Search This Blog

Oct 18, 2011

சிவவாக்கியம் (076-080) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (076-080)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -076
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணை தேடும்
அறிவிலாத மாந்தரோடு அனுகுமாறது எங்ஙனே

அறிவிலே பிறந்த ஏடுகளைப் படித்து மனனம் செய்து வேத ஆகமங்கள் ஓதுவார்கள். யோக ஞானா நெறியிலே நின்று தியானம் செய்து மயக்கத்தை ஒழித்து மெய்ப்பொருளை அரிய மாட்டார்கள். தனது வீட்டின் உறியிலே தயிராக வைத்துக் கொண்டு ஊரெல்லாம் அலைந்து வெண்ணை தேடுகின்ற மூடரைப் போல உனக்குள்ளேயே இருக்கும் இறைவனை அங்கும் இங்குமாய் தேடி அலையும் அறிவை அறியாதவுருக்கு எப்படி எடுத்துரைத்து அணுகுவது.
********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 077
இருவர் அரங்கமும் பொருந்தி என்புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஒர்கிலீர்
 
கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்து பின்
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லீரே

சக்தியாகிய உடலும் சிவனாகிய உயிரும் ஒரே நினைவோடு அன்பால் என்புருகி தியானம் செய்யுங்கள். நமக்குள் உருவாக அரங்கத்தில் ஒளியாக நின்று ஒன்றாய் இருக்கும் உண்மையை உணர்ந்து அதுவே இறைவன் குடியுருக்கும் கோயிலாக இருப்பதைக் கண்டு அறிந்து அத்திருவரங்கத்தில் உடலையும் உயிரையும் இணைத்து சிவத்தில் கரைய தவம புரியுங்கள்.
*********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -078
கருக்குழியில் ஆசையைக் காதலுற்று நிற்கிறீர்
குறுக்கிடும் ஏழைகள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே

பெண்ணின்ப ஆசையால் காதல் வயப்பட்டு அதே நினைவில் நிற்கின்றீர்கள். அந்த குறிப்பைத் தவிர அதனால் வரும் துன்பங்களை அறியாத ஏழைகளே! பெண்ணின்பத்தினை பெரிதாக போற்றி குலாவுகின்ற பாவிகளே! அதனால் உங்கள் உடம்பு உருக்குலைந்து உயிர் போய்விடுமே! ஆதலால் நல்ல குருநாதர் உன்னைத் திருத்திக் கற்றுக்கொடுக்கும் உண்மையான யோகத்தை செய்து நமது மெய்யில் பஞ்சாட்சரமாக இருக்கும் மெய்ப் பொருளை அறிந்து 'சிவயநம' என்ற அஞ்செழுத்தை ஓதி உனக்குள்ளேயே உணர்ந்து தியானித்து அறிந்து கொள்ளுங்கள். 
********************************************************.
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 079
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண் மறைந்தவாறு போல்
என்னில் கோடி தேவரும் இதின் கனார் விழிப்பதே.

இருவினை பாவ புண்ணியத்தால்தான் மண்ணில் பிறக்கின்றோம். கடவுள் உண்டென்றும் இல்லையென்றும் வழக்குகள் பேசுகின்றோம். எண்ணில்லாத கோடி தேவர்களையும் என்னுடையது, உன்னுடையது என்றும் உரிமை கொண்டாடுகின்றோம். அதனால் இறைவனை அறிந்து கொண்டீர்களா? அவ்வண் உனக்குள்ளேயே அதுவாக இருப்பதை உணருங்கள். கண்களில் இருக்கும் கண்மணியால் எல்லாம் காணப்பட்டாலும் அதனை அக்கண்ணே மறைப்பதுபோல் தனக்குள் இருக்கும் ஆன்மாவை காணமுடியாது மையை மறைக்கின்றது. இதனை தியானத்தால் அகக்கண் திறந்து பார்த்தால் எல்லா தெய்வங்களும் இதன் கண் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.
*********************************************** 
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -080
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள். ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!!!
**************************************************************************** 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!