Search This Blog

Nov 29, 2011

இனியவை நாற்பது (11-15)-பாடல்களும் விளக்கமும்

 

 

 

 

 

பூதன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண் பாக்களினால் ஆனது. பண்டைக் காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

இனியவை நாற்பது பாடல்கள் (11-15) விளக்கத்துடன்:
இனியவை நாற்பது-பாடல்: 11  
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;
 குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;
உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து
உண்ணாப் பெருமைபோல் பீடு உடையது இல். 11
பொருள்:- பொருள்:- அதர் சென்று - வழி சென்று; குதர் சென்று - தவறான வழி;தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.
************************************

இனியவை நாற்பது- பாடல்: 12
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே
;
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது. 12

பொருள்:- குழவி - குழந்தை; திரு - செல்வம்
குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்: 13
மானம் அழிந்தபின்
, வாழாமை முன் இனிதே;
தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;
ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது. 13

பொருள்:- ஊனம் - குறைபாடு;
மானம் அழிந்தபின் வாழாமை மிக இனிது. செல்வம் சிதையாதபடி செல்வத்திற்குள் அடங்கி வாழ்தல் இனிது. குறைபாடு இல்லாத சிறந்த செல்வத்தைப் பெற்று வாழ்வது மிக இனிதாகும்.
************************************
இனியவை நாற்பது- பாடல்: 14 
குழவி தளர் நடை காண்டல் இனிதே;
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
தவினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து,
மனன் அஞ்சான் ஆகல் இனிது. 14

பொருள்:- தளர் நடை - தளர்ந்த நடை;
குழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் மழலைச் சொல் கேட்டல் இனிது. தீயவர்களின் சினத்தைக் கண்டபோதும் மனம் அஞ்சாமல் இருப்பது இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்: 15
பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற
;
வறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே;
மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது. 15

பொருள்:- பீடு - பெருமை
பிறனுடைய மனைவியை திரும்பிப் பாராத பெருமை இனிது. நீரில்லாமல் வாடும் பசிய பயிர்களுக்கு மழை பொழிதல் இனிது. வீரத்தையுடைய அரசர்களின் அரண்மனையில் பிளிற்றொலியைக் கேட்பது இனிது. 
************************************
நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யக் வேண்டியவைகளைப் பற்றி கூறும் பூதன் சேந்தன் என்னும் புலவர் இயற்றியது, இனியவை நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இனியவை  நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!