இந்து மதத்தின் உட்பிரிவுகளில் சைவ சமயம் தொன்மையானது மட்டுமல்ல ஆழமான பல கருத்துக் களையும் உள்ளடக்கியது என்பதை சென்ற அத்தியாயத்தில் சிறிது பார்த்தோம் அப்படிப் பார்க்கையில் சைவத்தில் காஷ்மீர் சைவம் என்று ஒரு பிரிவு இருப்பதையும் அறிந்து கொண்டோம். இமயச்சாரலில் தழைத்தோங்கி இருந்த காஷ்மீர சைவத்தின் முழுத் தன்மையையும் தென்பகுதி மக்களாகிய நாம் தெளிவாக அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு காரணம் வடக்கு தெற்கு வேறுபாடா சமய ஆச்சாரியார்களின் உபதேசத்தில் உள்ள குறைபாடா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் அக்குறைபாட்டை முடிந்தவரை களைவது நமது கடமையாகும்.
தனது வரம்பற்ற சக்தியாலும், கட்டுத்தளை இல்லாத விருப்பாற்றலினாலும் சிவபெருமான் தன்னிடமிருந்து உலகத்தை படைத்துள்ளார். அவனிடமிருந்து உருவாக்கம் பெற்ற இந்த உலகமானது அவனின் வேறாக கருதப்பட முடியாது. இறைவன் தன்னை அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று இரண்டாக வகைப்படுத்தி கொள்கிறான். இதனால் காஷ்மீர் சைவ தத்துவப் படி ஜீவனும் சிவனும் வேறானது அல்ல. கட்டுக்குள் இருக்கும் போது ஜீவனாகவும் கட்டுத்தளைகளை கடந்து ஞான பிழம்பாக நிற்கும் போது சிவனாகவும் காட்சி தருகிறான். தானே உலகமானாலும் கூட தன்னிலிருந்து மாறுபட்டது போல் காட்சியளிக்கும் உலகம் 36 தத்துவங்களால் ஆனது. சிவம், சக்தி, சதாசிவம், ஈஸ்வரம், சுத்த வித்தை, என்ற ஐந்தும் சுத்த தத்துவங்களாக கருதப்படுகிறது. இந்த ஐந்தில் சிவ சக்தி தத்துவம் பரிணாமத்தின் ஆதாரமாக இருப்பினும் இருமை மாற்றம் என்று அதை கொள்வது கிடையாது.
தனது சுதந்திரமான சர்வ சக்தியினால் தனக்குள் அடங்கி கிடக்கும் பிரபஞ்சத்தை வெளிப்படும் படி சங்கல்பித்தவுடன் ஏற்படும் முதல்அதிர்வினை சிவதத்துமாக கொள்கிறார்கள். எல்லாவிதமான தத்துவ மாற்றங்களுக்கும் அடிப்படையாக பிறக்கும் தூய ஞான நிலையான சுத்த சைதன்யம் சிவ மாக வெளிப்படுகிறது. சிவத்திலிருந்து வெளிப்படுகின்ற ஆற்றல் சக்திதத்துவமாக உருமாற்றம் அடைகிறது. பொதுப் படையாக இவ்விரு தத்துவங்களுக்கும் வேறுபாடு இல்லையென்றாலும் சூரியனையும் அதன் வெளிச்சத் தையும் பிரித்து பார்ப்பதை போல் சிவசக்தி தத்துவத்தை வேறுபடுத்தி பார்க்கலாமே தவிர அடிப்படையில் சிவமே சக்தியாகும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
ஆத்மாவும் அனாத்மாவும் தொடர்புறும் நிலையில் சதாசிவ தத்துவம் வெளிப்படுகிறது. சதாசிவத்தின் சைதன்யம் தான் அறியப்படும் பொருளாக அனுபவப்படும் போது நாதுறு என்றும், நேயம் என்றும், இரண்டாக பிரிந்து இச்சை என்றும் விருப்பாற்றல் என்றும் மேம்பட்டு விளங்குகிறது. காஷ்மீர் சைவத்தின் அடுத்ததாக சொல்லப்படும் ஈஸ்வர தத்துவம் ஞானத்தின் முழு ஆற்றலையும் தனக்குள் கொண்டதாகும். இறைவனின் அனைத்து கூறுகளையும் அனுபவித்து ஆத்மாவை அவனோடு சமுத்திரத்திற்குள் உப்பு பொம்மை கறைவதை போல் கரைந்து விடுவது இந்த தத்துவப்பிரிவின் சிகரமாகும்.
அடுத்ததாக உள்ள சுத்தவித்தை என்பது கிரியா சக்தியையும் பேதாபேத அனுபவித்தையும் ஒருமைபட்ட நிலையில் சித்தரித்து காட்டுவதாகும். சிவனுக்கும் ஜீவனுக்கும் உள்ள உண்மையான தொடர்பு சுத்த வித்தையில் தெளிவுபடுத்தபடுகிறது. நாம் மேலே சொன்ன ஐந்து வகையான தத்துவங்களை சுத்த தத்துவங்கள் என்றும், மீதமுள்ள 31 வகை தத்துவங்களை அசுத்த தத்துவங்கள் என்றும் காஷ்மீர் சைவம் கருதுகிறது. அத்தகைய அசுத்த தத்துவங்களின் படித்தரங்கள் என்னவென்பதை ஆராய்ந்து பார்த்தால் காஷ்மீர் சைவத்தின் முழுமையான வடிவம் நமக்கு கிடைத்துவிடும்.
சிவ அதிர்வினால் உருவான சக்தியின் ஒரு கூறு தான் “மாயை” எனப்படுவது உருவ வேறுபாடுகளுக்கும் பலவிதமான பொருட்களாக காட்சி தருவதற்கும் இறை சக்தியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தான் “மாயா ஆற்றல்” என்று சொல்லப் படுகிறது. “மாயை” என்பது ஒளியாகவும் இருக்கிறது. இருளாகவும் இருக்கிறது. உயிர்களை இறைவன் பால்பக்தி பூர்வமாக நகர்த்தி செல்வது ஒளி மிகுந்த மாயை யாகும். பந்த பாசக் கயிறுகளால் ஆத்மாக் களை இறுககட்டி ஜனன, மரண சாகரத்தை நோக்கி நகர்த்துவது இருள் மயமான மாயை யாகும். உருவமே யில்லாத பரம்பொருளில் இருந்து உருவமுடைய பொருட்கள் உருவாக காரணமாக இருப்பது “மாயை”. இது சித்துப் பொருளின் பௌதீக வடிவாகும். இத்தகைய மாயையில் இருந்து கலை, வித்தை, ராகம், காலம், நியதி ஆகிய ஐந்தும் தோன்றுவதாக காஷ்மீர சைவம் கருதுகிறது.
காஷ்மீர் சைவத்தின் மாயை என்பதில் முதலா வதாக சொல்லப்படும் “கலை” என்ற பதம் சாதாரணமாக இயல், இசை, நாடகத்தை சுட்டுவதல்ல. சைதன்யம் என்ற அனைத்தையும் படைக்கும் தன்மையின் சக்தியை குறைத்து செயல்தன்மைக்கு எல்லை வகுப்பதாகும். அதே போல் இரண்டாவதாக குறிக்கப்படும் “வித்தை” என்ற வார்த்தை வரம்பற்றதாகிய சிவப் பொருளின் முற்றும் உணரும் அறிவை எல்லை வகுத்து குறைவு செய்வதாகும். ராகம் என்ற மூன்றாவது சொல் சர்வ பூரணத்துவம் என்ற இயல்பினை நிறைவடையாமல் செய்து குறிப்பிட்ட பொருட்களின் மீது இச்சை கொள்ள செய்வதாகும். காலம் என்ற நான்காவது வார்த்தை நித்தியத்துவம் ஆகிய அழியாத் தன்மையை வரம்புக்கு உட்படுத்து வதாகும். நியதி என்ற ஐந்தாவது சொல் சுதந்திரதன்மையை எங்கும் வியாபித்து உள்ள உணர்வை கட்டுப் படுத்துவதாகும். இவ்வைந்து மாயா சக்தி ஜீவாத்மாக்களின் சிவத்தன்மையை கட்டுப்படுத்தும் உறைகள் அல்லது சட்டைகள் என்று காஷ்மீர் சைவம் சொல்கிறது. மேலும் இந்த ஐந்து தத்துவங்களால் உருவானதே புருஷன் என்றும் கருதுகிறது. கபிலமுனிவர் சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடும் புருஷன் வேறு காஷ்மீர் சைவம் சொல்லும் புருஷன் வேறு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இறைவனின் தன்மை, உயிர்களின் இயல்பு ஆகியவற்றை மிக விரிவாக பேசும் காஷ்மீர் சைவம் பிறவிப் பெருங்கடலை கடந்து இறைவனின் பாதார விந்தத்தில் முற்றிலுமாக ஐக்கியமாகும் முக்தி நிலையை பற்றியும் விரிவான சிந்தனையை தருகிறது. பொதுவாக இந்து மதத்தில் உள்ள சமய பிரிவுகளும் சரி, இந்தியாவில் தோன்றிய பௌத்தம், ஜைனம், உள்ளிட்ட வேறுமதங்களும் சரி மனிதன் முக்தி அடைவதற்கு “அவித்தை” என்ற அறியாமை தான் தடையாக இருப்பதாக கருதுகிறது. அதே போலவே காஷ்மீர் சைவத்திலும் குறைவுடையதும் எல்லைக்கு உட்பட்டதும் ஆகிய அறிவு தான் பந்தங்களுக்கு காரணம் என்பதை விளக்குகிறது. எனவே அறிவுச் செயல்களின் ஆற்றல்களை குறைத்து ஆன்மீக ஞானத்துடன் கூடிய அறிவோடு உணர்வு கலந்த பக்தி வைராக்யத்தை பெறுவதே வீடுபேறுக்கு பெரும் உதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.
தென்பகுதியில் உள்ள சைவசித்தாந்த கூற்றுப்படிதான் காஷ்மீர் சைவமும் அஞ்ஞானத்திற்கு ஆணவமலமே காரணம் என்று அடித்து கூறுகிறது. பிறப்பு முதல் ஆத்மாவுடன் கலந்து இருக்கும் ஆணவமலத்தை ஒழித்தால் தர்ன சிவ ஐக்கியம் ஏற்படும். ஆணவ மலம் என்பது மாயை, கர்மம், ஆணவம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு கலவையாகும். இது ஜீவன்களை அரிசியை மூடியிருக்கம் தவிடு, உமி, முளை, போன்று இறுகபற்றியுள்ளது. தீட்டப்பட்ட அரிசி மீண்டும் முளைப்பதில்லை.
அதேபோன்று ஞான வேள்வியல் வாட்டப்பட்ட ஜீவன் மீண்டும் பிறப்பதில்லை. மும்மலங்களை ஒழிப்பதே வாழ்க்கையின் நோக்கமாகும் என்று திருமந்திரம் சிவஞான சிந்தியா போன்ற நூல்கள் கூறுவது போலவே காஷ்மீர் சைவமும் கூறுகிறது. மாயை என்ற பெரும் மயக்கத்திலிருந்து விடுபட்டு நீரோடு நீரும் பாலோடு பாலும் கலப்பது போல் பரமாத்மாவோடு ஜீவாத்மாக்களும் கலக்கவேண்டும் என்கிறார் காஷ்மீர் சைவ ஞானி அபிநவகுப்தர். இவர் பரம்பொருளோடு இரண்டற கலந்துவிட்ட ஞானாத்மாக்களை பரமமுக்தர், அபரமுக்தர், ஜீவன்முக்தர் என்றெல்லாம் வகைப்படுத்தி கூறுகிறார். பரமமுக்தர், அபரமுக்தர் ஆகிய நிலையெல்லாம் மனிதன் உடலைவிடுத்து சூட்சம சரீரம் பெற்றபிறகு கிடைக்கும் வரமாகும்.
ஜீவன் முக்தர் என்பது உயிரோடு வாழுகின்ற போதே சிவ சிந்தனையில் முழுமை பெற்றவர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதமாகும். செத்த பிறகு கிடைக்கும் சிவலோகத்தை விட உயிரோடு இருக்கும் பொழுதே கிடைக்கும் ஜீவன் முக்தர் நிலைதான் வாழ்வின் சிகரத்தை தொட்டதற்கு சாட்சியாகும். அதனால் தான் வாழும் போதே சிவனை அடைய வழிசொல்கிறது காஷ்மீர் சைவம்.
மேலும் பயணிப்போம் நண்பர்களே, குருஜியின் அருளாசியுடன்.... !!!..அன்புடன் கே எம் தர்மா..
[im]http://external.ak.fbcdn.net/safe_image.php?d=AQC-BVVGT8ZB5hiu&w=90&h=90&url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-goD2QbUfkKY%2FTnRocZ-MENI%2FAAAAAAAABC4%2FicS_pC6CfB0%2Fs72-c%2Fclip_image002.gif[/im]
ReplyDelete