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12 என்ற என்னையும் கொடுத்து அது மொத்தம் ஐம்பத்தொன்று என்பதையே ஐம்பத்தோர் அட்சரம் என்பார்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!