Search This Blog

Oct 29, 2011

சிவவாக்கியம் (101-105) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (101-105)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-101

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அன்ஜெழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே.

ஓம் என்ற ஓங்காரத்தில் ஒன்பது வகையான சூரியன், சந்திரன், அக்னி, நட்சத்திரம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என அனைத்தும் தோன்றியது. இதனை மூவர்களும், தேவர்களும் தேடினார்கள். அது அ, உ,  ம் என்ற மூன்றேழுத்தாகவும், 'நமசிவய' அன்ஜெழுத்தாகவும் அனைத்தும் அடங்கிய ஒரேழுத்தாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த ஓங்காரமே நமையீன்ற தாய், தந்தையாகவும், நாத விந்தாகவும் இயங்கி  வருகின்றது. அதுவே மூன்று மண்டலத்திலும் , , ம் என்ற எழுத்தாக இருந்து வருகின்றது. இந்த ஓங்கார உட்பொருளையும் ஒரேழுத்து உண்மையையும் சொல்ல எங்கும் யாரும் இல்லையே. ஆதலால் ஓங்காரத்தின் அனுபவ உண்மைகளை அனைவரும் அறிந்து தியானியுங்கள்.
*************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-102

சொருகின்ற பூதம் போல் சுனங்குபோல் கிடந்த நீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே
சீருன்கின்ற ஐவரைச் சிணுக்கறுக்க  வல்லீரேல்
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவீரே!

உண்ணும் உணவின் சக்தியினால் பஞ்சபூதங்களால் உருவான சுக்கிலமானது விந்து பையில் சேருகின்றது. அதனை காம வேட்கையால் நாறுகின்ற சாக்கடையில் வீழ்ந்து எழுவதைப் போல சிற்றின்பத்தில் விரும்பி வீணாக்கும் மூடர்களே! காமத்தைத் தூண்டும் ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, வாசி யோகத்தால் அந்நீரை அனலாக மாற்றி, மேலேற்றி காம கோபத்தை அறுக்க வல்லவர்களானால் மனிதர்களில் கோடியில் ஒருவராகி ஆறு ஆதாரங்களையும் கடந்து ஒன்றாக ஒளிரும் சோதியாக ஆவீர்கள்.

******************************************
 சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-103
வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டறக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்து எம்பிரானை நாம் அறிந்தபின்

பிரம்மம் உனக்குள்ளே வட்டமாக நின்று ஆட்டுவித்து வெளியான ஆகாயத்தில் திகழ்கிறது. 'ஓம்நமசிவய' எனும் எட்டு அட்சரத்துக்குள்ளே தான் ஐம்புலன் அடக்கமும் தியான ஒடுக்கமும் நிறைந்துள்ளது. எண்சான் உடம்பில் எட்டாகிய அகாரத்தில் எட்டுத் திசைகளாகவும், பதினாறு கோணமுமாக இயங்கும் வெட்டாத சக்கரத்துளே சோதியாக உதிப்பவன் ஈசன். நாம் இதனை நன்கு அறிந்து அந்த இடத்திலேயே 'ஓம்நமசிவய' என்று ஓதி தியானிப்போம்.

***************************
 சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -104

பெசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பெசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே

மனசாட்சியாக இருந்து பேசுபவன் ஈசன், உனக்குள் பிரமத்தை அறிந்து ஞானம் பெற்று தியானம் செய்யுங்கள். ஆசைகள் ஐம்புலன்களால் வெளிப்பட்டு ஞானமடைய தடை செய்து, நம்மை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன. அவ்விச்சையை விட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஒரேழுத்திலேயே மனதை நிறுத்தி மௌனமாக இருந்து தவம் செய்து வந்தால் உள்ளிருக்கும் ஈசனே குருநாதனாக வந்து பேசுவான்.

********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -105

நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே

'
நமசிவய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் உபாசித்து வந்தால் எல்லா வளமும் நலமும் மேலான நிலைகளும் கிடைக்கும். நமசிவாய எனும் அஞ்செழுத்தே பஞ்சபூதங்கலாகவும், புராணங்களாகவும், மாயையாகவும் அமைந்துள்ளது. இந்த அஞ்செழுத்து நமக்குள்ளேயே ஆறாதாரங்களிலும், பஞ்சாட்சரமான மெய்ப்பொருளாகவும் இருப்பதை அறிந்து அது எப்போதும் நித்தியமாய் உள்ளது என்பதை உணர்ந்து நமசிவாய! உண்மையை நன்றாக உபதேசியுங்கள் குருநாதரே!! ************************************************************************ 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!