சிவவாக்கியம் (146-150)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -146
அம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மை அப்பன் அப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே.
தாயாகவும் தந்தையாகவும் நாத விந்துதான் அப்புவான நீராக இருப்பதை அறிந்தும் நாத விந்தை அறியாமல் உள்ளீர்களே. அப்பு எனும் நீரே விஷ்ணு, பிரம்மா, சிவன் எனும் மும்மூர்த்திகளாக இருக்கின்றனர். அந்த நீரே ஆதிக்கும் ஆதியான அனாதியாகவும், பிரமமாகவும் இருப்பதை உணர்ந்து அது ஒன்றையே எண்ணித் தியானியுங்கள். அதுவே அம்மையாகவும், அப்பனாகவும் வாலை அன்னையாகவும் இருந்து அருளும்.
*******************************************
சித்தர் சிவவாக்கியம் - 147
உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே
கருத்தரிப்பதற்கு முன் காரங்கள் எங்ஙனே
பொருத்தி வைத்த போதமும் போருந்துமாறது எங்ஙனே
குருத்திருத்தி வாய்த்த சொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!!!
ஆன்மா உருத்தரிப்பதற்கும் உடம்பு எடுப்பதற்கும் முன் தாய் தந்தை உடல் கலந்தது எவ்வாறு? அது நினைவு எனும் ஆகாயத்தில், அதனால் தோன்றிய சுக்கில சுரோணித கலப்பால் நீராகி தாயின் கருவில் சிசுவாக வளர காரணங்கள் என்ன? அது உகாரமாகிய உணர்வால் இரு வினைக்கு ஒப்பவே. இவ்வுடலில் பொருத்தி வைத்த போதப் பொருள் பொருந்தி இருப்பது எவ்விடம்? அது அகாரமாகிய அறிவாகி மெய்ப்பொருளாக உடம்பில் உள்ளது. இவை யாவையும் குரு திருத்தமாக சொல்லித்தந்து உபதேசித்ததை உணர்ந்து அதையே குறித்து தியானித்து இறவாநிலைப் பெறுங்கள்.
*******************************************
சித்தர் சிவவாக்கியம் -148
ஆதிஉண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே!!!
ஆதியை அறிந்து, அது ஒன்றையே பற்றி, தவம் புரியும் ஞானிகள் அழிவது இல்லை. அவர்களுக்கு நான்கு வேதமும் தேவை இல்லை. அவர்கள் சோதியான ஈசனைக் கண்டு அங்கெ சொல் ஏதும் இல்லாமல் சொல்லிறந்த தன்மையும் இல்லாமல் மௌனத்தில் ஊன்றி சும்மா இருப்பார்கள். ஆதியான அணுவில் அயன், அரி, அரன் என மூவரும் இருப்பதை உணர்ந்து, பிராணசக்தியாக வாலை அமர்ந்தே தானாகி நிற்பதனையும் உணர்ந்து தியானத்தில் இருப்பார்கள். இதனை வேறு யார் அறிவார்கள் அண்ணலே!!!
*******************************************
சித்தர் சிவவாக்கியம் - 149
புலால் புலால் அதேன்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருப்பது எங்ஙனே
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பெருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே!
நாறும் இறைச்சியிலான இவ்வுடம்பு இதுவென்று அறிந்தும் வேறுபடுத்தி இகழ்ச்சியாகப் பேசுகிறீர்கள். இறைச்சியிலான உடம்பைவிட்டு இறைவன் பிரிந்து தானாகி இருந்தது எவ்வாறு? உடம்பாகவும், உயிராகவும் இருந்து வாசியாகி உலாவிக்கொண்டு தானாகி நின்ற பரம்பொருள் இவ்வுடம்பில்தான் வித்தாக முளைத்து முதலாக உள்ளது. இதனை நன்கு உணர்ந்து கொண்டு இவ்வான்மாவை மேம்படுத்த, சோதியாக எழுந்த ஈசானை கண்டு தியானம் செய்யுங்கள்.
*******************************************
சித்தர் சிவவாக்கியம் - 150
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டு பட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே!!!
தாயின் இரத்தத்திலிருந்து உருவான பாலைக் குடித்துதான் நீங்கள் வளர்ந்தீர்கள். சதையாக இருந்த ஒன்றிலிருந்தே பிண்டம் உருவாகி வெளிப்பட்டு தாயாகவும், சேயாகவும் இரண்டானது. அமிர்தமான தாய்ப்பால் கொடுப்பதும் மாமிசப்புலாலான சதைதானே. மாமிசத்தில் இருந்தே உருவாகி மாமிசமாகவே வளர்ந்த நீங்கள் மாமிசமில்லாத சதுரமான நான்கில் நின்று வளராமல் இருந்தது எது என்பதை அறிவீர்களா? மற்றவரை சைவர் இல்லையென வெறுக்காது சைவத்தைக் கடைப்பிடியுங்கள்.
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!