சங்க இலக்கியத் தொகுப்பு நூல்களான பதினெண் கீழ் கணக்கில் நீதி நூல்களின் வகையில் வகைப்படுத்தப்பப் பட்ட, புலவர் கபிலரால் இயற்றப்பட்ட, இன்னா நாற்பதின் தொடர் பதிவு.
**************************************************************
**************************************************************
இன்னா நாற்பது-பாடல்:21
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,
ஓத்து இலாப் பார்ப்பான் உரை.21
பொருள்:- பிணி - நோய்; உணல் - உண்ணுதல்;
கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல் துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில் நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல் இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.
****************************************
இன்னா நாற்பது- பாடல்:22
யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,
கான் யாறு இடையிட்ட ஊர். 22
பொருள்:- கான்யாறு - காட்டாறு;
யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம். அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.
****************************************
இன்னா நாற்பது- பாடல்:௨௩
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;
அறை பறை அன்னார் சொல் இன்னா; இன்னா,
நிறை இலான் கொண்ட தவம். 23
பொருள்:- சிறை - மதில்; அறை - ஒலிக்கின்ற;
மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றாரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.
****************************************
இன்னா நாற்பது- பாடல்:24
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு. 24
பொருள்:- ஏமம் - காவல்; மூதூர் - பழைய ஊரில்;
பழைய ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும். அவ்வாறே, நான், எனது என்பாரோடு தங்கியிருத்தல் துன்பமாம்.
****************************************
இன்னா நாற்பது- பாடல்:25
நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா
நட்ட கவற்றினால் சூது. 25
பொருள்:- ஒட்டார் - பகைவரது; உறை - வாழ்தல்;
நட்புக் கொண்டவர்களுடைய துன்பங்களைப் பார்ப்பது துன்பமாம். பகைவரது பெருமிதத்தைப் பார்ப்பது மிகவும் துன்பமாகும். உறவினர் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் துன்பமாகும். அவ்வாறே சூதாடுவது துன்பமாகும்.
****************************************
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!