சிவவாக்கியம் (131-135)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம்- 131அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!
ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!! வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ? எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!! இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன். அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் பிள்ளையான கணேசன் உனக்குக் காவலாக உனக்குள்ளேயே பிண்டக்கல்லாக கலந்திருப்பதை கண்டு தியானம் செய்யுங்கள்.
**********************************************
சித்தர் சிவவாக்கியம்- 132
காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே!!!
காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!! எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா? அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.
**************************************************
சித்தர் சிவவாக்கியம்- 133
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!!!
எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா, எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.
************************************************
சித்தர் சிவவாக்கியம்-134
அறையறை இடைக்கிடந்த அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீற்குளித்தால் அன்று தூமை என்கிறீர்
போரை இலாத நீசரோடும் போருந்துமாறது எங்ஙனே.
இளம்பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் அறையில் ஒதுக்கி வைப்பது ஏன் என்றால் அவள் தீட்டு என்று சொல்கின்றார்கள். பத்து மாதம் கருவிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் தீட்டு என்கிறார்கள். இறந்த சாவுக்குப் போய்விட்டு குளத்தின் துறைகளில் குளிக்கும் காரணம் கேட்டால் அதற்கும் தீட்டு என்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் தீட்டு எனும் பொறுமை இல்லாத நீசர்கலோடும் நீ தீட்டாகவே பொருந்தி இருப்பது எவ்வாறு இறைவா?
*************************************************
சித்தர் சிவவாக்கியர்-135
சுத்தம் வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகிய நீரிலே தவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது சுட்டதேது தூய்மை கண்டு நின்றது ஏது?
பித்தர் காயம் உற்றதேது பேதம் ஏது போதமே.
சுத்தமான ஆகாயத்திலிருந்து சுத்தமான மழைநீர் பெய்கிறது.இதனை உனக்குள் அறியாது சிற்றின்ப நீரிலே மூழ்கி அதனாலேயே பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விந்து விட்டு நொந்து கெடும் மூடரே!!! நீரிலே மூழ்குவது மட்டும் சுத்தம் அல்ல. மனதிலுள்ள மாசுக்களை நீக்குவதே சுத்தம். சுத்தம் ஏது? தீயாக சுட்டது ஏது? என்பதை அறிந்து அது பேதம் ஏதும் இல்லாத மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து உணர்ந்து மனதை அதிலேயே இருத்தி தியான போதத்தில் திளைத்திடுங்கள்.
********************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
முதல்முறை தங்கள் எழுத்தை படிக்கும் வாய்ப்பு இன்று கிடத்தது (தமிழிஷ் மூலம்)
ReplyDeleteஅற்புதமான விளக்கம், தாங்கள் இம்மாதிரி பதிவுகள் எழுத இறைவன் துணையிருப்பான்
S Mugundan
மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நட்பே!! வந்து குட்டி என்றும் எஸ்.முகுந்தன் என்றும் இருக்கின்றதே !!! தங்களின் இயற்பெயர் யாதெனின் யாதெனின் அதனின் அதனின் வாழ்த்துக் கூற என்னால் இயலுமே இனிய நட்பே!!! தங்களின் பின்னூட்டக் கருத்து எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு குளிகையாகும். தங்களை இப்பதிவினுடன் தொடர்புடைய மற்றும் ஏனைய பதிவுகளையும் கண்டு கருத்துப் பின்னூட்டமிட வேண்டுகின்றேன். அன்புடன் கே எம் தர்மா...
ReplyDeleteமகிழ்ச்சியோடு நன்றி.
ReplyDeleteஎன் பெயர் S முகுந்தன், என் மகளின் செல்ல பெயரில் வலை பதிவு உள்ளது(வந்தனா)
மிக்க மகிழ்ச்சி நண்பரே முகுந்தன் அவர்களே!! செல்லக்குட்டி வந்துவுக்கு அன்புத் தாத்தாவின் வாழ்த்துக்கள்!!
ReplyDelete