காஷ்மீர் மாநிலத்தின் நிஜ மதம்(1)
இந்து மத வரலாற்று தொடர்.
குருஜியின் அருளாசியுடன்....
இந்து மதத்தின் உட்பிரிவுகளில் சைவ சமயம் தொன்மையானது மட்டுமல்ல ஆழமான பல கருத்துக் களையும் உள்ளடக்கியது என்பதை சென்ற அத்தியாயத்தில் சிறிது பார்த்தோம் அப்படிப் பார்க்கையில் சைவத்தில் காஷ்மீர் சைவம் என்று ஒரு பிரிவு இருப்பதையும் அறிந்து கொண்டோம்.
இமயச்சாரலில் தழைத்தோங்கி இருந்த காஷ்மீர சைவத்தின் முழுத் தன்மையையும் தென்பகுதி மக்களாகிய நாம் தெளிவாக அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு காரணம் வடக்கு தெற்கு வேறுபாடா சமயாச்சாரியார்களின் உபதேசத்தில் உள்ள குறைபாடா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் அக்குறைபாடை முடிந்தவரை களைவது நமது கடமையாகும்.
சரித்திர ஆய்வாளர்களால் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் மகாகவி காளிதாஸ் தனது ரகுவம்ச காவியத்தில் காஷ்மீர் சந்தனத்தையும் தாமிரபரணி முத்துக்களையும் சிந்து நதியோர அழகிய மணல் திட்டுக்களையும் இமயமலையில் வளர்ந்து வான் தொட முயற்சிக்கும் தேவதாரு மரங்களையும் இன்னும் பல பாரத நாட்டின் இயற்கை எழிலையும் கவிச்சுவை சொட்ட சொட்ட பாடி உள்ளார். இவரும் காஷ்மீர் பகுதியை பிறப்பிடமாக கொண்டவர் பல காஷ்மீர் கவிஞர்கள் வடமொழியில் அறிவுச் செறிவும் கற்பனை வளமும் காவிய நளினமும் கொண்ட பல இலக்கியங்கள் படைத்துள்ளார்கள் இவர்களில் “பௌமகன்” என்ற கவிஞர் எழுதிய “ராவாணாச்சுனீயம்” என்ற நூலும் “பில்ஹனன்” எழுதிய விக்ரமாங்க தேவ சதம் எனும் காப்பியமும் “ஆனந்தவர்த்தனன்” எழுதிய “துணியாலோகம்” எனும் காவியமும் மிகவும் புகழ் பெற்றது ஆகும்.
இப்படி இலக்கியத்தில் ஏற்றம் மிக பெற்றிருந்த காஷ்மீர் சைவ நெறியிலும் தழைத்தோங்கி இருந்தது. இன்று துப்பாக்கிகளின் ஓசை கேட்கும் மலை முகடுகளிலும் சரிவுகளிலும் ஒரு காலத்தில் சிவ நாமமே எங்கும் ஒலித்து அந்த ஒலியில் காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் வட பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்தனர். காலம் செய்த கோலம் சிவபெருமாளின் தவத்தை வேறுவிதமான கோஷங்கள் கலைத்தததினால் தான் இன்று பீரங்கிச் சத்தங்கள் மக்களின் காதுகளை மட்டுமல்ல இதயத்தையும் பிளக்கிறதோ என்னவோ.
காஷ்மீர் சைவம் என்பது இந்தியாவில் உள்ள மற்ற சைவப்பிரிவுகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது என்று சொல்ல இயலாது என்றாலும் கூட அதில் பல சிறப்பு அம்சங்கள் மற்றவற்றை விட தனித்துவம் பெற்று மிளிர்கிறது என்பதை மறுக்க இயலாது. கிறிஸ்துவ சகாப்தத்தின் தொடக்கம் முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை காஷ்மீர் மற்றும் அதை ஒட்டி உள்ள காந்தாரம் தற்போதைய ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் மஹாயான புத்த சமயமே ஆட்சியில் இருந்தது எனலாம் அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வால் சிவவழிபாட்டின் ராஜ தானியாக காஷ்மீரம் விளங்கியது.
தென்னாட்டு சைவ நெறிக்கு ஆகமங்கள் எப்படி மூல நூல்களாக இருக்கிறதோ அதே போன்றுதான் காஷ்மீர் சைவமும் தனது ஆதார நூல்களாக ஆகமங்கள் கொண்டுள்ளது. “பகீகண்டருத்ரன்” என்ற சிவபெருமான் ஆகமங்களை துர்வாசகர்க்கும் அம்முனிவர் தனது புத்திரர்களான த்யம்பகர், அமர்தகர், ஸ்ரீகண்டர் ஆகிய முனி சிரேஷ்டர்களுக்கு உபதேசம் செய்ததாக மரபுவழியில் நம்பப்படுகிறது. சுவச்சந்தம், மிருகேந்திரம், மாதங்க நேத்திரம், சுயாம்புவம், மாலினி விஜயம், ருத்ரயாமலம், விஞ்ஞான பைரவம் ஆகிய ஆகமங்கள் இச்சைவ நெறிக்கு ஊற்றுக்கண்களாக விளங்குகிறது.
இவை மட்டுமல்ல ஆகமங்கள் அனைத்திலும் உள்ள கருத்துக்களை தனக்குள் கொண்ட “வசுபுத்தர்” என்ற மஹா ஞானி உபதேசித்த “சிவசூத்திரம்” என்ற நூலும் காஷ்மீர் சைவ கோபுரத்தின் மணி விளக்காக திகழ்கிறது. வசுபுத்தர் என்ற ஞான புருஷன் திருமூலர்க்கு 300 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறார். வரலாற்று முறைப்படியும் ஆன்மிக சம்பிரதாயத்தின் படியும் வசுபுத்தரே காஷ்மீர் சைவ நெறியின் முதல் ஆசிரியர் என்று கருதப்படுகிறார். இவர் சிவசூத்திரம் மட்டுமல்லாது ஸ்பண்டகாகை என்ற வேறு ஒரு நூலும் எழுதி உள்ளார் இதற்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள். அந்த உரைகளில் “ராமசுந்தரர்” என்பவரை விவரித்து உரையும் “உள்பல வைணவன்” “சேமராஜன்” “ஸ்பண்டசந்தகம்” “ஸ்பண்டநிர்ணயம்” ஆகிய விளக்க உரைகள் குறிப்பிடத்தக்கது ஆகும்.
காஷ்மீர் சைவத்திற்கு திகாசாஸ்திரம், திகாசாசனம் என்று வேறு இரண்டு பெயர்களும் உண்டு. இது மட்டுமல்லாது ரகசிய சம்பிரதாயம் திரயம்பக சம்பராதயம் என்ற பெயர்களும் இருந்தாலும் கூட பல நேரங்களில் இந்த மதம் திகா என்றே அழைக்கப்படுகிறது. திகா என்ற சொல் சிவன், சக்தி, அணு ஆகிய மூன்றோ பதி, பசு, பாசம் ஆகிய வேறு மூன்றோ அல்லது சிவன், சக்தி, நரன் ஆகிய மூன்றோ குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் வேறு ஒரு சாரார் பேதம், அபேதம், பேதா பேதம் ஆகிய மூன்றை குறிப்பதே திகா என்ற வார்த்தையின் உண்மைப்பொருள் என்கிறார்கள்.
இது தவிர ஸ்பண்ட்ட நெறி, பிரதிய பிஞ்ஞா நெறி என்று இரு பெரும் உட்பிரிவும் காஷ்மீர் சைவத்தில் உள்ளது ஸ்பண்ட என்ற சொல் சிவபெருமானின் செயல்களால் ஏற்படும் அதிர்வை குறிப்பதாக சொல்கிறார்கள் வசுபுத்தர் இந்த சொல்லிற்கு மனோ தத்துவ அடிப்படையில் விளக்கம் தருகிறார் கோபம் இன்பம் ஆகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடாக ஏற்படும் ஆற்றல் துடிப்பு அதிர்வு ஆகியவைகளே ஸ்பண்ட்ட என்ற வார்த்தையில் உள்ள கருத்துக்களாகும் என அவர் கூறுவது கவனிக்கத் தக்கதாகும்.
மேலும் மூலாதாரத்தில் அடங்கி இருக்கும் குண்டலினி சக்தியை ஸ்பண்ட்ட என்ற சொல் சுட்டுவதாகவும் அவரே கூறுகிறார். யோக மார்க்கங்களான தியானம், ப்ரணாயமம் ஆகிய கருவிகள் துணையாக கொண்டு ஸ்வாதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை முதலிய ஆதாரங்கள் வழியாக ஸ்பண்ட்ட என்ற குண்டலினியை தட்டி எழுப்பி பிரம்ம ரத்தினமாகிய சகஸ்ரத்தில் இணைத்ததை இச்சொல் என ஆழமான முறையில் குறிப்பிடுகிறார் இப்படி குண்டலினி சக்தியை எழுப்பி சிவத்தை அடைவதே ஸ்பண்ட்ட கோட்பாட்டின் முக்கியமான குறிக்கோளாகும். தமிழகத்தில் உள்ள சித்தர்களின் சித்தாந்தமும் இதே கோட்பாட்டை குறிப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இறை ஐக்கிய நெறி என்பது நமது நாட்டைப் பொருத்தவரை பலவிதமான வார்த்தைகளில் சொல்லப்பட்டு இருந்தாலும் அடிப்படையில் எல்லாமே ஒன்று தான் என்பது நமக்கு நன்கு விளங்குகிறது.
ஸ்பண்ட்ட சித்தாந்தத்தின்படி சர்வ சுதந்திரம் உடைய பதியாகிய சிவன் தனது சுய சங்கல்பத்தால் தன்னிலிருந்து உலகினை உருவாக்கி தன் சார்பில் வேறாகத் தோன்றும்படி படைக்கிறான். அதாவது கண்ணாடியில் முகங்கள் வீடுகள் மரங்கள் ஆகியவைகள் தெரிந்தாலும் கண்ணாடி அவற்றோடு எந்த உறவும் ஒட்டுதலும் இல்லாமல் தனித்து இருக்கிறதோ அதே போன்று சிவன் தனக்குள் எல்லாவற்றையும் கொண்டு இருந்தாலும் அவற்றிலிருந்து எல்லாம் எந்த பாதிப்பையும் அடையாமல் தனித்தன்மை யோடு விளங்குகிறான். அதே நேரம் உயிர்கள் என்பது முழுவதும் சிவத் தன்மை உடையது ஆகும் ஆணவம், மாயை, மாயேயம், கர்மம் ஆகிய கட்டுக்களால் தனது சுய சிவத்தன்மையை உணராமல் அறியாமையில் முழ்கிக்கிடக்கின்றன.
அறியாமை என்பது உயிர்களிடத்தில் இல்லாமல் முற்றிலும் அழிந்துவிட்டால் ஜீவ ஈசுவர ஐக்கியம் ஏற்பட்டு விடும் இந்த ஐக்கியம் ஏற்பட ஜீவன்கள் ஒவ்வொன்றும் தியான வழியாகவும், யோகவழியாகவும் அயராது பாடுபடவேண்டும் ஆழ்ந்த தியானத்தாலும் கடினமான யோகாப்பியாசத்தாலும் உயிர்களை பற்றி உள்ள மும்மல கட்டுக்கள் உடைந்து பரிபூரண ஞானம் கைவரப்பெற்று பரமாத்மாவும் தானும் ஒன்றே என்ற அத்வைத உணர்ச்சி ஏற்பட்டு முக்திக்கு வித்திடும் என்பது ஸ்பண்ட்ட நெறியின் மையக் கோட்பாடாகும்.
காஷ்மீர் சைவத்தின் இன்னொரு பிரிவான “ப்ரதிய பிஞ்ஞான” என்ற சித்தாந்தத்தை பார்ப்போம். ப்ரதியபிஞ்ஞான என்ற வார்த்தைக்கு தமிழில் நேரான பொருள் கொண்டால் அறிந்து கொள்ளுதல் நினைவு கூறுதல் என்று பொருள் வரும். வசுகுப்தரின் நேரடிச்சீடரான சோமானந்தர் என்பவர் எழுதிய “சிவதிருஷ்டி” என்ற நூலில் இச்சித்தாந்தத்தின் கொள்கைகள் விரிவாக கூறப்பட்டு உள்ளது.
சோமானந்தர் சொல்கிறார் சிவன்.ஜெகத், நான் ஆகிய மூன்றும் ஒன்றே தான் வேறு வேறானது அல்ல என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டவன் பந்த பாசக்கட்டுகளில் இருந்து முழுமையாக விடுதலை அடைகிறான் என்ற அவரின் கருத்து ஆன்மீக வாழ்வின் இறுதி வடிவாகும் என்பதை மாற்றுக் கருத்து கிடையாது. சிவனும் தானும் ஒன்றென உணர்ந்த பிறகு அரிந்து கொள்வதற்கு உலகில் வேறு என்ன இருக்கிறது. முதலில் நானும் சிவனும் ஒன்றுதான் என்பதை நம்புவதற்கு என்ன வழி இருக்கிறது அந்த வழி தெரிந்தால் தானே சிவனை அறிய முயற்சி செய்யலாம். என்ற கேள்விகளுக்கு எல்லாம் ப்ரதிபிஞ்ஞா நெறி விளக்கமான விடைத்தருகிறது.
ஒரு இளம் பெண் இருக்கிறாள் அவள் தனது தோழியின் மூலமாக ஒரு அழகிய வாலிபனைப் பற்றி அறிகிறாள். அந்த இளைஞனின் சுருள் சுருளான கேசம் மூன்றாம் பிறை போன்ற நெற்றி மங்கையரின் மனதை துளைத்து எடுக்கும் வீரத்திருப் பார்வை முருக்கி விட்ட மீசை தினவெடுத்து நிற்கும் கம்பீரமான தோள்கள் அகன்று விரிந்து திண்மையுடன் திகழும் மார்பு இன்னும் அவனின் பல்வேறு விதமான சௌந்தர்யங்களைப் பற்றியும் அறிவு விசாலத்தைப் பற்றியும் அறிந்து கண்ணால் காணாமலேயே அவனிடம் காதல் வசப்படுகிறாள்.
பார்க்காமலே பிறந்த பாசம் முழுமையான பரவசத்தை தருமா? தராது அல்லவா வார்த்தைகளில் வர்ணனை செய்யப்பட்ட வாலிபனை நேரில் கண்டு மனமார பேசி நெஞ்சார தழுவி கொண்டால் தானே உடல் இன்பம் என்பது முழுமை பெறும் அதே போன்று தான் உயிர்களும் தன்னுள் தலைவனாக இருக்கின்ற சிவபெருமானை கண்ணாரக் கண்டு வாயாரப்பாடி பரவி மெய்யார திருவடிகளில் வீழ்ந்து இன்புற்றால் தானே வாழ்க்கை முழுமை அடையும்.
காதல் செய்தி சொல்ல தோழி தேவை காலகாலனாக நிற்கும் நீலகண்டனின் அருள் விசாலத்தைச் சொல்ல குரு மொழி தேவை குருமொழியை கேட்டு அதை அனுபவப்படுத்தி பார்பவன் எவனோ அவனே பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து ஜீவன் முக்தனாகுகிறான். இப்படி ஜீவன் முக்தன் ஆவதற்கு ஒவ்வொரு மனிதனும் சதா சர்வகாலமும் சிந்தையை சிவன் பால்வைத்து செயலையும் சிவச்செயலாகவே செய்யப்பட வேண்டுமென்று வற்புறுத்திகிறது காஷ்மீர் சைவத்தின் ப்ரதியாஞ்ஞா நெறி.
இதைப்பற்றி அபிநவபுத்தர் என்ற ஞானி தரும் விளக்கத்தை பார்ப்போம். தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வரும் கதைகளினாலும் அருள் அமுதை தாரை தாரையாக பொழியும் கவிதைகளாலும் அறிவை விசாலப்படுத்தும் தத்துவக் கோட்பாடுகளினாலும் தலைவனான சிவபெருமானின் சர்வவல்லமை அறியப்படுகிறது. அப்படி அறிந்தவற்றை தைல தாரையாக சிந்தித்துக் கொண்டு தியானத்தில் ஈடுபடும் போது அருட்பெரும் ஜோதியான சிவதரிசனம் கிடைக்கப்பெற்று ஒவ்வொரு ஜீவனும் பசுபதியின் வடிவங்களே இல்லை இல்லை எல்லாமே பசுபதியே தான் என்ற உண்மை ஞானம் பிறக்கிறது இதை காஷ்மீர் சைவம் இன்னும் பலப்பல உதாராணங்களைக் காட்டி நம்மை சர்வேஸ்ரனிடம் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது.
அண்ட சராசரத்தின் துவக்க நிலையும் முடிவு நிலையும் சிவம் என்று கருதப்படுகிறது. அப்படி ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் இயல்புகளை அனுத்தரம், சித்து, சுவாதந்திரியம், சம்வித்து, சைதன்யம், என்று பல அடைமொழி கொடுத்து சிறப்பிக்கிறது. காஷ்மீர் சைவம் அனுத்தரம் என்ற வார்த்தைக்கு தனக்கு அப்பால் எதுவும் இல்லை என்று பொருள் சொல்லலாம். அதேபோல காலம், இடம், காரண காரியம் எல்லைகளை கடந்த தூய ஒளி பொருந்திய தன்மை இவற்றை சித்து என்ற வார்த்தை குறிக்கிறது. தனது விருப்பப்படி செயல்படுவதற்கு எந்த தடைகளும் இல்லாமல் வரம்பற்ற விடுதலைத் தன்மையை இயல்பிலேயே கொண்டதை சுவாதந்தரியம் என்ற சொல் குறிக்கிறது.
தனக்கு இயல்பாகவே அமைந்த பேரொளி தன்மை என்கின்ற சுயபிரகாசத்தை குறிப்பதோடு அல்லாமல் விகல்பங்கள் அற்ற வேறுபாடுகள் இல்லாத ஞானத்தின் வடிவை சம்வித்து என்பது காட்டுகிறது. சைதன்யம் என்பது ஆக்கும் சக்தி அழிக்கும் சக்தி, மறைக்கும் சக்தி, காக்கும் சக்தி, அருளும் சக்தி ஆகிய ஐவகைத் தன்மைகளையும் தனக்குள் கொண்ட சிவபெருமானின் கருணாவிலாசத்தை சுட்டிக் காட்டுகிறது. இப்படி இறைவனின் தன்மைகளை முற்றும் உணர்ந்து பட்டியலிட்டு சொல்வதிலிருந்து காஷ்மீர் சைவத்தின் மெய்ப்பொருள் தத்துவ விளக்கம் ஆரம்பமாகிறது.
மேலும் பயணிப்போம் நட்புக்களே...அன்புடன் கே எம் தர்மா...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!