Search This Blog

Nov 9, 2011

தமிழ் மொழியும் இலக்கியங்களும்!!


தமிழ் மொழியும் இலக்கியங்களும்!


தமிழ்நாடு, மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் உள்ள "தமிழன்னை" சிற்பம்.
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.  தமிழ், சமஸ்கிரதத்திற்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005 - ஆம் ஆண்டு முதலாக தமிழ் செம்மொழி என ஏற்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூராகிய நாடுகளில் தமிழ் அரச அலுவல் மொழியாகவும் இருக்கின்றது.

பலசிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள இத்தமிழின்
தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ‍என பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே! மேலும் பல படங்கள் மற்றும் விளக்கங்களைக் காண இணைப்பினைச் சொடுக்கவும். @ https://www.facebook.com/media/set/?set=a.10150180959712473.306123.141482842472

தமிழில் கிடைக்கப்பற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது.  கி.மு.300 தொடக்கம் கி.பி.300  வரை எழுதப்பட்ட இலக்கியங்கள் சங்க இலக்கியம் எனப்படுகிறது. இவைகளை அகத்தியம், தொல்காப்பியம் எனதும் மேலும் பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்கணக்கு எனவும் பகுக்கப் பட்டுள்ளது.

பதினெண் மேற்கணக்கில் எட்டுக்கணக்கும் - ஐந்குருநூறு, அகநானூறு,புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல் மற்றும் பதிற்றுப்பத்து ஆகியவையும்)
, பத்துப் பாட்டும் (திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், மதுரை காஞ்சி, முல்லைப் பாட்டு, நெடுநல் வாடை, பட்டினைப்பாலை, பெரும் பாணாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகியவையும்;

பதினெண் கீழ்க
க்கில் - நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது,  கார் நாற்பது,  ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை ஆகியவை ஆகும்.

இந்த சங்க நூற்கள் அதிகமாக நமக்களிக்கும் செய்திகள் : தமிழ் சங்கம், சங்ககால நிலத்திணைகள், சங்ககாலப் புலவர்கள், சங்ககால பெண் புலவர்கள், சங்ககால ஊர்கள், சங்ககால மன்னர்கள், சங்ககால நாட்டுமக்கள், சங்ககால கூட்டாளிகள் இவைகளைப் பற்றிய, அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்களை நமக்களிக்கின்றன.

அகத்தியம்:  இவைகளில் அகத்தியம், மிக பழமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருதப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கனத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  இந்நூல் இயல், இசை மற்றும் நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.  தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன

இப்போது நமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான தமிழ் நூலான தொல்காப்பியத்திற்கு மூலநூலும் இதுவே ஆகும். இக்காலத்தில் எழுந்த அர நூல் திருக்குறள். இன்று அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை, இவனரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொல்காப்பியம் : மேலேகண்ட, பெருமைகளைக் கொண்ட, அகத்தியரின்மா முனிவரின் முக்கிய மாணாக்கர்களில் ஒருவரான தொல்காப்பியர் இயற்றியதே தொல்காப்பியம் என்று தொல்காப்பிய பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலுருக்கும் ஒரு இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்கள் தோன்றின.


 
தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கம் மருவிய கால இலக்கியங்களைக் காண்போம்: கி.பி.300 -இலிருந்து கி.பி. 700 -வரை தமிழ் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே பௌத்த தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி மற்றும் ஐந்சிருகாப்பியங்களும் தோன்றியன. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாக கருதப்படுகிறது.

பக்தி கால இலக்கியங்களைக் காண்போம்
கி.பி.700 -இலிருந்து கி.பி. 1200 -வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகின்றது. இக்காலத்தில் தமிழ் பக்தி இயக்கம் வலுபெற்று சைவமும், வைணவமும் ஆதரவு பெற்றன. சிவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரந்திவ்விய பிரபந்தம் பாடப் பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாந்த நூற்களும், கலிங்கத்துப் பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இயற்றப்பட்டன.  கி.பி.850 -இலிருந்து கி.பி. 1250 -ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடைக்கால இலக்கியங்களைக் காண்போம்:  
கி.பி.850 -இலிருந்து கி.பி. 1250 -ஆம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதி, இடைக்காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிருத்துவ இலக்கியம் ஆகியவைகளின் தோற்றக் காலம் ஆகும். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில் தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கிறித்துவ மத ஆசிரியரால் கி. பி. 1732 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பால நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.

தற்கால இலக்கியங்களைக் காண்போம் :

கி.பி. 18 -ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது.  உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடித் பிடித்து பதிப்பித்துப் பாதுகாத்தனர். 1916 ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமஸ்கிருத சொற்களையும், மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப் பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர். 

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் சுப்ரமணிய பாரதியார் கருதப் படுகிறார். இக்காலத்தில் புதுக் கவிதை பிறந்தது. உரைநடை வீச்சுப் பெற்றது. புதினம் சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954-1968 கால பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நர்போக்குக்கள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழைக் கருவியாகப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் பெரும் வெற்றி கண்டனர்

தற்காலத்தில் பெண்ணியக் கருத்துக்களை எடுத்துரைத்த அம்பை, மாலதி, மைத்திரி, குட்டி ரேவதி,சுகிர்தநாணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி (சதாரா), வைகைச் செல்வி, தாமரை உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துக்களும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. மாத, வார, நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்ச்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் முக்கியத்துவம் கருதி, அறிந்து தமிழ்நாடு அரசும், பிற அமைப்புக்களும் அதனை வளர்ப்பதே குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள்.
 
இனி வரும் பதிவுகளில் தமிழ் இலக்கியங்களை, அகத்தியம், தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு மற்றும் பதினெண் கீழ்கணக்கு இவைகளை விரிவாகப் பார்ப்போம்....

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!