இனியவை நாற்பது - பாடல்களும் விளக்கமும்
பூதன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண் பாக்களினால் ஆனது. பண்டைக் காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
இனியவை நாற்பது பாடல்கள் (06-10) விளக்கத்துடன்:
இனியவை நாற்பது-பாடல்: 6
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது. 6
கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:7
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது. 7
பொருள்:- பந்தம் - உறவு ஆண்மை - வீரம்
பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.
பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:8
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது. 8
பொருள்:- கலிமா - குதிரை; தார் - மாலை
வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:9
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே; அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது. 9
பொருள்:- அகல் நிலா - விரிந்த நிலா; காண்பு - காணுதல்;
தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.
************************************
இனியவை நாற்பது- பாடல்:10
கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு. 10
பொருள்:- நீக்கல் - விலக்குதல்; அஞ்சி - பயம்;
கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.
************************************
நாம் வளம் பெற, நலம் பெற, மன நிறைவுடன் வாழ நாம் செய்யக் வேண்டியவைகளைப் பற்றி கூறும் பூதன் சேந்தன் என்னும் புலவர் இயற்றியது, இனியவை நாற்பது என்னும் நூல். பதினெண் கீழ் கணக்கின் தொகுப்பில் உள்ள இந்த நீதி நூலை நமது வாழ்க்கையில் பின்பற்றி வளமுடன் வாழ்வோமாக!!! மேலும் இனியவை நாற்பதின் ஊடாக பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!