Search This Blog

Sep 17, 2011

வீரசைவம்: காவி கட்டினாலும் மூட்டை தூக்கி சாப்பிடு! இந்து மத வரலாற்று தொடர்


காவி கட்டினாலும் மூட்டை தூக்கி சாப்பிடு!

இந்து மத வரலாற்றில் சிந்தனை போக்கை ஆராய புகுந்த நாம் வேதங்களுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து நமது மத கோட்பாடு உருவானது எனவும் இன்று வரை பல்வேறுப்பட்ட மாறுபாடுகளை தனக்குள் கொண்டு வளர்ந்து வருவதையும் ஒரளவு ஆராய்ந்தோம்.  நமது வழிபாட்டு முறையில் உள்ள முக்கிய பிரிவான சைவ சமயத்தின் சித்தாந்தம் காஷ்மீர சைவம் போன்றவைகளையும் ஆராய்ந்தோம்.  இனி சிவசிந்தனை மரபில் மிக குறிப்பிடதக்க ஒன்றாக இருக்கும் வீரசைவம் என்ற பிரிவை ஆராய்வோம்.

சைவம் என்றால் ஒளி, சைவம் என்றால் சிவம், சைவம் என்றால் சாந்தி என்பது தான் நமக்கு தெரியும்.  ஆனால் இங்கு வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சண்டைகார மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.  உண்மையில் இங்கு பயன்படுத்தப்படும் வீர என்ற வார்த்தைக்கும் சண்டைக்கும் சம்பந்தமே இல்லை.  அப்படியென்றால் வீரசைவம் என்பது என்ன பொருளுடைய வார்த்தை என நீங்கள் சிந்திக்கலாம். வீரசைவ மத பிரிவை சார்ந்த எனது நண்பர் ஒருவர் இதற்கு விளக்கம் தந்தார்.  சிவனை தவிர வேறு எவனையும் நாங்கள் வணங்க மாட்டோம். சிவாகமங்கள் தவிர வேறு எதையும் நாங்கள் படிக்க மாட்டோம்.  சிவனடியாரை தவிர வேறு எவரையும் நாங்கள் அடியார் என ஏற்று கொள்ள மாட்டோம்.  இதில் நாங்கள் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி எங்கள் இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றிவிட்டதினால் தான் நாங்கள் பின்பற்றும் சமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்தது என்றார்.

அவரை பார்ப்பதற்கு எனக்கு பரிதாபமாக இருந்தது, சைவநெறியின் மீது அவர் கொண்ட பற்றுதல் பாராட்டுதலுக்குரியது என்றாலும் அவர் பற்றுதலின் உள்ளீடாக மறைந்துகிடப்பது தனது மதம் தான் உயர்ந்தது என்ற ஆணவம் என்பதை அறியும் போது கோபம் ஏற்படாமல் பரிதாபம் வருவதற்கு காரணம் உண்டு. கிணற்றுக்குள்ளேயே வாழ்ந்து பழக்கப்பட்ட தவளை கிணற்றை விட சமுத்திரம் பெரியதானது என்று சொன்னால் பித்தலாட்டமாக பேசாதே என்று சண்டைக்கு வருமாம். அதே போலத்தான் பல மனிதர்களும் இருக்கிறார்கள் தாங்கள் பார்த்த காட்சி மட்டுமே நிஜமானது.  தாங்கள் கேட்ட சப்தம் மட்டுமே உண்மையானது.  தான் நடக்கும் வழிமட்டுமே நேர்மையானது என்று அடம் பிடிக்கிறார்கள். இப்படிப்பட்ட மனோபாவம் கொண்டவர்களால் மட்டும் தான் பல பிரச்சனைகள் தலை தூக்குகின்றன. உண்மையில் மகாவீரர் என்ற பெயருக்கு போர்க்களம் என்பது எப்படி சம்பந்தமே இல்லையோ அப்படித்தான் வீர சைவம் என்பதற்கு மற்ற மதத்தை மறுத்தல் என்பது சம்பந்தம் இல்லை.  வீரசைவம் என்ற வார்த்தைக்கும் கடவுளான சிவனையும் மற்ற ஜீவன்களையும் சமமாக பாவித்தல் என்றே சைவ ஆகமங்களும் சித்தாந்த சிகாமணி என்ற நூலும் பொருள் தருகிறது. 

பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள். இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சைவமார்க்கம் எளிமையாக எடுத்து சொல்வதினால் வீர சைவம் என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. சிவ வழிபாடு என்பது அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்தாலும் சைவசமய தத்துவங்கள் பிற்காலத்திலேயே முழுவடிவம் பெற்றது. அதன் அடிப்படையில் வீர சைவ நெறியும் உருவானது என்றாலும் அது எப்போது முதல் மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வந்தது என்பதை சொல்ல சரியான காலகெடு இது வரை யாருக்கும் தெரியாது. அதே போலவே இந்த நெறியை இன்னார்தான் உருவாக்கினார் என்று திட்டவட்டமாக கூற இயலாது. இருந்தாலும் ஞானி பசவண்ணரே இதை தோற்றுவித்தார் என்று பலரும் நம்புகிறார்கள். 

பசவண்ணருக்கு காலத்தால் முற்பட்ட யோகி ராமையா என்பவர் இதை உருவாக்கினார் எனசொல்வாரும் உண்டு. இதற்கு ஆதாரமாக கதம்ப நாட்டு அரசன் காமதேவன் தார்வார் பகுதியை சார்ந்த சோமேஸ்வரன் கோவிலில் உள்ள கல்வெட்டு சுட்டிகாட்டப்படுகிறது. இந்த கல்வெட்டில் யோகி ராமையா ஜைன மத துறவிகளோடு வாதப்போர் செய்து தோற்று போனதாகவும் அதனால் தன் தலையை தானே துண்டித்து கொண்டதாகவும் ஆனால் சிவபெருமான் அவருக்கு மீண்டும் உயிர் தந்ததாகவும் இதனை அறிந்த பிஜ்ஜலன் என்ற அரசன் பாராட்டி விருந்தளித்து பல கிராமங்களை நிவந்தமாக அளித்தாகவும் எழுதப்பட்டு இருக்கிறது.

மேலும் பசவபுராணம் என்ற நூல் சிவபெருமானின் அகோரம், தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம் , ஈசானம் ஆகிய ஐந்து முகங்களில் இருந்து ஏகோராமர் பண்டித ராத்லாரர், இரேவனர், முரலர், விஸ்வராத்யாயர் ஆகிய ஐந்து ஞானி பசவண்ணருக்கு முற்பட்டே தோன்றி வீர சைவ நெறி இருந்து வருகிறது என்பதை வரலாற்று நோக்கிலும் புராண அடிப்படையிலும் நிலை நிறுத்தப் படுகிறது. ஆனாலும் கூட பசவண்ணரே வீர சைவ நெறிக்கு முழுவடிவம் கொடுத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை, பசவண்ணர் பிராமணராக  பிறந்தாலும் கூட பிராமணர்களுக்கான  வைதீக நெறிகள் எவற்றையும் ஏற்று கொண்டது இல்லை முழுக்க முழுக்க சிவ நெறிக்கு உட்பட்ட வீரசைவ நெறியையே தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். வீர சைவ நெறியை பின்பற்றுபவர்களை லிங்காயதர் என்று அழைக்கிறார்கள் 

அதாவது இதற்கு லிங்க உடம்பினர் என்று பொருள் சொல்லலாம் தனது உடலின் ஒரு பகுதியாக சிவலிங்கத்தை இவர்கள் எப்போதும் வைத்திருப்பதினால் அதாவது இவர்களின் மேனி சிவத்திரு மேனியை எப்போதும் தாங்குவதினால் லிங்காயதர் என பெயர் பெற்றனர் எனலாம். வீர சைவர்களுக்கு லிங்காசாரம் என்ற லிங்க ஒழுக்கம், சாதசாரம் என்ற தன்னிலை ஒழுக்கம் சிவாசாரம் என்ற சிவ ஒழுக்கம் விருத்யா சாரம் என்ற பணி ஒழுக்கம், கானாசாரம் என்ற சமுக ஒழுக்கம் ஆகிய ஐந்து வகை ஒழுக்கங்கள் வலியுறுத்தப்படுகிறது.

முதலாவது ஒழுக்கமான லிங்க ஒழுக்கம் என்னவென்று பார்ப்போம். வீரசைவன் பிறந்து சில மணி நேரங்களிலேயே அவன் கழுத்தில் சிவலிங்கம் அணிவிக்கப்படுகிறது. அது அவன் சாவு வரையிலும் கூடவே வரும். சிவலிங்கத்தை சுமந்து செல்லும் அவன் ஜாதிவேறுபாடு ஏற்றதாழ்வு காணுதல் தீண்டாமை, தேவையற்ற சடங்குகள் போன்றவற்றை எப்போதுமே சிந்திக்க கூடாது. காரணம் சகல உயிர்களும் சிவனின் அம்சம் இருப்பதினால் அதை பேதப்படுத்தி காணுவது மகாபாவமாகும். எல்லா உயிரையும் ஒன்று என கருதி சிவனோடு ஐக்கியமாவதற்கு மனிதனை உந்தி தள்ளுவதே லிங்க ஒழுக்க மாகும். வீர சைவன் பிறர் உழைப்பில் எப்போதுமே வாழ கூடாது. இது உயர்ந்த தொழில் அது தாழ்ந்த தொழில் என வேலையில் பாகுபாடு காணகூடாது. தன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் தானும் வாழ்ந்து, சமுதாயத்திற்கும் கொடுக்க வேண்டும். என்னிடம் தான் ஏராளமான சொத்து சுகம் இருக்கிறதே செல்வம் கொட்டி கிடக்கிறதே நான் எதற்கு உழைக்க வேண்டும் என்று உட்கார்ந்து சாப்பிடுபவன் உணவை அல்ல பாவத்தையே சாப்பிடுகிறான். இல்லற வாழ்கை வேண்டாம் என்று துறவறத்தை மேற்கொண்டவனும் கூட உழைக்காமல் உண்ணகூடாது. இது வீர சைவம் இரண்டாவது வலியுறுத்தும் சதா சாரம் என்ற தன்னிலை ஒழுக்கமாகும். 

முன்றாவதாக உள்ள சிவ ஒழுக்கம் சிவநெறி ஒன்று மட்டும் தான் உயிர்களுக்கு வரும் துன்பத்தை துடைக்க வல்லது. சிவநெறியில் நிற்பவன் தான் நாடும் ஊரும் நலம் பெற தனது இன்னுயிரை தியாகம் செய்ய துணிவான். பிற உயிர்களை துன்பம் தொடராமல் பாதுகாப்பதே இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். சின்னசிறிய புழுதானே அது அதை நசுக்கினால் அப்படியென்ன பாவம் வந்துவிடப் போகிறது என நசுக்க துணிந்தால் நீ நசுக்குவது புழுவை அல்ல சிவனை என்பதை உணர்ந்து கொள். இவ்வொழுக்கம் எல்லா மனிதருக்கும் கட்டாயம் தேவையென வீரசைவம் வலியுறுத்துகிறது அந்த சமயத்தில் ஆழமாக புதைந்து கிடக்கும் சமுதாய நோக்கை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.

நான்காவது ஒழுக்கமான பணி ஒழுக்கம் என்பது ஒரு மனிதனின் ஆணவத்தை ஒழித்து கட்டுவதை பற்றி பேசுகிறது. நான் உயர்ந்தவன் என்று ஒருவன் நினைத்து கொண்டால் அது தவறல்ல நான் மட்டுமே உயர்ந்தவன் என்று நினைப்பது தவறு மட்டுமல்ல பாவமும் ஆகும். அதே போல என் அண்டைய வீட்டுகாரன் தீயவனாக இருந்தால் எனக்கென்ன என்று போவதும் ஒரு வித ஆணவமாகும் அவன் அடித்தாலும், அவமானபடுத்தினாலும் அவனிடம் உள்ள தீமையை அகற்ற பாடுபடுவது எனது கடமையாகும் என்று செயல்படுவது நமது ஆணவத்தை அறுக்கும் வழியாகும். மற்ற ஜீவன்களுக்கு பணியாற்றுவதற்காகவே நான் பிறந்து இருக்கிறேன் என நம்பி செயல்படுவதே வீர சைவனின் லட்சணம். 

ஐந்தாவது ஒழுக்கமான கணாசாரம் என்ற சமூக ஒழுக்கம் சமூகத்தின் கூட்டுதன்மையை பரஸ்பரம் விட்டு கொடுத்தலை, பொதுநோக்கை வலியுறுத்துகிறது. நல்லோரை பாதுகாப்பதும், தீயோரை  அறவழியில் திருப்புவதும் மிக முக்கியமான காரியமாகும் இந்த காரியம் கை கூடி வர தனி மனித எத்தனிப்பு கூடவே சமூக எத்தனிப்பும் இருந்தால் மிக விரைவில் ஒட்டுமொத்த உலகத்தில் சிவநெறி மட்டுமே தழைத்து ஓங்கி நிற்கும் இதற்காக ஒவ்வொரு வீர சைவனும் உழைத்து கொண்டு இருக்க வேண்டுமென இந்து ஐந்தாவது ஒழுக்கம் வலியுறுத்துகிறது.

இது தவிர குரு, லிங்கம், சங்கமம் திருவடி துலக்கல், திருவமுது, திருநீறு, ருத்ராட்சம் மந்திரம் என எட்டுவகையான காப்பு முறைகளும் வீர சைவத்தின் சொல்லப்படுகிறது.  வீர சைவத்தில் ஐந்துவித ஒழுக்கம் எட்டுவித பாதுகாப்பு இருப்பது போல ஆறுவகைபயிற்சி இருக்கிறது. இந்த ஆறுவகை பயிற்சிகளை சடுதளம் என்ற பரிபாஷையில் வீரசைவ ஞானிகள் அழைக்கிறார்கள். 
பொதுவாக இவர்கள் சிவலிங்கத்தை கழுத்தில் அணிந்து இருந்தாலும் அதற்கென்று உரிய தனிப்பெட்டியில் வைத்திருந்தாலும் தினசரி வழிபாடு செய்ய வேண்டும். இவர்கள் வைத்திருக்கும் சிவ லிங்கத்திற்கு இஷ்டலிங்கம் என்று பெயர். இந்த லிங்கத்தை அணிந்தவர் சிறந்த ஒழுக்கசீலராக இருக்க வேண்டும்.

ஒழுக்கம் என்பது திடீரென ஒரு மனிதரிடம் உருவாவதில்லை. தொடர்ச்சியான பயிற்சியே ஒருவனை ஒழுக்கமுடையவனாக மாற்றும். 

அப்படி மாற்றத்திற்கு அழைத்து செல்வதுதான் சடுதளம் என்ற பயிற்சிகளாகும் தினசரி லிங்க பூஜை செய்வதினால் அன்றாட வாழ்க்கை தூய்மையாகிறது. நான் அப்பழக்கற்ற வாழ்கை வாழ்பவன் என்ற எண்ணமே ஒருவனுக்கு கம்பீரத்தை கொடுக்கும். அந்த கம்பீரம் பக்தி என்ற உயிர்உணர்வை பெருக்கும்.
மேலும் பயணிப்போம் வீர சைவைத்தை தொடர்ந்து, குருஜியின் அருளாசியுடன்.
அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!