Search This Blog

Nov 24, 2011

இன்னா நாற்பது (14-20) பாடல்கள், விளக்கத்துடன்

இன்னா நாற்பது (14-20) பாடல்கள், விளக்கத்துடன்:-

சங்க இலக்கியத் தொகுப்பு நூல்களான பதினெண் கீழ் கணக்கில் நீதி நூல்களின் வகையில் வகைப்படுத்தப் பட்ட புலவர் கபிலரால் இயற்றப்பட்ட இன்னா நாற்பதின் தொடர் பதிவு


**************************************************************
இன்னா நாற்பது- பாடல் :14
வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா;
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,
உணர்வார் உணராக்கடை. 14

பொருள்:- புணர் - வேற்றுமையின்றி; உணராக்கடை - அறியாவிடத்து
கருமையான கூந்தலையுடைய மகளிர் தம் கணவனை வஞ்சித்தல் துன்பமாகும். கொத்தாகத் தொங்குகின்ற மாம்பழம் கனிந்து விழுந்தால் துன்பமாம். வேற்றுமையின்றிக் கூடிய பெண்ணைப் பிரிந்து செல்வது துன்பமாம். அறிந்து கொள்ளக் கூடியவர்கள் அறியாவிட்டால் துன்பமாம்.
*************************************
இன்னா நாற்பது- பாடல்:15
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;
கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா;
இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,
பல்லாருள் நாணுப் படல். 15

பொருள்:- புல் - புல்லை; புரவி - குதிரை;
புல்லை உண்கின்ற குதிரையின்மேல் மணியில்லாமல் ஏறிச் செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம் துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கமடையும்படியான நிலையில் இருத்தல் துன்பமாம்.
*************************************
இன்னா நாற்பது-பாடல்:16 
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
எண் இலான் செய்யும் கணக்கு.16

பொருள்:- புணர்ச்சி - சேர்க்கை;  வனப்பு - அழகு;
உண்ணாது சேர்த்துவைக்கும் பெரும் பொருள் துன்பமாம். ULAM பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன் இயற்றும் கணக்கு துன்பமாம்.
*************************************
இன்னா நாற்பது-பாடல்:17
ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகழ் இன்னா;
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,
ஈன்றாளை ஓம்பா விடல் - 17

பொருள்:- பேதை = அறிவு இல்லாதவன்; அவிந்த = அடங்கிய;
கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாம். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.

*************************************
இன்னா நாற்பது-பாடல்:18
உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;
மாறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;
சுரம் அறிய கானம் செலவு இன்னா; இன்னா,
மன வரியாளர் தொடர்பு. - 18 

பொருள்:- உரன் = திண்ணிய; மாறன = வீரம்;
நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம். வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல்(வீரம் பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும். மன வறுமை உடையாறது சேர்க்கை துன்பமாகும்.
*************************************
இன்னா நாற்பது-பாடல்:19
குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;
நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி. 19

பொருள்: குலத்து - நற்குடியில்; நிலத்து - பூமியில்;
நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.
*************************************
இன்னா நாற்பது-பாடல்: 20
மாரி நாள் கூவும் குலின் குரல் இன்னா;
வீரம் இலாளர் கரு மொழிக் கூற்று இன்னா;
மாறி வளம் பொன்னா; ஆங்கு இன்னா
மூரி இருத்தால் உழவு. -20

பொருள்: இலாளர் - அன்பில்லாதவறது; ஊர்க்கு - உலகிற்கு;
மழைக் காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாம். அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும். மழை பெய்யவில்லை என்றால் ஊருக்கும் துன்பம். அவ்வாறே எருமையால் உழவுத் தொழில் செய்தல் துன்பமாகும்.
 
*************************************
நாம் வளம் பெற,  நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யககூடாதவைகளைப் பற்றி கூறும் கபிலர் என்னும் புலவர் இயற்றியது, இன்னா நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இன்னா நாற்பதின் ஊடாக  பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!