சிவவாக்கியம் (141-145)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -141
சிட்டர் ஒத்து வேதமும் சிறந்த ஆகமங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்
கட்டி வைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்தபின்.
வேத பண்டிதர்கள் ஓதும் நான்கு வேதங்களும், சிறந்ததாய் விளங்கும் ஆகம சாஸ்திரங்களும், கோயில் கட்டி அதன் கருவறையில் கற்சிலைகள் நட்டு வைத்து கும்பாபிஷேகம் செய்யும் காரணங்களும், திருமந்திரம், திருக்குறள், திருவாசகம் போன்ற உன்னதமான நூல்களும், யோகா தவத்தால் கட்டிச் சேர்த்து வைத்த போதப் பொருளும், இராமாயணம், மகாபாரதம், புராணம் போன்ற கதைகளில் எல்லாம் உகந்ததாகச் சொல்லாப்படும் பிரமம் போன்ற இவை யாவும் எனக்குள் இருக்கும் எம்பிரான் ஈசனை அறிந்தபின் எனக்குள்ளேயே ஒரு பொட்டாக ஒரே மெய்ப்போருளாகவே முடிந்திருக்கிறதே என்பதை உணர்ந்து கொண்டேன்.
**********************************************
சித்தர் சிவவாக்கியம் -142
நூறு கோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறும் ஆறும் ஆருமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே.
எவ்வளவோ ஆகமங்கள், அதில் எத்தனயோ மந்திரங்கள், வாழ்நாள் காலம் முழுவதும் இருந்து ஒதிவந்தாலும், அதனால் மெய்நிலை அடைய முடியுமா? அதன் பயனால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டுப் படிகளையும் கடந்து அகத்தில் ஓர் எழுத்தாக மெய்ப் பொருளை அடைந்து அதையே நினைந்து 'சிவயநம' என்று ஓதி தியானிக்க சோதியாக உலாவும் ஈசனே உன் குருவாக வந்து பேசுவான்.
************************************************
சித்தர் சிவவாக்கியம்-143
காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால்
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!
இரவும் பகலும் தனக்குள்ளேயே கலந்து நிற்கும் இறைவனார், இரவும் பகலுமாய் சிவந்த சோதியாக நின்றிலங்கும் மாயம் எப்படி என்பதனைச் சொல்லுங்கள். அது மெய்ப் பொருளாக இருப்பதை அறிந்து இரவும் பகலும் எந்நேரமும் கருத்துக்கள் உதிக்கும் சிந்தையிலே நினைவு ஒடுங்கி சிவத்தியானம் செய்து வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில் ஈசன் சோதியாக திகழ்வான். அதனால் எமன் வருவான் என்பதோ, எமபயம் என்பதோ, தியானம் செய்பவர்களுக்குக் கிடையாது.
*****************************************************
சித்தர் சிவவாக்கியம்-144
எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம்
நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!!
எட்டாகிய எண்சான் உடம்பிலே இரண்டாகிய உயிர் உள்ளது. இப்படி எட்டும் இரண்டுமாய் இணைந்த இத்தேகத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா ஆகிய ஆறு ஆதாரங்கள் உள்ளது. இவ்வுடம்பில் சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்நிமண்டலம், என்ற மூன்று மண்டலங்கள் இருக்கின்றது. இப்படி உள்ள உடம்பாகிய மண்டபத்தில் நடுவாக இருந்து நாதனாகிய ஈசன் ஆடி நின்று ஆட்டுவிக்கின்றான்!!!
**************************************************
சித்தர் சிவவாக்கியம்- 145
நாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்
சேரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே!!!
எண்சான் உடன்பில் நாதன் நின்றது எந்த இடம்? இடகலை, பிங்கலை எனும் மூச்சில் மூலநாடியான சுழுமுனையில் ஏற்றி இறக்கி, வாசிப் பயிற்சியினால் தீயாக விளங்கும் ருத்திரனை கண்டு அங்கு சந்திர, சூரியனாக விளங்கும் இரண்டு கண்களையும் ஒன்றாக இணைத்து எட்டுதிசைகளையும் மூடி அகக்கண்ணைத் திறந்து தியானம் செய்யுங்கள். மேலான அவ்வாசலில் சக்தியும், சிவனும் கலந்து சிவமாக ஆடி நிற்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!